லாவண்யா சத்யநாதன் / டெண்டர்

நேதாஜி நகரிலும் ராம் நகரிலும் வீதிகளிலுள்ள சுரங்கச் சாக்கடை மூடிகள்
காணாமல் போயிருந்தன. .
. பின்னிரவில் நைட் ஷிப்ட் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பியவர்கள் சிலர்
தம்பாவும் அவன் சகாக்களும் அவற்றை கழற்றி ட்ரைசைக்கிளில் எடுத்துச் செல்வதைப்
பார்த்திருந்தார்கள்
இரண்டு நகர்களும் தம்பாவின் லீலைகளைச் சகித்துக் கொண்டிருந்தன. .
. தம்பாவை சிறு பையன் என்று புறக்கணிக்கவும் முடியாது..பெரிய ஆளிலும்
சேர்த்தியில்லை. மிஞ்சிப்போனால் 16 அல்லது 17வயது இருக்கலாம். ரொம்ப
உயரமில்லை.. அகலத்தில் வளர்ந்த உடல்…கைகால்கள் தூண்களைப் போலிருக்கும்…அரை
ட்ராயரும் கலர் பனியனும் அணிந்து கொண்டு திரிவான்.. பெரிய பித்தளை சாவி
போல் ஒன்றை வைத்திருப்பான்..பட்டனை அழுத்தினால் உள்ளேயிருந்து கத்தி வரும்.
தம்பாவுக்கு தளபதிகள் இரண்டு பேருண்டு.. ஆண்கள் அலுவலகம் சென்ற
பிறகு மூவரும் நகர்வலம் வருவார்கள்
.அக்கா , ரெண்டு இளநீர் பறிச்சுக்கறேன்’ என்று வருவான் தம்பா. தளபதிகள்
மரமேறுவார்கள். தென்னை மரங்கள் மொட்டையாகிவிடும். தேங்காய்கள் ஏதேனுமொரு
நடைபாதைக் கடைக்கு விற்பனையாகியிருக்கும். ‘’அண்ணே தங்கச்சி வயசுக்கு வந்துருச்சி..
மஞ்சள் நீராட்டு விழா வெச்சிருக்கோம். ரெண்டு வாழை மரம் வேணும்’ . ’ வீட்டின்
உரிமையாளர் சம்மதத்துக்கு காத்திருக்கிற வழக்கம் கிடையாது. வாழை மரங்களை வெட்டி
எடுத்துக் கொண்டு போவான்.’‘திரௌபதி அம்மன் கோவில்ல கூழ் ஊத்தறோம்.’ ரசீது
புத்தகத்துடன் வருவான். கடைகளுக்குள் நுழைவான். கடையை நோட்டமிடுவான்.
நன்கொடைத் தொகையை அவனே நிர்ணயம் செய்வான். கடைக்காரர் தர மறுத்தால்
‘கடை நாஸ்தியாயிடும்’ மிரட்டி வசூலிப்பான் .அமீன் ஸ்டோர்ஸ் நைநா முகம்மது
நன்கொடை தர மறுத்துவிட்டார்.அவர் கடையில் இல்லாத நேரமாகப் பார்த்து ஒரு
கிலோ முந்திரிபருப்பை வாங்கிக்கொண்டு, கடை ஆள் காசு கேட்டபோது ‘கணக்குலெ
எழுதிக்கோ என்றான்’
‘எந்தக் கணக்குலே எழுத?.’ கடை ஊழியன் கேட்டான்.
‘திரோபதி அம்மன் கோவில் கணக்குன்னு எழுதிக்கோ’ என்று
சொல்லிவிட்டு பறந்துவிட்டான்..
தம்பா என்றால் அந்தப் பகுதி மக்களுக்கு அச்சம். நடுத்தர வர்க்கத்துக்குண்டான
அச்சம்.. என்றாலும் நல்ல ஒரு வாய்ப்புக் கிடைக்கும்போது அவனை போலீசில்
சிக்கவைக்கவேண்டுமென்று கருவிக் கொண்டிருந்தார்கள் . .
