திருப்பூர் கிருஷ்ணன்/சிற்றிதழ் வரலாறு தந்தவர்

வல்லிக்கண்ணன் பிறந்த தினம் நவம்பர் 12, 1920 :
நினைவு தினம் நவம்பர் 9, 2006

  • தமிழின் தற்கால இலக்கியத்தில் தடம் பதித்த வல்லிக்கண்ணன், எழுத்து சார்ந்த பல துறைகளில் ஈடுபட்ட படைப்பாளி.
    ராஜவல்லிபுரம் என்ற தமது ஊரிலிருந்து வல்லி என்ற வார்த்தையையும் தமது இயற்பெயரான கிருஷ்ணசாமி என்பதில் உள்ள கிருஷ்ணன் என்பதைக் கண்ணனாக்கி அந்த வார்த்தையையும் இணைத்துக் கொண்டு வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதியவர்.
    தவிரவும் நையாண்டி பாரதி, சொனாமூனா, சொக்கலிங்கம், கெண்டையன் பிள்ளை, கோரநாதன், வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம், இளவல் போன்ற இன்னும் பல புனைபெயர்களிலும் ரா.சு. கிருஷ்ணசாமி என்ற இயற்பெயரிலும் எழுதிக் குவித்தவர்.
    அவர் பெரும் வெற்றி பெற்ற துறை கட்டுரைத் துறை. அதிலும் திறனாய்வு அல்லாத, தனிப்பட்ட முறையில் எந்த அபிப்ராயத்தையும் தெரிவிக்காத தகவல் சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் அவர் ஒரு நிபுணர்.
    பற்றில்லாத ஞானியைப் போன்ற இயல்பு அவரிடம் இயற்கையாகவே இருந்ததால், மிகைப்புகழ்ச்சியோ காட்டமான தாக்குதலோ இல்லாமல் உள்ளது உள்ளபடி கட்டுரையை வடிவமைக்கும் அரிய கலை அவருக்கு வாய்த்திருந்தது.
    வல்லிக்கண்ணனின் சில சிறுகதைகள் தமிழிலக்கியத்தில் நிலைத்து நிற்கக் கூடிய கலைநேர்த்தி நிறைந்தவை. சுதந்திரப் பறவைகள் என்ற தலைப்பில் அவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
    என்றாலும் அவர் அதிகம் கட்டுரைகளையே எழுதியதால் கட்டுரையாளராகவே கணிக்கப்படுகிறார். அவரைச் சிறந்த சிறுகதையாளராக இலக்கிய விமர்சகர் க.நா.சு. ஏற்றுக் கொண்டதில்லை.
    எனினும் க.நா.சு. உள்பட யாரும் அவரது கட்டுரையெழுதும் ஆற்றலைக் குறைகூறியதில்லை.
    கவிதை, நாவல் ஆகியவற்றையும் கூட அவர் எழுதினார். ஆனால் அவர் எழுதிய கவிதைகளை விடவும் நாவல்களை விடவும், பிறரது கவிதைகளைப் பற்றியும் நாவல்களைப் பற்றியும் அவர் எழுதிய கட்டுரைகள்தான் அதிகம் பேசப்பட்டன.
    அவரது அமர வேதனை என்ற கவிதை நூலை விடவும் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையைப் பற்றிய கட்டுரை நூல்தான் சாகித்ய அகாதமி பரிசுபெறும் அளவு புகழ்பெற்றது.
    வல்லிக்கண்ணன் மொழிபெயர்ப்புத் துறைக்கு ஆற்றிய தொண்டும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கதுதான். எனினும் த.நா. குமாரசாமி, த.நா. சேனாபதி, கா.ஸ்ரீ. ஸ்ரீ போன்றோரைப் போல அவர் மொழிபெயர்ப்புத் துறைக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார் என்று சொல்ல முடியாது.
    டால்ஸ்டாய் கதைகள், கார்க்கி கதைகள் உள்ளிட்ட சில வெற்றிகரமான மொழிபெயர்ப்புகளை அவர் செய்திருக்கிறார், அவ்வளவே.
