
பழைய பொருட்கள் வாங்குபவர்
இரண்டு நாட்களாய்
மூன்று முறைக்குமேல்
இந்தப்பக்கமாக
வந்துவிட்டு போகிறார்
பாப்பூவின் அப்பா கொஞ்சம்
பழைய பொருட்களை
எடுத்து பட்டியலிடுகிறார்
எழுதி எழுதி பக்கம்
தீர்ந்து போன நோட்டுகளை
பாப்பூ பக்குவமாய்
பையிலிட்டு வைத்துள்ளாள்
அம்மாவும் அவளுக்கு
வேண்டாததை ஓரமாய்
அடுக்கியிருக்கிறாள்
மீதமிருப்பது
என் முறை தான்
எல்லாப் பழையதிலிருந்தும்
ஏதாவது புதியதை
கண்டுகொள்கிற என்னிடம்
எடுத்து வைப்பதற்கும்
போடுவதற்கும் எதுவுமில்லை
என்பது கசக்கிற உண்மை
தாராபுரம்