இப்போது சுரங்கச் சாக்கடை மூடிகளைத் திருடியிருக்கிறான்.அதனால் இரவு
நேரத்தில் வாகனத்தில் வருபவர்கள் தெருவிளக்குகள் எரியாத இடங்களில்
விபத்துக்குள்ளாகியிருந்தார்கள். அவனை அடக்கி ஒடுக்க இது நல்ல வாய்ப்பு. .
… குடியிருப்போர் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. காரசாரமான விவாதம் நடந்தது.
தலைவர் சீதாபதியும் செயலாளர் சாமுவேலும் உறுப்பினர்களுக்கு சில விஷயங்களை
தெளிவு படுத்தினார்கள்.
‘’நடைமுறை வேறு. சட்டம் வேறு. ஒரு குறிப்பிட்ட நபர்தான் மேன்ஹோல்களைத்
திருடினார் என்று புகார் கொடுத்தால் போலீசில் ஐ விட்னஸ் யாரென்று
கேட்பார்கள். ஆளை அடையாளம் காட்டுவாயா என்று கேட்பார்கள். அதற்கு
யார் முன் வருகிறீர்கள்?’
‘சார் இன்னாரென்று புகார் கொடுத்தால் அந்த ஆளை அடையாளம் கண்டுபிடித்து
விசாரிக்கவேண்டியது போலீசின் வேலை. நம்மை அடையாளம் காட்டச்
சொல்வதே நம்மை பயமுறுத்தத்தான். புகார் கொடுக்காமல்
பின்வாங்கச் செய்வதற்குத்தான்… புகார் கொடுப்பவன் குற்றவாளியை அடையாளம்
காட்டவேண்டுமென்றால் போலீஸ் எதற்கு? . ..பாதாளச் சாக்கடை மூடிகளை தம்பாதான்
திருடினான். நாங்கள் நேரில் பார்த்தோம் என்று எழுதித் தருகிறோம் ‘
நான்கைந்து பேர் முன்வந்தார்கள்.
‘புகாரை கொடுப்பது பாம்பு புற்றில் கைவிடுவதற்குச் சமம்’ என்றனர் சிலர். .
‘’முதலில் புகாரைக் கொடுப்போம் சார்.. மற்றதைப் பிறகு யோசிக்கலாம்.’
இளைஞர்கள் குரலெழுப்பினார்கள் ’
‘நீங்கள் வாலிபர்கள்.. வேகமாகப் பேசுகிறீர்கள். காலையில் வேலைக்குப் போய்விடுவீர்கள்.
வீட்டிலிருக்கும் வயதானவர்கள் பெண்களைக் குறித்தும் யோசிக்கவேண்டுமில்லையா?
என்றார் செயலாளர் சாமுவேல் ..
‘உண்மைதான்.சார். பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதுக்காக ஒரு அரை
ட்ராயர் பையனுக்கு பயந்துகிட்டே இருப்பீங்களா? நாம பயப்பட பயப்பட அவன்
அட்டகாசம் அதிகமாகும். அடிதடி கத்தி குத்து . கோர்ட் கேசுன்னு அலையமுடியாதுன்னு
அமைதியா இருக்கோம்.. புகார் கொடுங்க சார்.. .லோகல் போலீஸ் நடவடிக்கை
எடுக்கலேன்னா நியூஸ் பேப்பர்லே போடவைப்போம். சோஷியல் மீடியாவிலே போஸ்ட்
பண்ணுவோம். மேலதிகாரிகளை சந்திப்போம்..அவனை இந்த முறை விடக்கூடாது…’ .
