ப.மதியழகன்/வல்லான் வகுத்த வழி

1)யாருக்கு வேண்டும் பதவியும் அதிகாரமும்
யாருக்கு வேண்டும் மகுடமும் மாண்பும்
தீது எதுவென்று அறிகிலார் எல்லாம்
வல்லான் வகுத்த வழி!

2)இனிப்பென்றால் இனிக்கும் கசப்பென்றால் கசக்கும்
வாழ்வும் மரணமும் இணை கோடுகள்
எவருக்குத் தெரியும் சூட்சுமம் எல்லாம்
வல்லான் வகுத்த வழி!

3)நம்மால் ஆவது ஏதும் உண்டோ
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
வாழ்வென்பது சுத்த அபத்தம் எல்லாம்
வல்லான் வகுத்த வழி!

4)இப்படியே போகட்டும் என விட்டுவிட்டேன்
எனது இருப்பின்றி உலகம் இயங்கும்
தெய்வம் ஒன்றா இரண்டா எல்லாம்
வல்லான் வகுத்த வழி!

5)யாக்கை என்பது பொய் பொய்
காண்பது எல்லாம் மாயைத் தோற்றம்
நடமாடும் பிணங்களே நாமெல்லோரும் எல்லாம்
வல்லான் வகுத்த வழி!