
எழுதுகோலை எடுத்தேன்
ஏனோ அது
வாருகோலாய் மாறியது.
செய்வதறியாது
ஒரு கணம் திகைத்தேன்.
மறுகணம்
வருவது வரட்டு மென்றதனால்
பழங்குப்பையை
வாரி வாரி இறைத்தேன்.
புதுக் குப்பையைக்
கூட்டிக் குவித்தேன்.
கண்டு நின்ற
இலக்கியக் காவலர்
கூட்டமொன்று
ஓடோடி வந்தெனக்கு
பட்டாடை போர்த்தி
பரிசில் அளித்து
இலக்கிய மேதை உன் போல்
உலகிலுண்டோ”
என்றென்னை
வாயார வாழ்த்தி
வானளாவப் புகழ்ந்து,
அமரர் உலகில் புகுத்தி
அதற்கு மேல்
செய்யும் வகை அறியாது
தவித்தது.
அமரன் நான்
அவர்க் கென்ன
கைமாறு செய்ய
என்று சாகாமல்
சாகின்றேன்.