2
காவல் நிலையத்தில் வாசலிலிருந்த செண்ட்ரியிடம் ‘ஐயாவைப் பாக்கணும்’ என்றார்
செயலாளர் சாமுவேல். நிறையப் பேர் அவருடன் வாகனங்களோடு வந்திருந்தார்கள்
‘என்ன விஷயமா?’
புகார் கொடுக்கணும்’
‘ரைட்டரைப் பாருங்க’
‘இல்லை இன்ஸ்பெக்டரைத்தான் பாக்கணும்’ நாங்க இந்தப் பகுதி குடியிருப்போர் சங்க
கூட்டமைப்பிலிருந்து வருகிறோம்’
கறாரான குரலில் சொன்னார் சாமுவேல்.
இங்கேயே இருங்க. ஐயாகிட்டே கேட்டுட்டு வரேன்’
உள்ளே சென்றவர் திரும்பி வந்து ‘ஐயா ரெண்டு பேரை மட்டும் வரச்சொன்னார்’
‘ஆறுமுகம். உங்கிட்டே எத்தனை முறை சொல்லியிருக்கேன். என் டேபிளுக்கெதிரே
நாற்காலியைப் போடாதேன்னு. எடுத்து அந்தாண்ட போடுய்யா’’ இன்ஸ்பெக்டரின்
உரத்த குரல் கேட்டது.
சீதாபதியும் சாமுவேலும் ஆய்வாளர் அறைக்குள் நுழைந்ததும் வணக்கம்
சொன்னார்கள்.. பதில் வணக்கம் இல்லை
‘என்ன விஷயம்?’ எதுக்கு வந்தீங்க? ’ சிடுசிடுத்த குரலில் கேட்டார் ஆய்வாளர்.
சீதாபதியும் சாமுவேலும் எழுதிக் கொணர்ந்த புகாரை கொடுத்தார்கள்
‘படிக்கறதுக்கெல்லாம் நேரமில்லே. விஷயத்தை சொல்லுங்க’’
சீதாபதியும் சாமுவேலும் புகார் குறித்த விவரங்களைச் சொன்னார்கள்
நீங்க சொல்றதெல்லாம் பெட்டி க்ரைம்ஸ் சார். அதிகபட்சம் மூணுமாசம் ஜெயில். .
அத்தோடு அவனுக்கு குளிர் விட்டுப் போயிரும்.. இன்னும் அதிகமா ராவடி பண்ணுவான்’
‘ப்ப்பளிக் ப்ராபர்டியைத் திருடுறது பெட்டி க்ரைமா சார்’ சாமுவேல்
கோபமாகக் கேட்டார். . . ..
‘தம்பாங்கற பையன்தான் மேன்ஹோல் மூடிகளைத் திருடினான்னு
உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்க பாத்தீங்களா?
‘பாத்தவங்க புகார் கொடுத்திருக்காங்க. அதையும் சேத்திருக்கோம்.
என்றார் சாமுவேல்.
‘மேன்ஹோல் நகராட்சியினுடைய சொத்து. அது திருடு போனா நீங்க எதுக்கு
புகார் கொடுக்கறீங்க?’
‘’தெரு விளக்குகள் எரியாத இடத்திலே இருந்த ஓபன் மேன்ஹோல்களினால
நாலஞ்சு பேருக்கு விபத்து நடந்திருக்கு. மூடிகளை கழட்டி ட்ரைசைக்கிளில்
அடுக்கி எடுத்துட்டுப் போறதை நேரில் பார்த்திருக்கோம். போலீஸ்லே புகார்
கொடுக்காம ஹெல்த் ஆபீசர்கிட்டேயா புகார் கொடுக்கமுடியும்’
சாமுவேல் குரலை உயர்த்தினார். ஆய்வாளர் சாமுவேலை ஏற இறங்கப்
பார்த்தார்..
. . ‘ இது ஒரு தனி சம்பவம் கிடையாது. அந்தப் பையனுடைய ரௌடித்தனம்
நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்கு.. அதற்காகவும் ஒரு புகார் கொடுத்திருக்கிறோம்’
முகத்தில் உணர்ச்சிகள் எதையும் காட்டாமல் சொன்னார் சீதாபதி.
