கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் /சிவபெருமானுக்கு தீபாவளி எப்பொழுது?

ஆசிரியர் கலைமகள்

எல்லோருக்கும் எனது தீபாவளி நமஸ்காரங்கள்.தீபாவளி’ என்றால் தீபங்களின் வரிசை (தீப+ ஆவளி) எனப் பொருள் கொள்ள வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்! தீபாவளியன்று அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி இறைவனை வழிபடுவது தேசம் முழுவதும் மரபாக உள்ளது.
தீபாவளி திருவிழா கி.பி. 16 ஆம் நூற்றாண்டு முதல் திருக்கோயில்களிலும் கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்கள் திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலில் உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டிலும் திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேட்டிலும் காணக் கிடைக்கின்றன.
திருப்பதி திருமலைக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு கி.பி. 1542 ஆம் ஆண்டில் தமிழில் பொறிக்கப் பட்டுள்ளது! திருப்பதி திருவேங்கடவனுக்கு ‘தீவாளி நாள் அதிரசப்படி இரண்டு’ என்ற அமுதுபடி கட்டளை பற்றி கல்வெட்டில் குறிப்பு காணப்படுகிறது!
அதேபோல திருவாரூா் மாவட்டத்தில் உள்ள சித்தாய்மூா் சிவாலயத்து இறைவன் பொன்வைத்தநாதருக்கு ஆண்டுதோறும் தீபாவளி நாளில் சிறப்பு அபிஷேகம் செய்ய அப்பகுதியில் உள்ள பல கிராம மக்களும், ராஜாங்க அலுவலா்களும் சோ்ந்து தாங்கள் பெறும் கூலியிலிருந்து ஒரு சிறு தொகையை இறைவனுக்கு அளித்துள்ளனர். பல விழாக்களை இத்தொகையில் இருந்து நடத்தியுள்ளனா் என கி.பி. 1753 டிசம்பா் ஏழாம் தேதி எழுதப்பட்ட இச்செப்பேட்டின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது!
தமிழகத்தில் தீப வழிபாடு சிறந்து விளங்கியுள்ளது. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில், ‘இரும்புசெய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇ- நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது…’ என்று பாடுகிறார் நக்கீரர் (நெடுநல்வாடை: 42- 43). சங்க காலத்தில் தமிழகத்தில் தீப வழிபாடு நிலவியதற்கு இப்பாடல் சான்றாக விளங்குகிறது. கார்த்திகை மாத தீபத்திருநாளையே இது குறிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
புத்தர் போதிகயாவில் ஞானம் பெற்ற பிறகு, அவரது தந்தை அரசர் சுத்தோதனர் மகனின் வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர், அவரைப் பார்க்க விரும்பி மந்திரி உள்பட பலரைத் தூத அனுப்பினார். எல்லோரையும் துறவியாக்கி தன்னுடைய போதனைகளை உபதேசமாக வழங்கினார் புத்தர். போதனைகளைப் பெற்றுக் கொண்ட மந்திரி புத்தரை அன்புடன் கபிலவத்துவிற்கு அழைத்து வந்த நாள் தான் தீபாவளி பண்டிகை என (ஐப்பசி அமாவாசையை)புத்தர்கள் கொண்டாடுகின்றனர்.இந்நிகழ்வு ‘சிதவிரகாதை’ என்னும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்று சிவன் பார்வதியுடன் தாயக்கட்டம் ஆடியதாக ஆதித்திய புராணம் கூறுகிறது. தீபாவளி நாளன்று சிவன் கோயில்களிலும் இறைவன் இறைவி திருமேனிகளுக்கு எண்ணை அபிஷேகங்கள் செய்யப்பட்டு புத்தாடை அணிவிக்கப்பட்டு சிறப்பாகத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்!
திருமாலுக்கு உரிய பண்டிகை ஆயிற்றே தீபாவளி! சிவபெருமானுக்கு உண்டா? எந்தப் பதிகத்திலும் குறிப்பு இல்லையே என்று கேட்கலாம்? இது நியாயமான கேள்வியும் கூட! சிவபெருமானுக்கு எல்லா நாளுமே தீபாவளி தான்! தினசரி தலையில் கங்கையைச் சுமந்தபடி கங்கா ஸ்நானம் செய்து கொள்ளுகிறவர் அல்லவா சிவ பெருமான்! தினசரி கங்கா ஸ்நானம் செய்தாலும் தீபாவளியன்று காசி விஸ்வநாதர் கோவில் உள்பட எல்லா சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறுகின்றன………