பாடலிங்கம் அண்ணாச்சியின் பைண்ட் நாவல்கள்…

நாறும்பூநாதன்

 இன்னென்ன நேரத்தில் இன்னென்ன செய்யணும் என்று பாடலிங்கம் அண்ணாச்சியிடம் தான் கத்துக்கணும். எல்லா வேலைகளிலும் ஒரு ஒழுங்கு இருக்கும். கூர்ந்து கவனித்தால் ஒரே சீரான நடைமுறை இருக்கும். ஞாயிறு என்றால், பழைய பேப்பர்களை அடுக்கி வைப்பது, ஜன்னல்களில் தூசி தட்டுவது, மாலையில் அந்த வாரத்தில் வந்த விகடன்,கல்கியில் வந்த தொடர் நாவல்களை அலுங்காமல் கிழித்து எடுத்து வைப்பது (தொடர் முடிந்தவுடன் அதை பைண்ட் செய்து அலமாரியில் அடுக்குவது),

மாதத்தின் கடைசி ஞாயிறு என்றால், கதவு தாழ்ப்பாளில் கீல்களுக்கு தேங்காய் எண்ணெய் சொட்டுக்கள் விட்டு கொண்டிகளை இலகுவாக்குவது என பல வேலைகள்…   அவர் வீட்டு அலமாரியில் விகடனில்,கல்கியில் தொடராக வந்த அனைத்து நாவல்களையும் பார்க்கலாம். கடல்புறா,யவனராணி,பொன்னியின் செல்வன், அலைஓசை, இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள்…எல்லாமே இருக்கும்.   

அவரது அம்மா அவரை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கும்.   ” நல்லா வேலையத்த வேலையைப் பாத்துக்கிட்டு இருக்கான்..”   பாடலிங்கம் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்வதில்லை. பைண்ட் செய்த புத்தகங்களை மீண்டும் மீண்டும் வேறு படிப்பார்.   பொன்னியின் செல்வனை மட்டும் மூன்று முறை வாசித்திருப்பார் என்றே நினைக்கிறேன். யாரும் படிக்கக் கேட்டால் உடனே எல்லாம் தந்து விட மாட்டார். ஆட்களின் தராதரம் பார்த்துத்தான். தருவார்.

தெருவில் பலபெண்கள் வந்து கேட்பார்கள். பொம்பளப்பிள்ளைகள் என்றவுடன் பல்லிளிக்கும் வழக்கம் எல்லாம் அவருக்குக் கிடையாது. படிப்பது யார் என்பது மூஞ்சியைப் பார்த்ததுமே அவருக்கு தெரிந்து விடும் போல. சிலரிடம் மென்மையாய் மறுத்து விடுவார்.  

(நீங்க கேக்குற யவனராணியை அரண்மனைக்காரதெரு கதிரேசன் வாங்கிட்டுப் போயிருக்கான்..) கொடுக்கும்போது ஒன் குயர் நோட் ஒன்றில் எழுதி, வாங்குபவர் கையெழுத்து போட்டபிறகு தான் தருவார். அதிகபட்சம் 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். வந்தபிறகு படித்த நாவலில் இருந்து சில கதாபாத்திரங்களை சொல்லி நாசூக்காக கேட்பார்.

நாம் படிச்ச லட்சணம் தெரிந்து போய் விடும்.   தெருவில் ஒழுங்காய் படிக்கும் வாசக/வாசகியர்களுக்கு அவர் ஒரு தெய்வப்பிறவி தான். அவரது அலமாரியில் பெரும்பாலும், பைண்டு செய்யப்பட்ட நாவல்களே அதிகம் இருக்கும். 

அவர் வீட்டில் தான் ” ராணி” இதழைப் படிப்பேன். குரங்கு குசலா போன்ற கருத்துப் படங்கள் நினைவில் உள்ளன. ராணிமுத்து நாவல்களும் கிடக்கும். துவக்கத்தில் வாசகர்களுக்கு அறிவுப்போட்டி என்று ஒரு பக்கத்தில் கேள்விகளும் அதற்கு நேராக இரண்டு பதில்கள் கொடுக்கப் பட்டிருக்கும். அவற்றில் சரியானதை டிக் செய்து அனுப்பவேண்டும். உதாரணத்திற்கு, பெண்கள் மிகவும் விரும்புவது–சேலை/தங்க நகை என்று இருக்கும். ஆழம் காண முடியாதது- பெண்ணின் மனம்/கடல் … இது போன்ற அறிவு சார்ந்த கேள்விகள் எல்லாம் இருக்கும்.

இதைக் கிழித்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.  மேல வீட்டு வசந்தா அக்கா தான் இது போன்ற விசயங்களில் ஆர்வம் காட்டுவாள். பாடலிங்கம் அண்ணாச்சி தினத்தந்தி பேப்பரில் வரும் குரும்பூர் குப்புசாமி எழுதும் தொடரைக் கூட தொடர்ந்து படிப்பார்.

அது ஒருவகையான கோட்டி தான்..சேவுப்பொட்டணம் வாங்கி சேவைத் திங்கும்போதே, பொட்டண பேப்பரில் உள்ள ஜோக்குகளைப் படிப்பார்.  ஊர் ஊராய் சுற்றும் மருத்துவர் காளிமுத்து எந்த நாளில் எந்த லாட்ஜில் தங்குவார் என்பதைக் கூட படிப்பார் என்றால் பார்த்துகோங்களேன்..  

அவரை எனக்கு மிகவும் பிடிக்கக் காரணம் குமுதத்தில் வரும் படக்கதைகளைக் கூட பைண்ட் செய்து குழந்தைகளுக்குக் கொடுப்பார். புத்தகத்தை படித்தது போலவே கசங்காமல் கொடுக்க வேண்டும்.

காசு எல்லாம் கிடையாது.    ” புத்தகம் படிக்கப் படிக்கத் தான் உயிர் பெறும்..வெறுமனே அலமாரியில் இருந்தால் உயிரற்று தான் இருக்கும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும், எழுதிய ஆசிரியரும் உயிர் பெறுவார்..” என்று சிரித்துக் கொண்டே சொல்வார் பாடலிங்க ம் . 

3 Comments on “பாடலிங்கம் அண்ணாச்சியின் பைண்ட் நாவல்கள்…”

  1. திடுமென முடித்து விட்டீர்களே அண்ணாச்சி. இன்னும் வளர்ந்திருக்கலாமே. சுவையாக இருந்தது.

  2. ” புத்தகம் படிக்கப் படிக்கத் தான் உயிர் பெறும்..வெறுமனே அலமாரியில் இருந்தால் உயிரற்று தான் இருக்கும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும், எழுதிய ஆசிரியரும் உயிர் பெறுவார்..” ஆஹா.. அற்புதம்..

  3. ‘ஒவ்வொருமுறை படிக்கும் போதும் எழுதிய ஆசிரியரும் உயிர் பெறுகிறார்.’ அற்புதமான வரிகளில் பாடலிங்கம் அண்ணாச்சி நமக்குள்ளும் உயிர் பெறுகிறார்.

Comments are closed.