ஏற்கெனவே ரெண்டு புகார் கொடுத்தோம். நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத்
தெரியவில்லை’ கோபமாகச் சொன்னார் சாமுவேல்..
‘நான் நடவடிக்கை எடுக்கலேன்னு சொல்றீங்க? அப்ப திரும்பவும் எங்கிட்டேயே
எதுக்கு புகார் கொடுக்கறீங்க?
‘நீங்கள்தானே இந்த ஏரியாவுக்கு ஆய்வாளர்.? உங்களிடம் புகார் கொடுப்பதுதானே
முறை.. அதனால் உங்களிடம் கொடுக்கிறோம்.. நடவடிக்கை எடுக்கவேண்டியது உங்கள்
கடமை.. நீங்கள் உங்கள் கடமையைச் செய்வில்லையென்றால் உங்கள் மேலதிகாரிளிடம்
.முறையிடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேதேனுமிருக்கிறதா சொல்லுங்கள்’?
‘என் கடமை எனக்குத் தெரியும் ‘ என்று ஆய்வாளர் சொல்ல நினைத்தார்.
சீதாபதியின் மென்மையான குரலில் மறைந்திருந்த எச்சரிக்கை அவரை
நிதானப்படுத்தியது..சீதாபதியை அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தார். .
. நிச்சயம் அறுபதுவயதுக்கு மேலிருக்கும். அவருடைய உடை தோற்றம் பேசும்
தோரணை பெரிய பதவியில் இருந்திருப்பாரென்று தோன்றியது.. –
எந்தப்ப புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? இருந்தாலும் ஒரு ஆய்வாளரின்
நாற்காலிக்கும் சீருடைக்குமுள்ள பலத்தை விட்டுக் கொடுக்க முடியுமா?
என்னுடைய கடமையைப்பத்தி நீங்க பேசறீங்க?‘ ‘புருவங்களை
உயர்த்திக் கேட்டார் ஆய்வாளர்.
‘நான் எங்கள் நிலைப்பாட்டைச் சொன்னேன்’ என்றார் சீதாபதி.
எந்த சர்வீஸ்லேருந்தீங்க? ஸ்டேஷனுக்குள்ள வந்து இவ்வளவு
கெத்தா பேசறீங்க? ‘
‘ஐ ஆம் எ ரிடயர்டு இன்கம்டாக்ஸ் கமிஷனர்.. உங்க டிபார்ட்மெண்ட்லெ
மிஸ்டர் பால்சன், பூபேந்தர் சிங், தாராநாத்முகர்ஜியெல்லாம் என்னுடைய டாக்ஸ்
கன்சல்டன்சியின் க்ளையண்ட்ஸ்.’’ அமைதியாகச் சொன்னார் சீதாபதி.
ஆய்வாளர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.. தொப்பியைக் கழற்றிவிட்டு கைக்குட்டையால்
முகத்தைத் துடைத்துக்கொண்டார். சீதாபதி சொன்ன மூன்று பேரும் முதல் நிலை
இரண்டாம் நிலை அதிகாரிகள்்.
பால்சன் – கோபமே முகத்தில் தெரியாது.. பேச்சு செவிட்டில் அறைகிற மாதிரியிருக்கும்.
சர்தார்ஜி – கிழித்துத் தொங்கவிடுவார்.. தாராநாத் முகர்ஜி – ஆபத்தானவர் குரலை உயர்த்திப் .
பேசமாட்டார். அப்படியா ராஜா அப்படியா ராஜா என்று விளக்கங்களைக் கேட்டுக்
கொள்வார்.. கீழ்நிலையதிகாரிகள் தரும் விளக்கங்கள் அவருக்கு சரியில்லையென்று
தோன்றினால் வரும்படி இல்லாத இடத்துக்கு மாற்றல் உத்தரவு போட்டுவிடுவார்.
