சீவக சிந்தாமணி     –         இயற்றிவர் திருத்தக்கத்தேவர்     காப்பியக் கதைச் சுருக்கம் – மற்றும் நாமகள் இலம்பகம் பாடல் விளக்கம்.  

உஷாதீபன்

       ஐம்பெருங்  காப்பியங்கள் என்றழைக்கப்படுவது சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி ஆகியவை ஆகும்.  இதில் முதல் காப்பியமான சிந்தாமணி, சீவகனின் கதையை உள்ளடக்கியது. காதல் அறமும், வாழ்க்கை நலமும் உள்ளடக்கியது இக்காப்பியம். கவியின்பத்தைப் பொழிந்து வழங்கும் காப்பியம் என்பதால் சிந்தாமணி எனப் பெயர் பெற்றது. 

      ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து, நாடு வளம்பெற, மக்கள் களித்திருக்க, சீரோடும் சிறப்போடும் கடமையாற்ற வேண்டிய மன்னன், தன் பொறுப்பு உணராமல், அந்தப்புரக் காட்சி மயக்கத்தில் கட்டுண்டு கிடந்தானெனில் ஆட்சியும், நாடும் மக்களும் என்னாவர்? 

      ஏமாங்கத நாட்டின் இராசமாபுரம் நகரில் இருந்து ஆட்சி புரிந்தவன் சச்சந்த மன்னன். மனைவியின் பேரழகில் மயங்கி அந்தப்புரமே கதி என்று கிடந்தவன். கட்டியங்காரனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நாட்டையும், மக்களையும் மறந்து கிடக்க. அவனைத் தீர்த்துவிட்டு ஆட்சியைப் பிடிக்க கட்டியங்காரன் முனைகிறான். 

      தாய்மையோடிருக்கும் தன் மனைவி விசையை மயிற்பொறி ஒன்றில் வைத்து வெளியே அனுப்பிவிட்டு, கட்டியங்காரனுடன் போரிட்டு மடிகிறான் சச்சந்த மன்னன். மயிற்பொறி இடுகாடு ஒன்றில் இறங்குகிறது. தோழி செண்பகமாலையின் உருக்கொண்ட இடுகாட்டு அமானுஷ்ய தெய்வம் விசையையின் மகப்பேறுக்கு உதவுகிறது. தன் இறந்த குழந்தை ஒன்றைப் புதைக்க அங்கு வந்த கந்துக்கடன் என்னும் வணிகன் விசையின் குழந்தையை எடுத்துச் சென்று வளர்க்கிறான். அச்சமயம் அக்குழந்தை ஒரு தும்மல் போட…அது சீவ…என்ற ஒலியைக் கொடுக்க, சீவகன் என்னும் பெயர் அமைகிறது குழந்தைக்கு. 

       அச்சணந்தி என்னும் முனிவரிடம் கல்வி கற்கிறான். அவரிடமே தன் பிறப்பு ரகசியத்தை அறிந்து கட்டியங்காரனைப் பழி வாங்குவதற்குத் தக்க சமயத்தை எதிர்நோக்கியிருக்கிறான். சீவகன் யாழ் மீட்டுவதிலே தேர்ந்தவனாய் விளங்கினான். அதற்கான போட்டியிலே ஜெயித்து, காந்தருவதத்தையை மணக்கிறான். பிறகு பட்டத்து யானையிடம் சிக்கிய குணமாலை என்னும் பெண்ணைக் காப்பாற்றி அவளை மணக்கிறான். பிறகு அடுத்தடுத்து வெவ்வேறு நிகழ்வுகளில் பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை என்று பலரையும் தன் அன்பு மனைவிகளாக்கிக் கொண்டு இறுதியாகக் கட்டியங்காரனைக் கொன்று ஆட்சிக் கட்டிலை மீட்கிறான்..

      உலகமே வியக்க ஆட்சி புரிகிறான். வாழ்க்கையின் நிலையாமையை ஒரு கட்டத்தில் உணர்ந்து, ஆட்சியைத் தன் மகன் சச்சந்தனுக்கு அளித்துவிட்டு இறுதியாகத்  தன் தேவியரோடு துறவறம் பூணுகிறான். 

இதைத்தான் சமணம் தழுவிய தவ முனிவர் திருத்தக்கத்தேவர்  என்னும் இளைய துறவி சீவக சிந்தாமணி என்னும் காவியமாக்கித் தந்திருக்கிறார். மொத்தம் ஏழு பதிகங்களாகப் பிரித்து யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்று விரித்து வழங்கியிருக்கிறார். 

