வே.கல்யாண்குமார்/கொலு பொம்மை!

வீட்டுக்கு வீடு சென்றே
பாட்டுப் பாடுவோம்!
வீதிக்கு வீதிசென்றே
சுண்டல் வாங்குவோம்!

கூட்டுக்குள் ஒன்றுகூடி
பறவைகளாகுவோம்!
நாட்டுக்கு நவராத்திரி
கொண்டாடுவோம்!

ஏட்டுக்கு அதிபதியை
சரஸ்வதியை போற்றி
இயந்திர வடிவான
இலக்குமியை வணங்கி

சக்தி சிவம் பெருமாளை
சித்தி விநாயகரை..
முத்துத் தமிழ் கடவுள்
முருகனையே துதிப்பாம்!

செட்டியார் பொம்மை..
சிங்கப்பூரு பொம்மை..
யானை பூனை குரங்கு
நாய்கள் பொம்மை பாரு!

மேளக்காரர் நாதஸ்வரம்
குடுகுடுப்பைக் காரர்..
தாலம்போடும் கரடிபொம்மை
தாமரைப் பொம்மை

ஆயக்கலைகள் நடனம்
அழகழகாய் சீனாகாரன்
தூயத்தமிழ் வள்ளுவனார்
கொலுவில் வைத்து மகிழ்வோம்!

அம்மா முன்னே அப்பா பொம்மை.
தாயின் மடியில் சேயும் பொம்மை!
காயும் கனியும் பூவும் பொம்மை!
கொலுவில் வைப்போம் வாரீர்!