. ஆய்வாளர் தன் அதிகாரக் குரலை குசலம்விசாரிக்கும் குரலாக மாற்றிக் கொண்டார்.
‘சார் எந்த டிபார்ட்மெண்டு? சாமுவேலைப் பார்த்துக் கேட்டார்.
‘நான் ரிடயர்ட் மேஜர். மிலிட்டரி போலிசிலும் வேலை பார்த்திருக்கிறேன்.’‘.’ ‘
இருவரும் கைக்கடங்காத பொட்டலம். ஆய்வாளர் உஷாரானார்.
‘பேட்ரோல் டூட்டி யாருய்யா பாக்கறது?வண்டி கம்ப்ளெயிண்ட் சொல்றாங்க. என்ன
பண்ணிகிட்டிருக்கீங்க.? 24 மணிநேரத்துல அந்தப் பையனைப் பத்தி ரிபோர்ட்
என் டேபிள்ள இருக்கணும்’ இல்லேன்னா சஸ்பெண்ட்தான்’ பொதுவாக ஒரு
அதட்டல் போட்டார். ‘ஆறுமுகம், இரண்டு சேர் கொண்டுவந்து போடுய்யா’’
கடுமையான முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டார். குரலை மென்மையாக்கிக்
கொண்டார். ‘சார், நீங்கல்லாம் படிச்சவங்க.. பெரிய பதவிலே இருந்தவங்க உங்களுக்குத்
தெரியாதது ஒண்ணுமில்ல..ஊருக்குன்னு ஒரு தேவடியா. யாருக்குன்னு ஆடுவாங்கற
மாதிரிதான் எங்க பொழப்பு.. நீங்க பப்ளிக். உங்க பாதுகாப்பை பாக்கணும். வி.ஐ.பி இந்த
ஏரியாவிலே வரார்னா பந்தோபஸ்து டூட்டி.. பாக்கணும். பேட்ரோல் டூட்டி பாக்கணும்..
மர்டர் கேசுல கிரிமினலை கண்டுபிடிக்கலேன்னா சாப்டதெல்லாம் ஜீரணமாற மாதிரி
மேலேருந்து போன் வருது..-ஸ்டேஷன்லே ஆள் பத்தலே..இப்ப நீங்க சொல்ற அந்தப்
பையனைத் தூக்கிட்டு வந்து நாலு தட்டு தட்றோம்னு வெச்சக்குங்க. மனித உரிமைக்காரன்
போலீஸ் அராஜகம்னு செய்தி போடுவான். க்ரைம் எப்படி குறையும்? கிரிமினலை
கொஞ்சறதுக்கா ஸ்டேஷனுக்கு தூக்கிட்டு வர்ரோம். அஞ்சாறு செக்‌ஷன்லே சார்ஜ்
போடறதுக்காக சில நேரம் வெயிட் பண்ணுவோம். . உடனே போலீஸ் மெத்தனம்னு
பத்திரிகைக்காரன் செய்தி போடுவான்.. ரெண்டுக்கும் மேலேருந்து ஆச்சா போச்சான்னு
போன் வரும். இது பத்தாதுன்னு கௌன்சிலர்லேருந்து மந்திரிவரைக்கும் எல்லாருக்கும்
நான் நல்ல பிள்ளையா இருக்கணும்.. இதுதான் நிலவரம்.. இத்தனையும் மீறி உங்க
புகாருக்கு நான் என்கொயரி பண்ணணும். எப.ஐ.ஆர் போடணும். நான் அந்தப்
பையனை தூக்கிட்டு வந்து மிரட்டி வெக்கறேன்.. உங்க வாரட் நம்பர் என்ன சார்?
சாமுவேல் வார்ட் நம்பரைச் சொன்னார். ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க’ என்றவாறே
கைப்பேசியில் எண்களை அழுத்தினார். இனஸ்பெக்டர் ‘.
