கோ. யுன் கவிதை/தமிழில் எம்.டி.முத்துக்குமாரசாமி

மேகங்களைப் பார்த்தல்

இதைவிட சிறப்பான வாழக்கை
எதிர்காலத்தில் இல்லை.

எனக்கு ஒன்பது வயதானபோது
பாட்டி இறந்துபோனார்.
எனக்குப் பதினேழு வயதான போது
தாய்வழிப் பாட்டி இறந்துபோனார்.
எனக்கு இருபத்தியோரு வயதானபோது
இடதுகைப் பழக்கமுள்ள தாத்தா குடிபோதையில்
வயற்காட்டின் ஓரத்தில் இறந்துபோனார்.
எனக்கு இருபத்தி ஆறு வயதானபோது
தாய்வழிப் பாட்டானார் இறந்து போனார்.
எனக்கு நாற்பது வயதானபோது
தந்தை இறந்துபோனார்.
எனக்கு அறுபத்தி மூன்று வயதான போது
எனது தாய் இறந்துபோனார்.
எனக்கு எழுபத்தி ஐந்து வயதானபோது
எனது மாமியார் மூன்று சிகரெட்டுகளைப்
புகைத்த பின் இறந்துபோனார்.

இப்போது எனது முறை
தவறிழைக்காத அருளின் படி.
ஒரு மேகம் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
நான் மௌனமாக
மேகங்களுக்கு அப்பால் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.