1) கடவுள் வாழ்த்து,   –  பதிகம் (2) நாமகள் இலம்பகம்  (3) கோவிந்தையார் இலம்பகம் (4) காந்தர்வதத்தையார் இலம்பகம் (5) குணமாலையார் இலம்பகம் (6) பதுமையார் இலம்பகம் (7)கேமசரியார் இலம்பகம். 

இத்தகைய சிறப்புமிக்க காவியம் காலத்தால் காணாமல் போகக்கூடாது என்று காத்தருளிய பெருமை நம் உ.வே.சாமிநாதய்யர் அவர்களையே சாரும் என்கிற உண்மையை நாம் இங்கே அவசியம் நினைவு கொள்ளல் வேண்டும்.  

இயற்கை வர்ணனைகளும், நாட்டின் செழிப்பும், வளமும், அவை சார்ந்த வாழ்வியல் நடைமுறைகளும், சிறப்புறக் கையாளப்பட்டிருக்கும் சீவக சிந்தாமணியின் கவித்துவ மேன்மைகளை அங்கங்கே தொட்டுக் காண்பிப்பதே இப்பகுதியின் நோக்கம். 

                              —————————————-

நாமகள் இலம்பகம்

     மையல் யானையின் மும்மதம் ஆர்ந்துதேன்

            ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராயச்                                 செய்ய சந்தனம் தீம்பழம் ஆதியா                                          நைய வாரி நடந்தது நன்றரோ

மலையிலிருந்து பாய்கின்ற அருவிகள் மும்மதங்களும் உடைய யானையைப் போல் மிகுந்த வேகத்துடன் காட்டிலே உள்ளடங்கிய பொன் துகள்களையும், மணம்மிக்க சந்தனதையும், கனி வகைகளையும் வாரிச் சுருட்டிக் கொண்டு பெரு வெள்ளமாகப் பெருக்கெடுத்துப் பாயும் என்கிற பொருளில் அமைந்த இந்தப் பாடலின் சுவையை நாம் பகுத்து உணர வேண்டியுள்ளது அவசியமாகிறது.

யானையின் மும்மதம் ஆர்ந்துதேன் – மதம் பிடித்த யானைக்கு மும்மதம் என்கிற மதநீர் சுரக்கும். கன்னமதம், கைம்மதம், கோசமதம் என்ற மூவகை நீராகும் அது. 

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்                                    நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்                                அனைத்தும் வேடமாம் அம்பலக் காத்தனை                                 தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ!   – என்கிறது ஐந்தாம் திருமுறை திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் 

சிவபெருமானை நினைப்பவர் மனத்தினை கோயிலாகக் கொள்வர். பனை போன்ற கையையும், மும்மதங்களையும் உடைய யானைத் தோலை உரித்துப் போர்த்தியவன்.. மதம் பிடித்த யானைக்கு 3 அடங்களிலிருந்து மதநீர் ஒழுகும்…என்பதால் மும்மத வேழம்.அது மண்டையோடு, கண்களுக்கும் காதுகளுக்கும் இடையே உள்ள இடம் மற்றும் ஆண்குறி ஆகிய இடங்கள்   அத்தகைய திருச்சிற்றம்பலக் கூத்தனை தினையளவும் மறந்து வாழ்வேனோ…என்கிறது இப்பாடல். 

அசும்பு – ஆடி அளைந்து  – மலைப் பகுதிகளில் வயலோரங்களில் கசிந்தோடும் வாய்க்கால், அழுக்கு சேறுடைய நிலம்  என்று எல்லாவற்றையம் அடித்துக் கொண்டு கீழிறங்கும் அருவி. எனப் பொருள் கொள்க. (மையல் – மயக்கம்)-  (அளைந்து – கலந்து)

வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பு என்று கிணற்றடியில் வளர்ந்த வாழை மரங்களைக் குறிப்பிடுகிறது அகநானூறு – அகம்-8. 

நாமகள் இலம்பகத்தின் இந்த ஒரு  (37) பாடலுக்கான பொருளை அறிதலும், உள் வாங்குதலும் ஆகிய சிறிய  இலக்கிய இன்பம் –  வாசிக்கும் அன்பர்களின் மரபிலக்கிய ரசானுபவத்தை மெல்ல மெல்ல மெருகூட்ட உடன் கை பிடித்து அழைத்துச் செல்லும்  என்பது திண்ணம். 

                  ————————————————————————-