
.இந்த வருடத்திற்கான நவராத்திரி கோலாஹலம் தொடங்கிவிட்டது. வருகின்ற ஒன்பது நாட்களிலும், தனது பல்வேறு ரூபங்களில் சர்வ மங்களங்களையும் அருள்வதற்காகவே ஆதிபராசக்தி வருகைதரும் பொன்னான தருணம் இது.
அம்பிகையைப் போற்றி ஆதிசங்கர பகவத்பாதர் துதிசெய்த சிரேஷ்டமான பவானி அஷ்டகத்தை இப்புனிதமான நாட்களில் சிந்திக்க இருக்கிறோம்.
அஷ்டகம் என்றால் எட்டு செய்யுள்கள் கொண்டது என்ற பொருள். மொத்தமும் எட்டேயெட்டு பாடல்களில் துதிசெய்து அன்னையின் அருளைப்பெறும் வகையில், பரம கருணையோடு பகவத்பாதர் நமக்காக அருளிச் செய்ததே இந்த பவான்யாஷ்டகம்.
அடியேனுக்கு தெரிந்தவரையில், இந்த துதிக்கு எளிய விளக்கவுரையை உரைத்திட அந்த அன்னையைப் பணிந்து துவக்குகிறேன்.
பவானி அஷ்டகம்- ஒரு அறிமுகம்
பவானி என்னும் நாமத்திற்கு முதலில் பொருளை அறிவோம்.
‘பவா’ என்பதற்கு பலவாக அர்த்தங்கள் உண்டு.
பவா எனும் திருநாமம் பரமனைக் குறிக்கும் ஆண்பால் பெயராகும். அவருடைய பத்தினி ஆதலால் அம்பிகைக்கும் பவானி என்ற பெயர்.
இந்த உலகிற்கும் உயிரினங்களுக்கும் ஆதாரமாக விளங்குவது நீர் அல்லவா?
அந்த நீருக்கு பேரும் ‘பவ’ தான்.
ஆதார சக்தியாக விளங்கும் பராசக்திக்கு பவானி என்பது சாலப் பொருத்தமான பெயர் அல்லவா?
பவா என்பதற்கு காமம் என்ற அர்த்தமும் உண்டு. இதனால், பவா என்ற பெயர் மன்மதனையும் குறிக்கும். காமம் எனும் சம்சார பந்தத்திற்கான
ஈர்ப்பைத் தருபவள் அன்னை. இந்தப் பூவுலகில் சிருஷ்டி தடையற நடைபெறுவதற்கு அருள்பவள் பவானி.
பவானி உயிர் அளிப்பவள். ஜீவன்களுக்கு ஆதாரமாக விளங்கும் அன்னை பவானி. அவளே ஆதிசக்தி.
பவம் என்றாலோ இந்த சம்சாரம் எனும் அலை ஓயாத கடலையும் குறிக்கும். என்றும் ஓயாத பவாசாகரத்தினின்று நம்மைப் கரை சேர்ப்பவள் பவானி .
பிறந்தும் மறைந்தும் மீண்டும்மீண்டும் பிறவி எடுக்கும் வாதையை நீக்குபவள் அன்னை. ஆதலால் அவள் பவானி.
முன்பே இங்கு பவானி என்றால் ‘உயிர் அளிப்பவள்’ என்று பார்த்தோம்.
சக்தி இல்லையேல் சிவமில்லை. சிவனை உள்ளிருந்து இயக்கும் உயிர்ச் சக்தியாகவும்;
மன்மதன் பரமனின் நெற்றிக்கண்ணால் எரிபட்டு சாம்பலானபோது அவனுக்கு உயிர் கொடுத்து அனங்கனாக்கியபடியாலும் ;
இந்த உலகின் ஜீவராசிகளுக்கு எல்லாம் உயிர் கொடுத்து வாழ்விப்பதாலும்
உயிர் ஈயும் உமையவளை பவானி என்று அழைத்தல் சாலப்பொருத்தம் அல்லவா?
பவானித்துவம் என்கின்ற ஒரு சொல்லாடலும் உண்டு .
இதற்கு ஒரு தொன்மமான கதையைக் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். அம்பிகையின் பரம பக்தர் ஒருவர், அம்பிகையைத்துதிக்கும் போது
‘பவானி துவம் தாஸே மையி’ (பவானி தாயே! உன் தாசன் நான்) என்று சொல்ல வந்தாராம்.
