லக்ஷ்மி ரமணன்./எல்லாம் குப்பை மயம்..

வனிதா கோயிலுக்குப்போகிறவழியிலிருந்த
முனைத்திருப்பத்தில் அந்தக்குப்பைத்தொட்டி
மல்லாந்துகிடந்தது. அதன் சக்கரங்கள்தேய்ந்துபோய்,
மேல்விளிம்பும் உடைந்துபோன நிலையில். அதிலிருந்து
கீழே பரவலாக விழுந்துகிடந்த குப்பை குட்டி
கோபுரங்கள் வடிவில் சாலைமறியல்
செய்வதுபோல் விழுந்து கிடந்தது.
பின்னால் நடந்துவந்த பாட்டியிடம்
“எத்தனைநாளாக இப்படி குப்பை ரோடை
அடைச்சுக்கிட்டு அசிங்கமாக் கிடக்குது பாட்டி”
என்றுகேட்டாள்.
“அதை ஏன் கேட்கிறே. போனவாரம் பெரிய
மழை கொட்டித்தே அதிலிருந்தே இப்படிக்
குப்பை ரோடை அசிங்கமாக்கிக் கிட்டிருக்குது.
யாரும் கண்டுக்கவேயில்லை”
“கவலைப்படாதீங்க. அப்பாகிட்டே சொல்லி
ஏதாவது பண்ணச்சொல்லறேன்.”
வனிதா கைப்பேசியை எடுத்து அந்தக் குப்பை அசிங்கத்தை போட்டோ எடுத்த
பிறகு பாட்டியிடம் விடைபெற்றுக்கிளம்பி
வீட்டுக்கு வந்து அப்பா ஆனந்திடம் போட்டைவைக்
காட்டி அந்த அசிங்கத்தை மன இறுக்கத்துடன் காட்டினாள்.
அவர் உடனே அக்கம்பக்கத்திலிருந்தவர்க
ளுக்கு பிரச்சினையை விளக்கி, குப்பை
சாலையை அசிங்கப்படுத்திய இடத்திற்கு
அழைத்துச் சென்றுகாட்டி அங்கே புதிய குப்பைத்தொட்டி
யொன்றைவைத்து நிலமையை சரிசெய்யும்படி கடிதம் எழுதி
அத்தனைபேரிடமும் கைஎழுத்துவாங்கி
மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில்போய்
கொடுத்துவிட்டுவந்தார்.
தேர்தல் வரவிருக்கும் காலம் என்பதாலோ
என்னவோ உடனே நிலமையை சீர்படுத்தும்
வேலை மறுநாளே துவங்கியது.
அடுத்த சில நாட்களிலேயே முனைத்திருப்பத்தில்
நீல நிறத்தில் அழகான குப்பைத்தொட்டி
ஒன்று நிமிர்ந்து நின்றது. சாலையைத் தீவிரமாக ஊழியர்கள் சுத்தம் செய்தார்கள்.
ஆனால்…
இரண்டுநாட்களுக்குப்பிறகு வனிதா அந்தப்பக்கமாகப்போனபோது…..
குப்பைத்தொட்டிக்கு அர்ச்சனை செய்தமாதிரி
சுற்றிலும் குவிந்திருந்த குப்பை மறுபடியும்
சாலையை அசிங்கப்படுத்தத் தொடங்கியிருந்தது. அதற்கு என்னகாரணம்.?
கனமழையோ காற்றோ இல்லை.
அவசரமும் சோம்பேறித்தனமும் காரணம்.
நின்ற இடத்திலிருந்தே குப்பையைத்தூக்கி எறிந்துவிட்டு அலட்சியமாகப்போய்விடும்
மக்கள் திருந்தினால்தான் சுத்தம் சுகம்தரும்
என்பதை உறுதியாக நம்பலாம்!