சசிகலா விஸ்வநாதன் /பொம்மை கொலு

நவராத்திரி கவிதை

வருடம் தோறும் பொம்மை மருத்துவம்
தப்பாமல் செய்வார் என் பாட்டியார்
லக்ஷ்மியின் மேல் வலது கரம்,
சிவகாமியின், மேல்
இடது கரமாய்

பரிமளிக்கும் கேலிக் கூத்து இவ்வருடமும்
கௌதம புத்தர் அதை
கனிவுடன் மறைப்பார்

கல்யாண செட்டில்
பெண்ணின் தாயாரில்லை;
பரவாயில்லை; கல்யாணப் பெண் இருக்கிறாள்.

செட்டியார் தான் வழக்கம் போல்
கொள்வாரின்றி கடை விரித்த வண்ணம்…

அடுத்த வருடமாவது எல்லாம் புதிதாய் .‌‌..
வாங்க வேண்டும் என்ற மசோதா
எதிர்ப்பில்லாமல் …

சென்ற வருடங்கள்
போலவே நிறைவேறியது
ஒரு முனகல் சத்தமும் உறுமலும்;

அப்பாவிடமிருந்து
கட்டியம் கூற;

அடுத்த வருடமும்,
அதற்கடுத்த வருடமும்
நடப்பதை பறை சாற்றியது.