தெலுங்கு : வம்சி கிருஷ்ணா/அம்மாவின் தூக்கம்



மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

எந்த நள்ளிரவிலேயோ திடீரென்று
விழிப்பு வந்து பார்த்தால்…
உள்ளங்காலுக்கு எண்ணெய் தேய்த்தபடி
கட்டில்மீது அமர்ந்த நிலையில்
தென்படுவாள் அம்மா
‘ஏனம்மா தூக்கம் வரவில்லையா?’
என்று கேட்டால்,
இன்னும் படுத்துக் கொள்ளவில்லையடா
என்று பதில் வரும்

மறுநாள் காலையில்
ரயிலுக்குப் போகவேண்டும் என அலாரம்
வைத்துக் கொண்டால்
அலாரம் அடிக்கும் முன்பே
தட்டி எழுப்புவாள் அம்மா

அம்மா எப்பொழுது உறங்குவாள்
என்பது மில்லியன் டாலர் கேள்வி

அம்மா தன்னை மறந்து தூங்குகையில்
பார்க்க வேண்டும் என்பது
என் விருப்பம்

அதை நிறைவேற்றதானோ என்னவோ
அம்மா மீளாத்
துயிலில் ஆழ்ந்து விட்டாள்.