
ஆயிரமாய் விழுது கொண்ட
ஆலமரம் விழுந்த தம்மா
தாய்மண்ணைத் தொழுத பிள்ளை
தன்னுயிரை விட்ட தம்மா
நோயிலாத தொழில் ஒன்றே
நோன்பாகக் கொண்ட வர்க்கு
ஓய்வுதர வேண்டு மென்று
உடன்தெய்வம் அழைத்த தம்மா !
தொழிற்சாலை தான வர்க்குத்
தொண்டாற்றும் கோவி லென்று
விழிபோல உழைப்போர் தன்னை
தெய்வமெனப் போற்றி வந்தார்!
பழியொன்றும் கொண்டார் இல்லை
பாருக்கே வெளிச்சம் காட்டும்
அழியாத அருணன் போல
அவர்வாழ்ந்து நின்றார் அம்மா !
உப்புமுதல் விமான மென்று
உலகப்புகழ் பெற்ற தொழில்
தப்பாகச் செல்லா திருக்கத்
தரம்வகுத்த ரத்ன மென்று
எப்போதும் நினைக்கும் வண்ணம்
இருந்தவரே ரத்தன் டாடா!
அப்பப்பா அவருக் கிணையாய்
அகிலத்தில் யார்தான் உண்டு !
(தொழிலதிபர் ரத்தன் டாடா (09.10.2024) புதன்கிழமை இரவு மணிக்கு இறைநிலை அடைந்தார்)
