
36 ஆண்டுகளாக வெளிவரும் அழகியசிங்கரின் ‘ நவீன விருட்சம் ‘ 126 இதழில் வெளிவந்துள்ள வித்தியாசமான கதை, கவிதை கட்டுரைகளில் , தமிழவன் அவர்களின்’ இலக்கியம், சினிமா – இன்றைய நிலைமை’ யில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்துகள் மிகவும் சிந்திக்க வைத்தன.
உலகமே செயற்கை நுண்ணறிவின் வயமாக ஆகிவிட்ட இன்றைய கால கட்டத்தில் , எழுத்து, சினிமா போன்றவற்றில் பின் நவீனத்துவ செயல்பாடுகள் தமிழ் இலக்கிய உலகில் பின் தங்கி உள்ள நிலையைச் சுட்டிக் காட்டுகிறார்.
மலையாள உலகில் உள்ள விழிப்புணர்வு நம் தமிழகத்தில் இல்லை என்று வருத்தப்படுகிறார்.
ஆழமான இலக்கிய அறிவு என்பது
ஆங்கிலம் மூலம் உலக இலக்கிய போக்கை அறிவதும்
விமர்சன உலகப் போக்கை உள்வாங்குவதும்
தமிழ்ப் படைப்பிலக்கிய மரபை ஆழமாய்ப் பரிசீலிப்பதும்
என்ற மூன்றும் ஒன்று சேர்வதில் இருக்கிறது
என்கிறார்.
‘இலக்கியம் என்பது தொடர்கதை அல்ல. வாழ்வையும் மொழியையும் இணைக்கும் ரகசியம்’ என்று முடிக்கிறார். படித்து சிந்திக்க வேண்டிய கட்டுரை.
அதே போன்று எம் டி முத்துக்குமாரசாமி அவர்கள் மொழிபெயர்த்துள்ள போர்ஹெஸ் கவிதை ‘ வருட இறுதி ‘ எம் டி எம் ‘ அவர்கள் முன்பு சொல் புதிது நிகழ்வில் விளக்கிய ‘பிரதிநிதித்துவம் அற்ற கவிதை ‘ நடைக்கு சிறந்த உதாரணம்.
ஒரு பருவத்திற்குப் பின்பு அடுத்தது ,போன்ற சில இயற்கை விபரங்களை முதலில் வெளிப்படுத்தி , காலமென்ற புதிருக்குள் நம்மை அழைத்துச் சென்று , ஆற்றின் துளிகளாய் இருந்தாலும், நம் சாத்தியங்கள் முடிவில்லாதவை என்று அறிவுறுத்தி , அசையும் நம்மில் உள்ள ஒன்று அசையாத அற்புதம் என்று முடித்து , ‘வருட இறுதி ‘ யில் அடுத்த ஆண்டுக்கு காத்திருக்கும் மனிதனுக்கு , காலத்தின் புதிரை விடுவித்து, காலத்தைக் கடந்த கடவுளும் நாமும் ஒன்று என்ற உணர்வை உருவாக்குகிறார்.
சிந்திக்க வைத்த கவிதை . இதன் நடையும் வேறு . நயமும் வேறு, . படித்து ரசியுங்கள்.
இது போன்று இன்னும் பல படைப்புகள். எனது ‘ நம்பிக்கை ‘ என்ற கவிதையும் இதில் வெளிவந்துள்ளது. அழகியசிங்கருக்கு நன்றி. 🙏