‘தலைவரே, உங்க வார்ட் முழுக்க மேன்ஹோல்ஸ் மூடிகள் திருடு போயிடுச்சாமே.
யாரோ தம்பான்னு சின்னப் பையனாமே.? அவன்தான் திருடினான் . நாங்க பாத்தோம்னு
ஐ விட்னஸ் நாலு பேர் புகார் கொடுத்திருக்காங்க…மேன்ஹோல்ஸ் ஓபனா இருக்கறதுனால
-நாலஞ்சு பேருக்கு ஆக்சிடெண்ட் ஆயிருச்சாம்.. உங்க வார்டு மக்கள் ரொம்ப கோவமா
இருக்காங்க. உடனே ஏதாவது செய்யுங்க.. நான் சொன்னேன்ல, அந்தப் பையன் ரௌடித்தனம்
பண்றானாம். யாருன்னு உங்களுக்கு தெரியாம இருக்காது. கூப்டு பேசி அடக்குங்க.
புகார் கொடுத்திருக்கறவங்க வி.ஐ.பி.களுக்கு நெருக்கமானவங்க.. நான் எப்.ஐ.ஆர்
போடவேண்டிவரும்’ . ‘
‘கவுன்சிலர் உங்களை நேர வரச் சொல்றாரு. போய் பாருங்க’. என்றார்
இனஸ்பெக்டர்
3
கவுன்சிலர் கமலக்கண்ணன் இன்முகத்துடன் வணக்கம் சொல்லி வரவேற்றார்.
உட்காரச் சொன்னார். ‘என்ன சாப்பிடறீங்க? டீ காபி மோர் ‘
எதுவும் வேண்டாமென்று மறுத்தனர் சாமுவேலும் சீதாபதியும்.
‘நம்ம வார்டிலே மட்டுமில்லே சார். 27ஆவது வார்டு 34ஆவது வார்டு
40ஆவது வார்டுலேயும் மேன்ஹோல்ஸ் மூடி காணாமப் போயிருக்கு.
இதுவரைக்கும் இப்படி நடந்ததில்லே. கிட்டத்தட்ட நூறு மூடி காணாமப்
போயிருக்கு. பழைய இரும்புக் கடை ஒண்ணுவிடாம போலீஸ் விசாரிச்சுட்டாங்க.
கண்டு பிடிக்க முடியலே.. ஓபன் மேன்ஹோலைச் சுத்தி தடுப்பு போட ஏற்பாடு
பண்ணியிருக்கோம். நாளைக்கு வேலை ஆரம்பமாயிடும். புது மூடிகளுக்கு
டெண்டர் ஓகே ஆயிருச்சு. ஒரு வாரத்துலே புது மூடிங்க வந்துரும்.. ஓபன்
மேன்ஹோல் ஒண்ணுகூட இருக்காது’’. சீதாபதியும் சாமுவேலும் வணக்கம்
சொல்லி எழுந்தனர்.
’மறந்துட்டேனே சார் யாரோ ரௌடித்தனம் பண்றான்னு புகார் கொடுத்தீங்களாமே,
இன்ஸ்பெக்டர் சொன்னாரு. நம்ம வார்டுலே எந்த அசம்பாவிதமும் நடக்காது.
நான் பொறுப்பு. நீங்க நிம்மதியா போங்க’ கவுன்சிலர் பணிவுடன் கரம் கூப்பினார் .. ,
ஒரு வாரம் கழித்து ஒரு நாள் காலை ஏழுமணிக்கு நேதாஜி நகர் ராம் நகர்
தெருக்களில் ட்ரைசைக்கிளிலிருந்து பாதாளச் சாக்கடை மேன்ஹோல்களை தம்பா
மூடிக் கொண்டிருந்தான்.. அத்தனையும் முன்பேயிருந்த பழைய மூடிகள்.
————..