சசிகலா விஸ்வநாதன்/அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அழகிய சிங்கரின் என்பா

      (1)

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கனிவுடன் சொல்கிறது; அனைத்து ஊடகங்களும்,
பொருத்தமான வாசகம்; பொருத்தமான நாளில்,
எனக்குத்தான் கொஞ்சமும் பொருந்தவில்லை.

   (2)

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
அனைவரும் சொல்கிறார்கள் இன்முகத்துடன்; அனைவருக்கும்.
அறிந்தவருக்கும், அவ்வளவாக அறியாதவருக்கும் கூட;
நல்ல பழக்கம்தான்; தொடரட்டும்.

  (3)

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
வாழ்த்துகள் எல்லாம் பலிதமானால் நன்மையே.
வாழ்த்துகளின் நேயம் நலம் பயக்கும்.
வாயாற வாழ்த்துவோம், நாமும்.

 (4)

வண்ண வண்ண உடுப்புகளின் அணிவரிசை;
இனிப்பு நிறைந்த அட்டைப் பெட்டிகள்;
சிதறி கிடக்க; மனம் நிறைய;
மக்களைத் தேடுகிறது,மனம்.

        (5) 

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வாய் வார்த்தையாகச்
சொல்வதில் பயனென்ன?
உதவிக் கரம் நீட்ட முந்துங்கள்
முன்கை நீள முழங்கையும்.