
அல்லிக்கேணி அழகனே! ஆண்மகனே!
நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையனே!
அமரத்துவம் பாரதிக்கு அளித்தவனே! என்
வாழ்விற்குத் துணையாக வந்தோனே!
மீசை வைத்துப் பாரதியைச் சாய்த்தோனே! என்
ஆசையெல்லாம் அறிந்து அடக்கி ஆள்வோனே!
சிவனே மட்டும் என்று சிந்தை வைத்திருந்தவனை
சில கணம் என்னைப் பார் என்றே சொன்னவனே!
வரிசையிலே வந்து தரிசனம் நான் செய்கையிலே
பார்வை செலுத்தி என் பார்வை மாற்றியவன்!
கார்மேகம் போல் வந்து கருணை மழை பொழிபவனே!
கடைசிவரை என் துணையாய்க் கைப்பிடித்து வருவோனே!
நண்பனே! தோள்மேல் கை போட்டுத் தோழமைதான் கொண்டவனே!
தடுக்கி விழும்போதெல்லாம் கை தூக்கி விட்டவனே!
சிறுவயதில் எங்கோ என் வாழ்வில் வந்தவனே!
இன்றும் இனியவனாய் நினைவுகளில் நிற்பவனே!
பார்த்தனுக்கு சாரதியே! பார்த்தவர்க்கெலாம் சாரதி நீ!
பார்வை பட்டு விட்டால் பாவங்கள் தொலைந்து விடும்!
பேராண்மை கொண்டவனே! பெருங்காட்சி தந்தவனே!
பாரதி பாரதி என்றென்னை பரவசம் கொள வைத்தாய்!
எதுவும் கேட்க உன்னிடம் நான் வரவில்லை!
எந்தக் குறையும் சொல்லிட என்னிடம் இல்லையடி!
என்றும் உன் தோழமை எனக்கே வேணுமடா!
என் தோளில் உன் கையே எப்போதும் வேண்டுமடா!

Arumai !👏👏🙏🙏