திருக்குறள் சிந்தனை 13

அழகியசிங்கர்

            திருவள்ளுவர் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் மழையைப் பற்றி பலவிதமாகப் பாடல்களைப் புனைந்துள்ளார்.  உயிர் வாழ்வதற்கு முக்கியமான காரணியாக இருப்பது மழை.  மழை அதிகமாகப் பெய்தாலும், மழையே பெய்யாமல் இருந்தாலும் அதிக ஆபத்தில் மக்கள் அவதிப்படுவார்கள்.

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து

உள்நின்று உடற்றும் பசி. 

            கடல் சூழ்ந்துள்ள இவ்வுலகத்தில் மழை உரியக் காலத்தில் பெய்யாமல் போய்விட்டால், உயிரினங்கள் எல்லாம் பசியால் வாடுவார்கள் என்கிறார் திருவள்ளுவர். 

            இதற்கு ஒப்பாக மழையைப் பற்றி நவீன கவிஞர்களும் கவிதைகள் எழுதி உள்ளார்கள்.

            ‘மழைத்துளிகள்’ என்ற தலைப்பில் ஞானக்கூத்தன் ஒரு கவிதை எழுதி உள்ளார்.

            எல்லாப் பொருள்களைப் போலவே

            இரவும் நேராகவும் வளைந்தும்

            முறுக்கிக் கொண்டு இருந்தது

            வளைந்த இரவுகள் பலவற்றை

            என் புழைக்கடையில் நான் வைத்திருக்கிறேன்

            கரும்பு போல நேரான

            இரவுகள் சிலவற்றை வாசலில் வைத்திருக்கிறேன்

            ஓய்வு கிடைக்கும் போதெல்லாம்

            அதுவும் பௌர்ணமி நாளென்றால்

            ஒரு வளைந்த இரவை

            நேராக்க முடியுமா என்று முயல்கிறேன்

            நேற்றைக்கொரு மேகம் நான்

            இரவை ஆராய்ந்தபோது

            என்னைத் துளிகளால் சுட்டுவிட்டுப் போயிற்று

                                                (இம்பர் உலகம் கவிதைத் தொகுதி)

மழையின் பெருமையைத் திருவள்ளுவர் தன் குறள் மூலம் நேரிடையாகக் குறிப்பிடுகிறார்.  நவீன கவிஞர்களோ மறைமுகமாக மழையின் பெருமையைக் குறிப்பிடுகின்றனர்.

One Comment on “திருக்குறள் சிந்தனை 13”

Comments are closed.