போர்ஹெஸ் கவிதை /தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி

ஈந்தவொரு இறப்புக்குமான துக்கம்

நினைவிலிருந்தும் நம்பிக்கையிலிருந்தும்
விடுதலையடைந்துவிட்ட
எல்லைகளற்ற, அருவமான, ஏறத்தாழ எதிர்காலமான
இறந்த உடல் என்பது யாரோ ஒருவரல்ல; அது சாவு.
மெய்யிலாளர்களின் கடவுள் எப்படி அவர்கள்
அறுதியிட்டுக்கூறுவது போலக் குணங்களற்றவரோ
அது போல இறந்த நபர் எங்குமுள்ள ஒருவருமிலர்,
அது இழப்பும், உலகின் இன்மையும்
தவிர வேறொன்றுமில்லை.
அதிலிருந்து நாம் எல்லாவற்றையும் திருடிவிடுகிறோம்
நாம் அதில் ஒரு நிறத்தையோ
ஒற்றை அசையையோ கூட விட்டுவைப்பதில்லை:
இதோ இங்கேயிருக்கும் முற்றத்தை
அதன் கண்கள் இனி எப்போதும்
எடுத்துக்கொள்ளப்போவதில்லை
அங்கே அந்தப் பக்க நடைபாதையில்தான்
அது தன் நம்பிக்கையைக் கைவிட்டுச்சென்றது.
நாம் நம்மிடையே, திருடர்களைப் போல
இரவுகளின் பகல்களின் பொக்கிஷங்களைப்
பகிர்ந்துகொண்டோம்.

(கண்ணாடிகள் கனவுகள் காலங்கள் என்ற தொகுப்பிலிருந்து எடுத்தது)