ஷண்முக சுப்பையா/கரு

கவிதை பிறக்க
கருவுற வேண்டி
கட்டிலொன்றில்
மெத்தை விரித்து
கற்பனைக்காகக்
காத்துக் கிடந்தேன்.
வெளியே
யாரோ ஒருத்தி
யாரிடமோ
‘கருவிலே சிதைந்தது
முதற் குழந்தை
இறந்து பிறந்தது
இரண்டாவது குழந்தை
பிறந்ததும் இறந்தது
மூன்றாவது குழந்தை
இப்பொழுது நான்
கருவுற்றிருக்கிறேன்
அது என்னாகுமோ?
என்னையும்
கொண்டு தான் போகுமோ?
கண்டுதான்
தெரிய வேண்டும்”
என்று ஏனோ
ஒப்பாரி வைத்து
ஓலமிட்டாள்.
கேட்ட நான்
வந்த கற்பனையை
விரட்டிவிட்டு
நிம்மதியாய்
தூங்கி விட்டேன்.

ஷண்முக சுப்பையா/ஆராய்ச்சி – விருட்சம் நாளிதழ்