
ஆர். வத்ஸலா
எனக்கு உண்டு சில பயங்கள்
சிறு வயதில்
அம்மா திட்டுவாள் என
பயம்
அப்பாவுக்கும்
என்னை பிடிக்காமல் போய்விடுமோ என
பயம்
எதை பேசினால்
இன்றில்லாவிட்டாலும்
என்றோ ஒரு நாள்
அண்ணன் கேலி செய்வானோ
என்று
அன்றிலிருந்து இன்று வரை
பயம்
தெரியாத்தனமாக
எதையாவது சொல்லி
ஆத்மார்த்த தோழர் தோழியர்
கோபித்துக் கொள்வார்களோ எனும்
பயம்
தப்பாக மந்திரத்தை உச்சரித்து
தெய்வம் கோபித்துக் கொள்ளுமென்று
பயம்
சனிக்கிழமை தோறும்
நவகிரகங்களை சுற்றி
எள்ளு விளக்கு ஏற்றாவிட்டால்
அல்லது
வெளியிலிருந்து திரும்பியவுடன்
பின்னங்கால் கழுவாவிட்டால்
சனி கூடவே வருமென்று
பயம்
இருட்டில் போக
புளியமரத்தடியில் நிற்க
பேய்ப்படம் பார்க்க
பயம்
யாரோ சொன்னார்கள்
மனநலநிபுணரை பார்த்தால்
சரியாகுமென்று
பார்க்கலாம்தான்
ஆனால்
ஒரு வேளை
அப்படி நடந்து விட்டால்
பயமேயில்லாமல்
வாழ்வதெப்படி என்று கொஞ்சம்
பயம்

ஆஹா… அருமை..
தெனாலி பயத்தை விட பெரிய பயமாக இருக்கும் போல் இருக்கிறதே . கந்த சஷ்டி கவசம் துணை
சூப்பர். கடைசி வரிகள்தான் பயத்தின் இலக்கணம்?
உண்மையான
யதார்த்தமான
பயஙகள்
இங்குமல்லாமல் அங்குமல்லாமல் தடுமாறும் பெரும்பாலான மனிதர்களின் இயல்பான பயங்களை இந்த கவிதை படம் பிடித்து காண்பிக்கிறது. சின்ன எள்ளல் வெளிப்பட …கடைசி வரிகளில் கவிதையையும் பயத்தையும் நகைச்சுவையையும் பொத்திய கரங்களுக்குள் இருக்கும் எல்.ஐ.சி சின்னம் போல உச்சத்திற்கு ஏற்றி விட்டீர்கள். சிரித்து விட்டேன்.
பயங்கள் பற்றிய சிந்தனை தூண்டி விட்டீர்கள்.
சிறப்பான வெளிப்பாடு.
உமாமகேசுவரன் எத்தனை அழகாக உங்கள் கவிதை பற்றி எழுதி இருக்கிறார், கவிதையின் வெற்றி அதன் தாக்கம். வாழ்த்துகள்
வேணு