அதிரன்/இணைப்பு

நெடுஞ்சாலையில்
பெரும் விபத்து என்று
தடம் மாறியது பயணம்
ஒரு கிராமத்தின் வழியே….

ஒலிப்பான் சத்ததிற்கு
தலை தூக்கி கவனிக்கும்
புல் தேடும் பசுக்கள்.

“எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே “
என்ற பழைய பாடலை
முழங்கும்
ஆளில்லா டீ கடை ஒன்று

வறண்ட நிலத்து
சோளக் கொல்லை பொம்மையில்
கூடு கட்டி
குடும்பம் நடத்தும்
மைனாக்கள்

எல்லை தாண்டிய
குற்றத்திற்காக
விடாது துரத்தி வரும்
தெரு நாய்கள்

மயானத்திற்க்கு செல்லும் வழி
என்ற பதாகையின் கீழ்
அனந்தசயனத்தில் பீடி குடித்துக்
கொண்டிருக்கும் பெரியவர்

நீண்டு செல்லும் இந்த காட்சிகள்
மெல்ல மெல்ல விலகத் தொடங்குகிறது
பரபரப்பான நெடுஞ்சாலையின்
மீண்டும் வந்து இணைகையில்