ஜெ.பாஸ்கரன்./‘மத்ஸயா’ வில் குவிகம் மாலை!

இலக்கிய உலகில் பெரிய ஆலவிருட்சமாக வளர்ந்து வரும் குவிகம் குழுமத்தின் கூட்டம் 8.10.24 அன்று மாலை தி.நகர் மத்ஸயா ஓட்டல் வளாகத்தில் நடந்தது. வழக்கமான ‘கெட் டுகெதர்’ நிகழ்வில், வித்தியாசமான புத்தக வெளியீடும் நடந்தது. வந்திருந்த அனைவரையும் பெயர் சொல்லி அழைத்து, இரண்டு நிமிடங்கள் பேசச் சொன்னது, ‘குவிகம்’ பாணி!
சுவையான இரவு உணவு, மத்ஸயா ஸ்பெஷல், அருமையாக இருந்தது – சூப், ‘சாட்’ ஐடம்ஸ், நாண், மலாய் கோஃப்தா, இரண்டு சப்ஜி, பிசிபேளா பாத், ‘குட்டி’ ஊத்தப்பம், தே.சட்னி, தயிர் சேமியா, பால் பாயசம், ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம், பழத்துண்டுகள் – நண்பர்கள் கூடி சுவாரஸ்யமான அரட்டை!
குவிகம் சுந்தரராஜன் கூட்டத்தை துவக்கி வைக்க, பேரா. வ வே சு தலைமையில் ‘பேச்சு’ தொடங்கியது. புத்தகம் வாசிப்பதின் உயர்வை ஒரு சிறு கதை மூலம் அவர் சொல்ல, பின் வந்தவர்களும் ஏதாவது ஒரு புத்தகம் பற்றிப் பேசினர். வாசித்த புத்தகங்கமோ அல்லது குவிகம் பதிப்பில் வெளிவந்த புத்தகமோ பற்றி பேசலாம் – இரண்டு, மூன்று நிமிடங்கள்தான் கொடுக்கப்பட்ட நேரம் என்றாலும் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை!
எப்போதும்போல், குவிகம் கூட்டத்திற்கு வந்தவர்களின் பெயர், போன் நம்பர் ஆகியவை ஒரு நோட்புக்கில் பதியப்பட்டன.
சுந்தரராஜன் தான் எழுதியுள்ள மூன்று புத்தகங்களை அறிமுகம் செய்தார். உலக இலக்கியங்களில் அவருக்கு ஈடுபாடு அதிகம். இன்றைய அவசர கதியில் முழு படைப்பினையும் வாசிப்பது என்பது இயலாது என்பதால், ‘சுருக்கி’ எழுதி, அறிமுகம் செய்வது அவரது இலக்கியப் பணி. விருப்பம் உடையவர்கள், பின்னர் முழு படைப்பினையும் வாசிக்கலாம்! ‘பொன்னியின் செல்வனி’ன் சுருக்கிய வடிவம் கிடைக்கிறது! அதுபோல, உலக இதிகாசங்களின் சுருக்கிய வடிவங்களைப் புத்தகமாக வெளியிட்டார் சுந்தரராஜன். உலக இதிகாசங்கள்.1. (சுமேரியர்களின் கில்காமேஷ்), உ.இ.2.(ஹோமரின் இலியட்), உ.இ.3.(ஹோமரின் ஒடிஸி) ஆகிய மூன்று புத்தகங்கள் (குவிகம் பதிப்பகம்) – இம்மூன்று புத்தகங்களின் முக்கியமான பகுதிகளைச் சுட்டியும், ஏன் இந்த எண்ணம் வந்தது என்பதையும் பற்றி சுருக்கமாகச் சொன்னார்! அரை மணியில் படித்து முடித்துவிடக்கூடிய இந்தப் புத்தகத்தைப் பற்றி ‘சுருக்கமாக’ ஒரு மணி நேரம் பேசுவார் சுந்தரராஜன் என்று ராமமூர்த்தி (யாரோ என்ற பெயரில் எழுதுபவர் – சுந்தரராஜனின் சகோதரர்) ஜோக்’கடி’க்க அரங்கம் சிரிப்பில் குலுங்கியது!
பெயர்கள் பதிக்கப்பட்ட நோட்டிலிருந்து மூன்று பெயர்கள், ஆடியன்சிலிருந்து தெரிவிக்க,வ.வே.சு. விடமிருந்து நாகேந்திர பாரதி, டாக்டர் பாஸ்கரன், சிறகு இரவிச்சந்திரன் ஆகியோர் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். வித்தியாசமாக நடந்த இந்தப் புத்தக வெளியீடும், குவிகம் ஸ்பெஷல் எனக் கொள்ளலாம்! பின்னர் அனைவருக்குமே புத்தகங்களின் பிரதிகள், வழங்கப்பட்டன.
‘Sunday Evening Fever’ என்பதைப்போல ஞாயிறு மாலைகள் குவிகத்திற்கானது என்றாகிவிட்டது. ஜூமில் பார்த்தவர்களை நேரில் சந்திக்க கோவையிலிருந்து சுந்தரராஜனின் நண்பர் சந்திரசேகர் வந்திருந்தது மகிழ்ச்சி. ‘குவிகம்’ அமைப்பு, நண்பர்களுக்கானது என்பதைக் காட்டும் விதமாக, அனைத்து நண்பர்களும் அரட்டை அரங்கில் சிரித்துப் பேசி மகிழ்ந்தது ஓர் இனிய அனுபவம்!
வாழ்த்துகள் குவிகம் சுந்தரராஜன் மற்றும் கிருபானந்தன்!

2 Comments on “ஜெ.பாஸ்கரன்./‘மத்ஸயா’ வில் குவிகம் மாலை!”

Comments are closed.