
(ஸ்ரீ வத்ஸ…ஆ: பஸ்த்தம்ப…ஸ்ரீய ஜூஸ்யா..)
வேதத்தைக் கொளுத்துங்கள்
வியாசனுக்கு வாஸக்டமி
செய்திருந்தால்
குருக்ஷேத்திர மண்
குருதியைக் கண்டிராது
வாத்ஸாயனனுக்கு எவனும்
கொட்டை அடிக்கக் காணோம்
போகட்டும்
வியாசனுக்கும்
வாத்ஸாயனனுக்கும்
வாய்ப் பூட்டு போடுங்கள்
காளிதாஸனை
கழுவில் ஏற்றுங்கள்
கும்பமேளா நாகருக்கு
அவதூதருக்கு
கோமணம் கட்டிவிடுங்கள்
சுசீந்திரச் சித்திரங்களை
கைசிவக்கச் சிவக்க
சுரண்டிச் சிதையுங்கள்
கொனாரக் ஹளபேடு
கோபுரத் தலையில்
கூத்தடிக்கும் சிற்பங்கள் –
இடியுங்கள்
கூட்டிக் கழிக்கும்
பூதாகாரக் குறிகளை
ஃப்ரஹதீஸ்வரப் பூசணியை
சித்தாந்தச் சோற்றில்
புதைத்து மறைக்கப் பார்க்காதீர்
நிர்க்குண நிர்வாணத்துக்கு
குறிகள் கற்பித்து
கல்யாணம் செய்துவைத்து
கட்டிலில் ஏற்றுவதை
திருப்பள்ளி எழுச்சி பாடுவதை
நிறுத்துங்கள்
நாச்சியார் வீட்டுக்கு
நடக்கும் கடவுளை
மடக்குங்கள்
செய்யுங்கள் இவையெல்லாம்
செய்யுங்கள் இப்போதே
பரிசுத்தப் புதுப்பெய்ண்ட்டில்
பளபளக்கும்
பழைய துருப்பிடித்த
பண்டோரா :டப்:பாக்களே
காலாவதியான
ஊசிமருந்துக் குப்பிகளே,
பிரலாபிக்கும் ‘பெரியோரே’
கடலில்
சாக்கடையைக் கலந்து
காற்றுக்கு
புகைக் கவசம் மாட்டி
அணுவின் அகங்காரத்தில்
உயிர்விலை குறைக்கும்
அரசியல் நடத்தி
நீங்கள் சிருஷ்டித்த
நச்சுக் காட்டில்
காலூன்ற முடியாமல்
களைத்துச சோர்ந்து
மறக்க முயன்று
முரண்பாட்டில்
விடுதலை மருந்துக்கு
அலையும் குருத்துக்கள்
(ஆஷாடபூதி(க்)களை
பிடுங்கி எடுப்போரை
குப்பையைக் கிளறும்
கூத்தாடிகள் என்று
முத்திரை குத்தி)
பரிகசிக்காதீர்
மாதா பிதாக்கள் பாவம்
மக்கள் தலையில் :
மக்கள் தலையில்
அக்கினியைக் கொட்டி
அழகும் காட்டும்
மாரீசர்களே
கண்ணையும் கருத்தையும்
தீட்சண்யப் படுத்துங்கள்
முடியாவிட்டால்
நாசூக்காய்
செத்துத் தொலையுங்கள்.
‘கணையாழி’ அக். 1973
