
இன்னுமொரு அரிய கலைஞனை இழந்து விட்டோம். டில்லி கணேஷ் அவர்களின் மரணச் செய்தி அறியவந்ததுமுதல் அவரைப் பற்றிய நினைவுகள்
மனதில் குமிழிட்டபடி இருக்கின்றன.
எழுபதுகளின் பிற்பகுதி. நான் வேலையில் சேர்ந்துவிட்ட காலம்.
டெல்லி கணேஷ் சாரின் உறவினர் ஒருவர் எனக்கு மேலதிகாரியாக இருந்தார். அந்த அதிகாரியும் சபரிமலைக்குச் செல்பவர் தான்.
இருவரும் மலை யாத்திரையின்போது பயன்படுத்த, இரண்டு காத்திரமான எவரெடி டார்ச் லைட்டுகளை டில்லி கணேஷ் வாங்கிவைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், என்னைச் சென்று வாங்கிக் கொள்ளுமாறும் அந்த அதிகாரி சொல்லியிருந்தார்.
ஆறு பெரிய பாட்டரி செல்களில் அதிக ஒளிகூட்டும் சதுரமான பெரிய டார்ச் அது.
அந்தசமயம் கணேஷ் அவர்களை சந்திக்க வேண்டிய முகவரி வளர்ந்துவரும் அண்ணாநகர் பகுதியில் இருந்தது.
அவரைச் சந்திக்க ஒரு முன்னிரவில் சென்றிருந்தேன்.
அப்போது ஐயப்ப விரதத்திலிருந்ததால் கைல்களில் செருப்பு அணியவில்லை.
அந்தப் பகுதியில் சாலைகூட சரியாக அமையாதிருந்தது. தெருவிளக்கு கூட இல்லையென நினைவு.
ஒருவழியாக அந்த வீட்டை அடைந்து அறிமுகம் செய்து கொண்டேன். கணேஷ் சார் இன்முகத்துடன் நன்கு பேசினார். நான் வெளியில் எதுவும் சாப்பிடுவதில்லை என்பதால், இரண்டு வாழைப்பழங்களையாவது ஏற்றுக் கொள்ள வற்புறுத்தினார்.
உள்ளே சென்று எடுத்துவந்த இரண்டு டார்ச் லைட்டுகளையும் கொடுத்தார். அதற்கான பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார். எவ்வளவு வற்புறுத்தியும் ஏற்கவில்லை.
“உங்க சபரிமலை புண்ணியத்துல ஒரு பர்சண்ட்டு எம் பக்கமா தள்ளுங்கோ போறும்!” என்று விடைகொடுத்தார்.
பல வருடங்கள் சபரிமலை யாத்திரையில் அந்த ‘டெல்லி டார்ச்’ ஒளிர்ந்தது.
பின்னாட்களில், அவர் திரைத்துறையில் உச்சம் தொட்ட நாட்களில் அவரை வியந்து ரசித்திருக்கிறேன். பாலசந்தர் அவரை சிறப்பாக உபயோகப் படுத்தினார். கமலின் பல திரைப்படங்களிலும் அவரின் பங்களிப்பு மெச்சத் தக்கது. உடல்மொழியிலும் உச்சரிப்பின் விந்யாசங்களில் வெளிப்படுத்தும் நகைச்சுவை, மிகையில்லாத நடிப்பு என்று தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டார். டிவி நாடகங்கள் மேடை நாடகங்களிலும் முத்திரை பதித்தார். திஜாவின் பாயஸம் குறும்படத்தில் அவர் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்.
என் முகநூல் பக்கத்தில் சிலமுறை கருத்துகளும் இட்டிருந்தார் டெல்லி கணேஷ்.
தூக்கத்திலேயே அவரின் உயிர்பிரிந்தது என்று அறிகிறேன். அது நல்ல வாழ்வுக்கு இறைவன் தரும் ஆறுதல் பரிசு.
தூக்கமென்பதே மரணத்தின் ஒத்திகை தானே? ஒத்திகை தேவைப்படாத உன்னதக் கலைஞனின் கடைசி ஒத்திகையில் சிவபதம் சேர்ந்தது ஆச்சரியம்.
டில்லி கணேஷ் அவர்களின் ஆன்மா சாந்திபெற ஐயப்பனைப் பிரார்த்திக்கிறேன்.
