
ஆர்க்கே
அதிகாலை முதல் காரியமாய்
கிச்சன் ஜன்னல் திறந்தால்
படபடத்து பறக்கும்-அங்கே
அதுவரை இருந்த புறா.
நேற்று நுழைந்த பல்லி
அசந்த நேரம்
எங்கிருந்தோ நெளிந்துவந்து
வெளியேறும்–
வீடு விட்டு.
சட்டென குதித்துக் கிறீச்சிடும்
அணில் பிஸ்கட்டுக்காய்
வாலுயுர்த்தும்.
சிறு கிண்ணிப்பாலுக்காய்
உடல் முறுக்கி மியாவும்
வெள்ளைநிறத்தொரு பூனைக்குட்டி.
சூரியனின் கதிர் வலுத்து
கிச்சனுக்குள் நிகழும் —
நீள் செவ்வக ஒளிப்பாய்ச்சல்.
ஆர்க்கே.
அடுப்படியில் பாத்திர ஓசை.
உணவின் கைமணப் பரவல்.
பருப்புத்தொப்பி நெய்ச்சொட்டில்லாத
வெண்சோற்று சிறுகுவியல்
காகத்தாருக்கு பிடிக்காது.
தாளித்து பிசைந்த மற்றும் மிளகாய்
மிதக்கும் தயிர்ச்சோறு
சற்றே பரவாயில்லை–
காக சாருக்கு.
உணவைத் தின்பதைவிட
புத்தகங்களை குதறுவதும்
கணினி ஒயர்களை கத்தரிப்பதும்
எலிகளுக்கு பிடித்திருக்கிறது.
ஒரு வருகை தங்கலாகிவிடும்
பல சமயம்.
கிச்சனுறங்கும் இரவுவேளை
ஞாபகமாய் சாத்தப்படும்
சாளரமறிவதில்லை–
தான் ஒரு வீட்டின் அங்கமென்றாலும்
பறவை விலங்குகள்
தினமும் வருகை தந்து போகும்
இத்தனை ஜீவராசிகளின்
தலைவாசல் கதவே
தான்தான் எனும் உண்மையை.

“கிச்சனுறங்கும் இரவுவேளை
ஞாபகமாய் சாத்தப்படும்
சாளரமறிவதில்லை–” அழகான காட்சிப்படுத்தல்!
சாளரத்துக்கொரு விளக்கம் உங்கள் வார்த்தை ஜாலங்களில் சரளமாய். அற்புதம் ஆர்க்கே.