செ.புனிதஜோதி/டா(ட்)டா

எதனையோ சொல்ல வந்து
உங்களிடத்தில்
சொல்ல முடியாமல்
வெளியேறுகிறது
சொற்கள்

தன் நிழலைப்பார்த்து
தானே குரைக்கும்
உயிரியைப்போல
சொற்கள்
சொற்களைப்பார்த்து
திட்டிக்கொள்கிறது
கோழையென.

அந்தப் பரிதாவப்பட்ட
சொல் உயிரியையும்
கைவிட முடியாமல்
இந்தக் குடுவைக்குள்
நிரப்பிக்கொண்டு
திரும்பிச்செல்கிறேன்

குருதி ஓடுவதைப்போல்
சொற்களும் ஓடுகின்றன
ஒருநாள்
சுட்டெறிக்கும் வேளையில்
வெளியேறலாம்.

பகல் சுட்டெறித்த சொற்களை
அந்தியில் சுட்டிக்காட்டும் வானம்
அதன்பின்
என்ன பெற்றுவிடுகிறது பெரிதாய்?
இருளைத்தவிர.

ஒன்று புரிந்துகொள்ளுங்கள்
சொற்களை வீசத்தெரியாதவர்கள்
கோழைகளல்ல
எதிர்காலத்தை கணிக்கத்
தெரிந்தவர்கள்.