
பேய் மழையில்
தெருவில் யாருமில்லை
பூனைகள், பறவைகள்
எங்கோ பதுங்கிக் கொண்டன
அவ்வளவு மழையில்
ஸ்விகி ஆள் ஒருவரும்
ஸொமோட்டோ ஆள் ஒருவரும்
சரியான அட்ரஸ் கேட்டு
போன் செய்துகொண்டிருக்கிறார்கள்
மறுமுனையில் ஆர்டர் செய்தவர்கள்
போனை எடுக்க மறுக்கிறார்கள்
மின்னல் அவர்கள் தலைக்குமேல் வெட்டுகிறது
இடி அவர்கள் தலைக்குமேல் முழங்குறது
அவர்கள் பெட்டியில் இருப்பது
ஒரு வறுத்த கோழியாக இருக்கலாம்
ஒரு மினி மீல்ஸாக இருக்கலாம்
சூடான பிரியாணியாக இருக்கலாம்
டெலிவரி பார்ட்னர்கள்
ரெயின் கோட்டை தாண்டிப் பெய்யும் மழையில்
முகவரி தேடிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் மீட்புப் பணியில்
சென்றுகொண்டிருக்கவில்லை
பசித்த குழந்தைகக்கு
பாலோடு சென்றுகொண்டிருக்கவில்லை
மழைநீர் அடைப்புகளை
துப்புரவு செய்ய சென்றுகொண்டிருக்கவில்லை
அவற்றைவிட அவசரப்பணி
அவ்வளவு மழையிலும்
ருசித்த நாவுகளை
கட்டுப்படுத்த முடியாதவர்களுக்காக
சென்றுகொண்டிருக்கிறார்கள்
இந்த நகரத்தை
நாம் நிறைய உண்டுவிட்டோம்
ஆனாலும் நமக்கு
எப்போதும் பசிக்கிறது
உண்பதை நாம் சற்றே
இடை நிறுத்தலாம்
மழை நிற்கும்வரையிலாவது
மழை இப்போது
நகரத்தை உண்டுகொண்டிருக்கிறது
15.10.2024
காலை 11.03
