
இன்று மனோஜ் பவன் ஓட்டலுக்குச் சென்றேன். மனைவி பெண் வீட்டிற்குப் போயிருந்தாள். மனோஜ் பவன் ஒரு விசித்திரமான ஓட்டலாக மாறிக்கொண்டு வருவதாக நினைத்தேன்.
எப்போதும் அங்குக் கூட்டம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இன்றோ கூட்டம் இல்லை. வழக்கம்போல் மனோஜ் பவன் ஓட்டலில் என் இருப்பிடத்தில் உட்கார்ந்திருந்தேன்.’
என் எதிரில் யாருமில்லை. வழக்கம்போல் மினி டிபன் ஆர்டர் செய்தேன். திடீரென்று எதிர்சீட்டில் யாரோ உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியது.
உற்றுப் பார்த்தேன். யாரும் இல்லாததுபோலும் தோன்றியது.
‘நான்தான்’ என்று மெல்லிய குரல் கேட்டதுபோல் இருந்தது. பூதம்.
எப்போதோ விட்டுவிட்டோமே பூதத்தை. ஏன் திரும்பவும் வருகிறது பூதம்?
“என்ன வேண்டும்?” என்று கேட்டேன்.
“எனக்குப் பசிக்கிறது. எனக்கும் டிபன் வேண்டும்?”
“உனக்கு வாங்கிக் கொடுத்துக் கட்டுபடியாகாது. சரி சொல்லு.”
“முதலில் 20 இட்லி,”
கேட்டவுடன் கலவரப்பட்டேன். நான் மினி டிபனை ஆர்டர் செய்திருந்தேன் எனக்கு. திரும்பவும் சர்வரைக் கூப்பிட்டு, “20 இட்டிலி வேண்டும்,” என்றேன்.
என்னைச் சந்தேகத்துடன் பார்த்தான். “பார்சலா சார்.”
“இல்லை இல்லை. எதிரில் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். அவர் சாப்பிட.”
“எதிரில் யாருமே இல்லை, சார்”
“ஒரு பூதம் உட்கார்ந்திருக்கு. உங்கக் கண்ணுக்குத் தெரியாது.”
பதற்றமடைந்து விட்டான் சர்வர். எடுத்துக்கொண்டு வந்தான் 20 இட்லிகளை. அவன் பதற்றத்தைப் பார்த்து மற்றவர்களும் என் டேபிளில் குவிந்து விட்டார்கள்.
“பூதம் எப்படிச் சாப்பிடுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்,சார்.”
டேபிளில் வைத்தவுடனே இட்லி எல்லாம் மாயமாய் மறைந்து விட்டது.
பூதம் சாப்பிட்டவுடன், “தோசை 10 வேண்டும்,” என்றது.
மிரண்டு விட்டேன் நான்.
சர்வரைப் பார்த்து, “பத்து தோசை எடுத்து வா,” என்றேன்.
சர்வர் ஆச்சரியத்துடன், “எங்கள் கண்ணுக்கு எதுவும் தெரியலை, சார்” என்றான்.
கொஞ்ச நேரம் கழித்து, பத்து தோசைகளை எடுத்து வந்தான் சர்வர்.
பூதம் அதையும் சாப்பிட்டு மறைந்து விடடது.
சிறிது நேரத்தில் சர்வர் வந்தான். என்னைச் சுற்றி இருந்த கும்பலும் குறைந்து விட்டது.
“பூதம் போய் விட்டது. இனிமேல் வராது,”என்றேன் என் முன்னால் இருந்தவர்களைப் பார்த்து.
சர்வர் பில்லைக் கொண்டு வந்து கொடுத்தான்.
31.10..2024
