கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/அவியல் எந்த மாநிலத்தின் உணவு?


ஆசிரியர் கலைமகள்…………….

பருப்பு இல்லாமல் கல்யாணம் இல்லை என்பது போல “அவியல் இல்லாமல் எந்த ஒரு பந்தியும்” இல்லை என்கிற வழக்கு கிராமங்களில் உண்டு! எல்லா காய்கறிகளையும் நறுக்கி தயார் செய்யப்படும் உணவுதான் அவியல்.
திருநெல்வேலி சிறப்பு உணவுகளில் ஒன்று அவியல்.

கல்யாண சமையலுக்கு ஏற்பாடு செய்யப்படும் சமையல்காரர் கைதேர்ந்தவர் என்பதை நிருபிக்க வேண்டுமானால் அவியல் ருசியாக இருக்க வேண்டும்.

பொங்கல் திருநாளின் போது எல்லா வீடுகளிலும் அவியல் அவசியம் இடம்பெறும். காரணம் என்னவென்றால் கரும்புடன் எல்லா காய்கறிகளையும் வாங்கி புதுப் பானையையும் வாங்கி சீர் கொடுப்பார்கள். எனவே எல்லா காய்கறிகளையும் அன்று சரியாக நறுக்கி (பெரிது பெரிதாக நீளவாட்டில்) அவியல் செய்வார்கள்.

அவியல் ருசிக்க வேண்டுமானால்
தேங்காய் எண்ணெய் – வஞ்சகம் இல்லாத அளவு கொட்டப்பட வேண்டும்.கடுகு, சீரகம் தேவைக்கு ஏற்ப, கறிவேப்பிலை – ஒரு கொத்து,உப்பு – தேவைக்கு ஏற்றபடி இருத்தல் நலம்.மஞ்சள்தூள் சேர்த்தால் கூடுதல் வாசனையிருக்கும் என்றாலும் வெள்ளைநிறம் மாறிவிடும் என்பதால் பெரும்பாலும் மஞ்சள்தூள் சேர்ப்பதில்லை. அவியலோடு தயிர் சேர்க்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு!

மகாபாரத கதையின் படி விராடனின் சமையலறையில் சமையற்காரனாக தனது கடமைகளை பீமன் ஏற்றுக்கொண்ட பொழுது முதல் வேலைகளில் ஒன்று, பலவிதமான காய்கறிகளை நறுக்கி, ஒன்றாக வேகவைத்து, துருவிய தேங்காயைச் சேர்த்து தயாரித்த பதார்த்தம் தான் அவியல்.

அவியலின் பூர்வீகம்
கேரளா.பொதுவாக மிருதுவான காய்கறிகளையே அவியல் செய்ய பயன்படுத்துவார்கள். வாழைக்காய்
முலாம்பழம் (மெழுகு பாகற்காய்), கேரட், பீன்ஸ், கத்தரிக்காய்,வெள்ளரி, முருங்கை காய் , புடலங்காய், வெள்ளைப் பூசணி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் பயன்படுத்தப்படும்.
கோழிக்கோடு பகுதியில் பாகற்காயைஅவசியம் பயன்படுத்துவார்கள்.கொல்லம் பகுதியில் இருந்து வரும் அவியல் வகைகளில் தக்காளி இடம்பெறும்.

“அவியல்” என்ற வார்த்தை ‘வேகவைத்தது'(அவித்தது) அல்லது ‘தண்ணீரில் சமைத்தது’ என்பதைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது!!

கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் சாம்ராஜ்யத்தில் மன்னர் ஒரு பெரிய விருந்து நடத்தினார். ராஜ்யத்தில் உள்ள அனைவரும் சாப்பிட வந்துவிடவே பரிமாற கறிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ராஜா ஒரு புது யுக்தி செய்தார்.காய்கறிகள் நறுக்கப்படும் பொழுது நிறைய வீணாகி இருப்பதைக் கண்டார். வீணான எல்லா காய்கறிகளையும் சேர்த்து புதியதாக ஒரு பதார்த்தத்தைச் செய்யும்படி உத்தரவிட்டார்! அப்படி உருவான பதார்த்தம் தான் அவியல்!!

பட்டம் தாணு பிள்ளை (Pattom Thanu Pillai) (15 சூலை 1885 – 27 சூலை 1970), இந்திய விடுதலை இயக்க வீரரும், காந்தியவாதியும், சிறந்த நிர்வாகியும், வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தில் முதலமைச்சராகவும் பணியாற்றியவர். இவருக்கு அவியல் ரொம்ப பிடிக்கும். திருவாங்கூர் சமஸ்தான ராஜா உத்திராடத் திருநாள் (1922 மார்ச் 22 – 2013 டிசம்பர் 16) அவர்களுக்கும் அவியல் மீது ஒரு மையல் உண்டு!