    கு.ப. ராஜகோபாலனின் விடியுமா? என்ற சிறுகதை கலைநயம் நிறைந்த ஒரு புகழ்பெற்ற படைப்பு. அதே தலைப்பில் வல்லிக்கண்ணன் ஒரு நாடகம் எழுதியிருக்கிறார். நினைவுச் சரம், செவ்வானம் முதலிய ஒருசில நாவல்களையும் அவர் எழுதியுள்ளார்.
    எனினும் கட்டுரைக் கலையே அவரை அதிகம் கவர்ந்ததால் அதிக எண்ணிக்கையில் கட்டுரைகளையே எழுதலானார்.
    அவரது கட்டுரைகளைத் திறனாய்வுக் கட்டுரைகள் என்று சொல்லமுடியா விட்டாலும், திறனாய்வு செய்பவர்களுக்கு உதவக் கூடிய வகையில் எழுதப்பட்ட தகவல் கட்டுரைகள் என்று சொல்ல முடியும்.
    மிகுந்த நினைவாற்றலோடும் கடும் உழைப்பின்பேரிலும் அவர் அத்தகைய கட்டுரைகளை எழுதிவந்தார். அவரது அளப்பரிய வாசிப்பனுபவம் அவ்விதக் கட்டுரைகளைப் பிசிறில்லாமல் எழுதுவதற்கு அவருக்குக் கைகொடுத்தது.
    கட்டுரையாளர் வல்லிக்கண்ணன் என்று அவரை அழைப்பதற்கு அவர் அதிக எண்ணிக்கையில் கட்டுரைகள் எழுதினார் என்பது காரணமல்ல. அவரது எழுத்தாற்றல் அதிகம் வெளிப்பட்ட துறை கட்டுரைத் துறைதான் என்பதே இதற்கான காரணம்.
    தீபம், ஞானரதம் போன்ற இலக்கிய இதழ்களில் அவர் நிறையக் கட்டுரைகளை எழுதினார். அவை எல்லாமே தொகுக்கப்பட்டு விட்டதாகச் சொல்ல முடியாது. அவர் எழுதிய கட்டுரைகளின் எண்ணிக்கையை எண்ணிப் பார்க்கும்போது புத்தகங்களாக வந்திருப்பவை மிகச் சிலவே.
    வாசகர்கள் விமர்சனங்கள், எழுத்தாளர்கள் பத்திரிகைகள் போன்ற தலைப்புகளில் அமைந்த அவரது கட்டுரை நூல்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை.
    வல்லிக்கண்ணனின் கட்டுரைகள் நேர்த்தியான வடிவத்தைக் கொண்டவை. கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு, சிடுக்கில்லாத தெளிந்த நடை, படித்து முடித்ததும் மனத்தில் அது ஏற்படுத்தும் முழுமை உணர்வு என அவரது கட்டுரைகளின் பெருமைகள் பல.
    திடீர் திடீரென உரத்து முழங்காமல் அடங்கிய தொனியில் கட்டுரை முழுவதும் ஒரு சீரான தன்மையில் எழுதும் வல்லமை உடையவர் அவர்.
    புதிதாக எழுத்துலகிற்கு வந்த பல கிராமத்து இளைஞர்கள் தமக்கு அனுப்பிய படைப்புகளையெல்லாம் ஒருவரி விடாமல் கவனமாக வாசித்து அவர்களின் புத்தகங்களுக்கு வல்லிக்கண்ணன் அணிந்துரைகள் எழுதி அளித்தார்.
    வாழ்நாள் முழுதும் அந்தப் பணியை விடாமல் செய்துவந்தார்.
    இன்று முதல்தலைமுறைப் படிப்பாளிகள் பலர் முதல்தரமான படைப்பாளர்களாகவும் திகழ்கிறார்கள் என்றால் அதில் வல்லிக்கண்ணனின் பங்களிப்பு மிக அதிகம்.
    அவர் தந்த உற்சாகமும் ஊக்குவிப்புமே அவர்களைத் தயக்கமின்றித் தங்கள் பணியைத் தொடரச் செய்தது. இளைஞர்களை அதிக அளவில் ஊக்குவித்த படைப்பாளி என்ற வகையில் அவர் பெயரைக் கட்டாயம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
    ஒருசில விமர்சகர்களைப் பற்றி அவர்கள் படிக்காமலேயே பொத்தாம் பொதுவாக அபிப்ராயங்களைத் தெரிவிக்கிறார்கள் என்றும், அடுத்தவர்களின் கருத்துக்களைச் சார்ந்து தங்கள் கருத்துகளை அவர்கள் வடிவமைத்துக் கொள்கிறார்கள் என்றும் கடந்த காலங்களில் சர்ச்சை எழுந்ததுண்டு.
