வசந்ததீபன்

(1)
தேவதையா?
உயிர்த் தோழியா?
வழிப் பாதையில் சந்தித்த
யாத்ரீகையா?
உன் உருவத்தை
மனதில் சுமக்கிறேன்
உன் கைகளைக் கோர்த்துக்
கனவுகளில் திரிகிறேன்
நிஜத்தில் நீயும் நானும்
தூரத்தில் நிற்கிறோம்.
இதயங்களை
அன்பு குளிர்விக்கிறது
குளிரில்
உயிர் கனலுறுகிறது
தேவதையை பூஜிக்க
சந்தோஷங்களைச் சேகரிக்கிறேன்.
(2)
பூக்களை
விரும்புவதும் விரும்பாததும்
உனது உரிமை
நுகரும் மணத்தின் தன்மைகளை அரங்கத்தின் முன்
நீ
கொண்டு வருவாயென நம்புகிறேன்.
உனது வார்த்தைகளுக்காக காத்திருக்கிறேன்
உன் மனசைக் கொஞ்சம் சொல்
உன் கனவுகளைச் சிறிது விவரி
உன்னை ஆராதிக்கிறேன்
என் இதயம் பூவால் ஆனது
சிறு அதிர்விலும் உதிரும்
உணர்வுகள்
ததும்பத் ததும்பப் பூத்திருக்கிறேன்.
