எழுத்துக்கு மரியாதை – லேடீஸ் ஸ்பெஷல் ஸ்டைல்!/ஜெ.பாஸ்கரன்

“லேடீஸ் ஸ்பெஷல்” 2024 ஆம் வருட தீபாவளி மலர் வெளியிடப்பட்டதே வித்தியாசமாக இருந்தது. குவிகம் zoom மீட்டிங்கில் சிறப்பாக வெளியிடப்பட்டது! மலரில் எழுதிய சிலரும் பங்கு கொண்டு, மலரைப் பற்றிய தங்கள் அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொண்ட நல்ல அறிமுகக் கூட்டமாக அமைந்தது. ஆசிரியர் கிரிஜா ராகவனின் புதல்வர், ஶ்ரீராம் ‘கவனச் சிதறல்’ குறித்த சிற்றுரையாற்ற, இனிமையாக முடிந்தது அந்தக் கூட்டம்.

‘முருகன்’ கருப்பொருளுடன் உருவாகியுள்ள லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில், கிட்டத்தட்ட 40 எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வழங்கியுள்ளார்கள். சிறப்பாக வந்துள்ள மலரை அறிமுகம் செய்து, ஒரு விமர்சனமும் செய்யும் விழாவில், எழுத்தாளர்களுக்கு மரியாதை செய்யும் இனிய பணியினையும் சேர்த்து, வித்தியாசமாகக் கொண்டாடினார் கிரிஜா ராகவன்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள, நூல் வெளியீட்டுக் கூடம் மாலை 5.30 மணிக்கே நிரம்பத் தொடங்கிவிட்டது. காப்பி, ஸ்நாக்ஸ் கொடுத்து, வாசலிலேயே வரவேற்றனர் கிரிஜா ராகவனும், ஶ்ரீராமும்! கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் வந்திருந்தனர். லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர், நவம்பர் இதழ், கிரிஜா ராகவன் எழுதியுள்ள புத்தகங்கள் எல்லாம் அரங்கிலேயே கிடைத்தன.

ஆறு மணிக்குத் தொடங்கிய விழாவில், திருப்புகழை இறைவணக்கமாகப் பாடியவர் திருமதி ரேவதி பாலு (எழுத்தாளர் ரஸவாதியின் மகள்) – மலரின் கருப்பொருளுக்கு ஏற்ற இறைவணக்கப் பாடல்!

தலைமை ஏற்றுப் பேசிய திரு நல்லி செட்டியார், தன நினைவுகளிலிருந்து, தீபாவளி மலர் குறித்த பல நிகழ்வுகளைக் கூறினார். லேடீஸ் ஸ்பெஷலில் வந்த ஒரு கட்டுரையின் மூலம் ‘காரைச் சித்தரை’ப் பற்றி அறிந்து கொண்டதை சுவாரஸ்யமாகச் சொன்னார். நிகழ்ச்சியின் நிறைவு வரை இருந்து, எல்லா எழுத்தாளர்களுக்கும் சால்வை போர்த்தி, நினைவுப் பரிசும் வழங்கி கெளரவித்தார்.

தீபவாளி மலரைப் பற்றிப் பேசிய திருப்பூர் கிருஷ்ணன், பொதுவாக மலர்கள் தயாரிப்பதில் உள்ள சிரமங்களை – ஆசிரியர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், எழுத்தாளர்களின்/ ..களால் எழும் பிரச்சனைகள், கால தாமதம், விளம்பரதாரர்களினால் நேரும் கால தாமதம் (இந்த விளம்பரங்களே, இதழை அடுத்த ஒரு வருடம் நடத்த உதவும் நிதியின் ஆதாரம் என்றார்), இடப்பிரச்சனை – மிக இயல்பாக தனக்கே உரிய நகைச்சுவையுடன் சொன்னார். (‘மலரில்தான் நிறைய பக்கங்கள் இருக்கின்றனவே என்று 40 பக்கக் குறுநாவலைப் பிரசுரிக்கக் கேட்ட எழுத்தாளர், மலர் வெளியாகும் நாள் வரை நேர்காணல் கொடுக்க நேரம் இருப்பதாகக் கருதிய பிரமுகர் என பல சுவாரஸ்யங்கள்!). மலரில் வந்துள்ள கட்டுரைகளில் சிலவற்றை எழுதியவர்களையும், சிறுகதை எழுதிய அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்டார். மலருக்கு எழுதுபவர்கள், நேரத்தையும், படைப்பின் நீளத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். மறைந்த எழுத்தாளர்களின் படைப்புகளை விட, புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளிப்பதைத் தன் விருப்பமாகக் கூறினார். எழுத்தாளர்கள், தனக்கு நன்கு வருகின்ற ஒரு இலக்கியத் துறையில் – சிறுகதை, கட்டுரை, அறிவியல் போன்றவை – அதிக கவனம் செலுத்துவது நல்லது என்றார். அனுபவத் தெறிப்புகளுடனும், நேர்மறை விமர்சனங்களுடனும் அவரது பேச்சு பல கவனத்திற்கொள்ளத்தக்க செய்திகளைக் கொண்டிருந்தது.

‘Creator’ என்ற ஒற்றைச் சொல்லில் வியாசர், விவேகானந்தர், ஆதிசங்கரர், பாரதியார் எனத் தொடங்கி, படைப்பாளிகளின் தொடர்பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என அருமையானதொரு உரையாற்றினார் ஶ்ரீராம். தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பதன் அவசியத்தைக் கூறினார்.

ஓவியர் தமிழ், வேலு பிள்ளை மற்றும் மலரில் பங்களிப்பு செய்துள்ள எல்லா ஆர்டிஸ்டுகளுக்கும் கவுரவம் செய்யப்பட்டது.

மாலன், இரமணன், லேனா தமிழ்வாணன், தேவி பாலா, காலச்சக்கரம் நரசிம்மா, அழகிய சிங்கர், கெளரி கிருபானந்தன், டாக்டர் ஷ்யாமா, யோகா, தயாளன், இதயகீதம் ராமானுஜம், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ஜெயராமன் ரகுநாதன், இந்திர நீலன் சுரேஷ், பாலசாண்டில்யன், நித்தியானந்தம், பத்மினி பட்டாபிராமன், தி.சுபாஷிணி, ஹெச் என் ஹரிஹரன், ஆர் கே ராமநாதன் என அரங்கு முழுதும் பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும்!

விழாவினை ஏற்பாடு செய்து, ஒருங்கிணைத்து, நடத்திய கிரிஜாராகவன் பாராட்டுக்குரியவர்.