    ஆனால் வல்லிக்கண்ணனைப் பற்றி யாரும் எப்பொழுதும் அத்தகைய குற்றச்சாட்டைச் சொன்னது கிடையாது.
    எண்ணற்ற நூல்களை முழுமையாகப் படிப்பதை ஒரு வேள்விபோல அவர் தம் இறுதிநாள் வரை செய்துகொண்டிருந்தார். இந்தப் பண்பே அவரது மிகப்பெரிய பலமாக இருந்தது.
    வல்லிக்கண்ணன் தனி நபர்களைப் பற்றித் தீவிரமான கருத்துகளை ஒருபோதும் தெரிவித்ததில்லை. தன்னை எதிர்த்து எழுதியவர்களைக் கூட அவர்கள் கருத்து அது என அத்தோடு விட்டுவிடுவாரே தவிர அந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து எழுதியதில்லை.
    சமச்சீரான பார்வையுடன் நிதானமான அணுகுமுறையுடன் இலக்கியம் படைத்தவர் அவர். மிகுந்த பெருந்தன்மையோடு எல்லோர் எழுத்துகளிலும் இருக்கும் நல்லவற்றை மட்டுமே இனம்கண்டு பாராட்டியவர்.
    வல்லிக்கண்ணனை சிட்டி, சிவபாதசுந்தரம் ஆகியோரோடு ஒப்பிடலாம். அவர்களும் அபிப்ராயங்களைத் தருவதை விடவும் தகவல்களைத் தருவதிலேயே அதிக கவனம் செலுத்தியவர்கள்.
    அபிப்ராயங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடும். அதோடு காலப்போக்கில் மாறவும் கூடும். ஆனால் தகவல்கள் அப்படியல்ல. அவை ஆட்களைப் பொறுத்து வேறுபடுவதுமில்லை. காலப்போக்கில் மாறுபடுவதுமில்லை.
    வல்லிக்கண்ணனின் மாறாத நிலைத்த புகழுக்கு அவரது கட்டுரைகளின் இந்தத் தன்மைதான் காரணம்.
    சிற்றிதழ்களைப் பற்றிச் சரியான தகவல்கள் பெற வேண்டுமானால் அவரது நூல்களே ஆதாரம்.
    பழந்தமிழ்ச் சுவடிகளை உ.வே.சா. தேடித் தேடிச் சேகரித்ததுபோல், அண்மைக்காலச் சிற்றிதழ்களைக் காலக் கரையான் அரிப்பதற்குள் தேடித் தேடித் தொகுத்தவர் வல்லிக்கண்ணன்.
    பழந்தமிழ் இலக்கியத்திற்கு தமிழ்த் தாத்தா செய்த தொண்டுக்கு இணையானது தற்கால இலக்கியத்திற்கு வல்லிக்கண்ணன் செய்த தொண்டு. வல்லிக்கண்ணன் மட்டும் இல்லாது போயிருந்தால் பல சிற்றிதழ்களின் வரலாறே நமக்குக் கிட்டாமல் அழிந்திருக்கும்.
    வல்லிக்கண்ணன் நூற்றாண்டை ஒட்டி அவர் எழுத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற நூல் சிற்றிதழ்த் துறைக்கு வல்லிக்கண்ணன் ஆற்றியுள்ள மாபெரும் சேவைக்குச் சான்று.
    தகவல்களைத் தருவதில் மிக நேர்மையானவர் வல்லிக்கண்ணன். அவரது பெருமைகளில் மிக முக்கியமான பெருமை இது. எந்தத் தகவலையும் தன் கோணத்தில் திரித்துத் தரும் செயலை அவர் ஒருபோதும் செய்ததில்லை.
    சிலரை நடமாடும் பல்கலைக் கழகம் என்று புகழ்வதுண்டு. உண்மையிலேயே நடமாடும் பல்கலைக் கழகமாக வாழ்ந்து மறைந்தவர் வல்லிக்கண்ணன் என்றால் அது மிகையில்லை.
    (நன்றி: தினமணி)
    ………………………………….