தொகுப்பு : எஸ்.மகாராஜன் / ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் கடிதங்கள்

அருமை நண்பர்
மகராஜன் அவர்களுக்கு

ஓம
C/o. ‘கல்கி’ 23-7-45

திருவள்ளுவர் விழாவுக்கு அழைப்பு குற்றாலம் போய்விட்டு இன்று இங்கே வந்து சேர்ந்தது. விழாத்தான்; திருவிழாத்தான்; பத்து நாளும் நடக்கிறது. ரொம்ப சந்தோஷம். நண்பர் கல்கிக்கு அழைப்புப் பத்திரிகையைக் காட்டினேன். ரொம்ப ரொம்ப வியந்தார். பலதிறப்பட்டவர்கள், கிறிஸ்தவர், பெண்டுகள், ஹிந்துக்கள் எல்லாரும் இப்படி ஒன்று கூடி, தமிழ் ஆசிரியருமே ஒன்று கூடி, விழா நடத்துகிறார்கள். எல்லாம் மகாராஜன் கிருபை சொன்னேன். கல்கிக்கு ரொம்ப திருப்தி. தான் என்றும் அப்படியெல்லாம் கூட்டிச் செய்ய ஆசாமி ஒருவர் இருந்தால்த் தானே காரியம் கைகூடும் என்றார்கள்.

தலைவர்கள், பிரசங்கிகள், விஷயங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது திருக்குறளில் மிச்சமே இருக்காது போலத் தோன்றுகிறது. ஆனால்,

தொட்டனைத்தூறும்
…………
அல்லவா அது.
……………..
தாங்கள் குற்றாலத்துக்கு வந்தபோது நானில்லை. கோர்ட் திறப்பதற்கு முன்கூட்டியே தூத்துக்குடிக்குப் போய்விட்டதாகவும் கேள்விப்பட்டேன்.
நான் இங்கு வந்து நாலுநாள் ஆகிறது. 27உ கல்கி சதாசிவன், எம்.எஸ்.ஸுடன் மதுரைக்குப் புறப்படுகிறேன். மதுரையிலிருந்து அப்படியே நேரே குற்றாலந்தான்.
குற்றாலத்திலிருந்து திரும்ப 10-8-’45 அன்று புறப்பட்டு நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை பரிசு விழாவுக்காக சென்னைக்கு வரவேண்டும். 11-8-’45 அன்று அந்த விழா.
இரண்டு நாளைக்கு முன் பெங்களூரில் விழா நடத்தி ரூ 3000/- கொடுத்தார்கள்; சென்னையில் ரூ 15,000/-கொடுக்க உத்தேசம், தேசாபிமானிகள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ரொம்ப சந்தோஷம்.
நம்முடைய ”சோமு’, குற்றாலத்தைப்பற்றி ஒரு நல்ல பாடல் பாடியிருக்கிறான். ரொம்பவும் வாய்ப்பான பாடல்கள். குற்றாலத்தில் பத்து நாளாகக் கம்ப ராமாயணம் முடிந்ததும் வாசித்து வந்தேன் – காலை 11 முதல் 12 மணிவரை. ஐம்பது, அறுபது, பேர் கூடுவார்கள். ரொம்பவும் ரஸித்துக் கேட்பார்கள். ஒரு நாள் ராமாயணம் முடிந்ததும் சபையோருக்கு சோமுவின் பாடல்களைப் பாடிக்காட்டினேன். எல்லாரும் ரொம்ப அனுபவித்தார்கள்.
குற்றாலத்துக்கு வந்தவர்கள் எல்லாரும் மலை, செவ்வானம், மேகம், மலை ஓடைகள், குரங்குகள், கோயில் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள். அந்த அனுபவங்களைத் தாளத்திலும் தமிழிலும் வைத்துப் பரிமாறும்போது மனம் இழுபட்டுக் கூத்தாடவே ஆரம்பித்து விடுகிறது. பாடலை அனுபவிக்கிறது என்றால் அது தானே.
திருமூலர் அனுபவித்த அனுபவத்தைக் கொஞ்சமாவது ஒட்டி உணர்ந்திருந்தால்தானே கவியை உணரவும் கூத்தாடவும் முடியும்.
பள்ளிக்கூடங்களில் இந்த உண்மையைச் சிறிதும் கவனிக்கிற தில்லை. ஷேக்ஸ்பீயர் வகுப்பிலானாலும் சரி, கம்பர் வகுப்பிலானாலும் சரி, கவனிக்கிறதில்லை. பிறகு கவி அனுபவம் என்பதேது?
இதில் ஒரு பெருங்கேடு! மாணவர்களது உள்ளம் வறண்டு போகிறது ஒன்று; அதைவிட வறண்டு போகிறது ஆசிரியர்களது உள்ளம். இது முற்றிலும் உண்மை. உலகம் எங்குமே கண்ட உண்மை. “பள்ளிக் கணக்கு புள்ளிக் குதவாது” என்றார்கள். அதைவிடக் காரமாய் “ஏட்டுச் சுரக்காய்” என்றும் சொன்னார்கள். மேல்நாட்டார் ‘academic’ ‘Scholasticism’ ‘Pedagogue’ என்ற வார்த்தைகளை வேண்டிய மட்டும் உபயோகப்படுத்தத் தான் செய்கிறார்கள். ஆனாலும் சீக்கு குணத்துக்கு வரவில்லை.
வைத்திய சாஸ்திரத்திலும் குணத்துக்கு வராத சீக்குகள் என்று ஒரு பட்டியல் உண்டு. அந்தப் பட்டியலுக்குள் வந்தது தான் ‘கல்வி’ யும்.
ஜாகை பழைய வீடுதானே. அதைவிட்டு விடக் கூடாது. ஆரோக்கியத்துக்கான முறையில் வீடு, தெரு, ஊர் எல்லாம் அமைந்து விட்டது. அதோடு அம்மாள் குழந்தைகள் எல்லாரும் உல்லாச
மாயிருக்கிறார்கள். சாவகாசமாய் அங்கு வந்து தங்கினால் என்னுடைய உடல் உள்ளம் எல்லாம் பயனடையும் என்பது என் துணிபு. அதற்கு வாய்க்கும் சமயத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
மலைவாசம் போல கடல் வாசத்துக்கு இடம் இருக்கிறது எனக்கு. இந்த எண்ணத்திலேயே பிரயோசனம் இருக்கிறது. அம்மாள் குழந்தைகள் எல்லாருக்கும் அன்பு.