‘பவானி’ ‘த்வம்’ என்ற பதங்களை அவசரத்தில் சேர்த்தே ‘பவானித்துவம்’ என்று சொல்லத் தொடங்கினாராம். பவானித்துவம் என்றால் பவானியாக இருக்கும் நிலை என்று பொருள்.
அவர் அவ்வண்ணம் பவானித்வம் என்றுசொன்ன மாத்திரத்தில், தன் அவ்யாஜ கருணையினால், அந்த மகோன்னத நிலையையே அவருக்கு பிரசாதித்தாளாம் பவானி!
நமது பரமபக்தியினால் நாமே அவளாகும் நிலையை அருள்பவள் பவானி.
மகா வாக்கியமான ‘தத் த்வம் அஸி’ என்னும் மகா வாக்கியம் இங்கு சிந்திக்கத்தக்கது. அதற்கு, ‘அதுவாக நீயே இருக்கிறாய்’ என்று அர்த்தம். அதுவாக உள்ள அம்பிகையே நீயாக உள்ளாய் எனும் பேதமற்ற நிலையை அருள்பவள் பவானி.
துல்ஜாபூர் பவானி:
மகாராஷ்டிரா மாநிலத்தில், ஸஹ்யாத்ரி மலைத்தொடரில் சோலாப்பூரின் அருகே துல்ஜாபூர் எனும் தலம் உண்டு. தட்சன் யாகம் அழிந்தபின், சதிதேவியின் உடலை பரமசிவன் தன் தோளில் சுமந்தபடி உக்கிரமாக சிவதாண்டவம் புரிந்தபடி இருந்தார். அவரை மீண்டும் தன்நிலைக்கு கொண்டு வரும்விதமாக சதி தேவியின் உடலை, தனது சுதர்சன சக்கரத்தினால் பாகம் பாகமாக நாராயணன் துண்டித்தார். அப்போது சதி தேவியின் முகம் துல்ஜாப்பூரில் விழுந்ததாக ஐதீகம்.
இந்த துல்ஜாப்பூர் பவானி ஷேத்திரம் இரண்டாவது சக்தி பீடமாகும்.
இந்த பாரதத்தின் தலையெழுத்தையே மாற்றிய சத்ரபதி சிவாஜியின் குலதெய்வமாக விளங்கியவர் இந்த அன்னையே. வீரசிவாஜிக்கு பவானி அம்மை ‘பவானி வாள்’ தந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. இந்த ஆலயத்தை பற்றி ஸ்காந்த புராணத்திலும் குறிப்புகள் உண்டு .
இந்த துல்ஜாபூர் பவானி அதிஉக்கிரமானவளாக இருந்தாலும் மிகவும் கருணைமிக்கவளுமாவாள்.
இங்கு அஷ்டபுஜங்களுடனும் துர்கையாக கைகளில் ஆயுதங்களைத் தாங்கி, அபயமுத்திரையும் காட்டி நிற்கின்றாள்.
பவானியே கார்த்தியாயினி, மகாலட்சுமி, பத்ரகாளி, சண்டிகா என்று நான்கு வடிவங்களில் மகிஷாசுரனை வதம் செய்ததாகப் புராணங்கள் கூறும்.
சப்த கன்னியரையும் சிருஷ்டித்து மதங்கனெனும் அரக்கனையும் சம்ஹரித்தவள் இந்த பவானி.
நீண்ட கேசபாரமும், பின்னால் அம்பராத் துணியையும் தாங்கியபடி தன் வாகனமான சிம்மத்தை அருகிலே கொண்டவள்.
அந்த மூர்த்தத்தின் கீழே மார்க்கண்டேயர் துதித்தபடியும், அனுபூதி எனும் பெண் துறவி நிஷ்டையில் இருந்தபடியும் காணப்படுகிறார்கள். துல்ஜாப்பூரில் நவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும்..
‘எவர் ஒருவர் பவானி அன்னையின் திருநாமத்தை த்ருட பக்தியோடு அனுதினமும் சொல்கிறார்களோ, அவர்களுக்கு துக்கம் இல்லை;
நோய் நொடிகள் அணுகாது; அகாலமரணமும் இல்லை’ என்கிறார் ஆதிசங்கரர்.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் பவானி ஸ்வரூபமாக அன்னை அருள் கின்றாள் .
நாளை முதல் ஆதிசங்கரரின் பவானி அஷ்டகத்தின் எட்டு சுலோகங்களையும் ஒவ்வொன்றாக சிந்திப்போம்.
ஜெய் பவானி !
(சித்திரம்: அன்பு நண்பன் தேவா)
