லாவண்யா சத்யநாதன்/சிந்தனிகாவும் கோல்கொண்டா வியாபாரியும்

‘மாப்பிள்ளை அழைப்புக்குப் போவதைப் போல ட்ரஸ் பண்ணிக்கொண்டு
ஆபீசுக்குப் போகிறீர்கள். லாட்ஜுக்கு வருவதைப்போல நேரம் காலமில்லாமல் வீட்டுக்கு
வருகிறீர்கள்..எப்போது பார்த்தாலும் கம்பெனியைக் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள்.
சுநேத்ரா இன்னும் குழந்தையில்லை. இருபத்தேழு வயசாகிறது. இன்னும் எத்தனை
நாள் அவளை நம்முடனேயே வைத்திருப்பது?அவளுக்கு வரன் பார்க்க வேண்டுமென்ற
அக்கறை உங்களுக்கு கொஞ்சமேனும் இருக்கிறதா?
‘இல்லையென்று உனக்கு எப்படித் தெரியும்?’
‘‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம்..மோட்டார் ரிப்பேரிலிருந்து
பெண்ணுக்கு வரன் தேடுவதுவரை என் தலையில் போட்டுவிடுகிறீர்கள் எனக்காக .
சுநேத்ராவுக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
‘மலையைச் சுமக்கிறமாதிரி பேசுகிறாய்? மேரேஜ் பீரோவில் பதிவு செய்கிறாய்.
ரெஸ்பான்ஸ் வந்தால் போனில் பேசுகிறாய் மெயில் அனுப்புகிறாய்.
இரண்டும் உட்கார்ந்த இடத்தில் செய்கிறாய். யாரையேனும் நேரில் பார்த்துப்
பேசவேண்டுமென்றால் காரில் போகிறாய். நாள் பூராவும் கல்லுடைத்தவளைப் போலப்
பேசுகிறாய்?
‘பத்து நாள் வீவு போட்டுவிட்டு என்னுடன் மேட்ரிமோனியல் ஏஜன்சிக்கு
வந்து பாருங்கள். இண்டர்செட்டில் ஒரு வரனைத் தேடிப் பாருங்கள். அப்போதுதான்
உங்களுக்கு என் கோபம் புரியும். வயசு சரியாக இருந்தால் படிப்பு கம்மியாக இருக்கிறது.
படித்த பையனாகப் பார்த்தால் வயது சரியாக வரமாட்டேனென்கிறது.. இரண்டும்
சரியாக வந்தால் பையன் உயரம் கம்மியாக இருக்கிறான். சுநேத்ராவுக்கு ஏற்றாற்போல்
வெளிநாட்டிலிருக்கும் பையனைப் பார்த்தால் அவன் டைவர்சியாக இருக்கிறான்.
மணிக்கணக்காய் உட்காரந்துகொண்டு கம்ப்யூட்டரில் தேடுகிறேன். போன்போட்டுப்
பேசுகிறேன் எதுவும் நகரமாட்டேனென்கிறது.. கேஸ்ட் நோ பார் கூட போட்டாகிவிட்டது.
நோ யூஸ் ஒரு தமிழ் பையனை பார்க்கலாமென்றால் ஜாதகம் கேட்கிறார்கள். ஜாதகம்
அனுப்பினால் எஸ் ஆர் நோ சொல்லமாட்டேனென்கிறார்கள் . போதாக்குறைக்கு நான்
பெங்காலி நீங்கள் தமிழ்நாடென்றால் சைலண்டாகிவிடுகிறார்கள் . நீங்கள் எதையாவது காதில்
வாங்கிக்கொள்கிறீர்களா? அதெல்லாம் கூட நீங்கள் செய்யவேண்டாம்.. ஏதாவது ஒரு
லீவு நாளில் என்னோடு சுநேத்ராவோடு கலகலப்பாகப் பேசுகிறீர்களா? நீங்கள் ஆபீஸ்
வேலையாக ஊர் ஊராக போய் வருகிறீர்கள். நான் வீட்டிலேயே அடைந்து
கிடக்கவேண்டியிருக்கிறது. என்றைக்காவது எல்லோரும் சேர்ந்து ஒரு டூர் ஒரு பிக்னிக்
போகலாமென்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? ‘
சிந்தனிகாவின் கண்கள் டி.வி. பார்த்தன. மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
தனக்கும் பார்த்திபனுக்குமிடையில் வாரம் ஒருமுறையாவது நடக்கும் வாக்கு
வாதங்களை நினைத்துக் கொண்டிருந்தாள். . .
ஒரு பெரிய பன்னாட்டுக் கம்பெனியின் பொதுமேலாளர். பெரிய பதவிதான்.. ஒரு
மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை முற்றிலும் இழக்கச் செய்யும் பதவி.
மகன் ஜெயந்தா பி.எம்..டபிள்யூ கம்பெனியில் ஜெர்மனியில் வேலை பார்க்கிறான்..
திருமணமாகிவிட்டது. செட்டிலாகிவிட்டான். சுநேத்ராவுக்கு திருமணம் செய்துவிட்டால்.
பொறுப்புகள் இல்லை. இருக்க வீடிருக்கிறது. அதில்லாமல் சினிமா சீரியல் ஷூட்டிங் பங்களா
ஒன்றிலிருந்து வாடகை வருகிறது.. கையில் சேமிப்பிருக்கிறது. மருத்துவக் காப்பீடிருக்கிறது.
சம்பாதித்தது போதும். ஐம்பத்தைந்து வயதாகிறது. வேலையை விட்டுத் தொலை. நிம்மதியாய்
இருக்கலாமென்றால் இந்த மனிதர் கேட்கிறாரா?
‘சிந்து, ஏதேனும் ஒரு விரலைத் தொடு’
‘‘எதுக்கு?’
‘இன்னைக்கு ஆபீசா? அவுட்டிங்கா? டிசைட் பண்ணப் போறேன்’
அவளும் அப்பாவியாய் ஒரு விரலைத் தொடுவாள்.’ இன்னைக்கு
உத்சவ் ஓட்டலில் லஞ்ச். அப்புறம் உன் ஷாப்பிங். பிறகு சினிமா . அப்புறம்
வீட்டுக்கு வந்து கேம்ஸ்’ பார்த்திபன் கண் சிமிட்டுவார். அதெல்லாம்
பார்த்திபனுக்கு இப்போது நினைவிருக்கிறதா என்ன? இத்தனைக்கும் காதல்
திருமணம்தான்.. பார்த்திபன் அப்போதிருந்த மென்மையானவராக இருக்கிறார்?
பேசினாலே சண்டைக்கு வருகிறார்? எத்தனை படிப்பு பணம், பதவி இருந்தாலும்
பெண் ஜென்மம் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. ..
அழைப்பு மணியின் ஒலி சிந்தனிகாவின் அலைபாயும் மனதை
நிறுத்தியது. .
2
அதிசயம்!. ஆனால் உண்மை. எதிரில் பார்த்திபன்..
பார்த்திபன் குளித்து உடை மாற்றிக் கொண்டு வருவதற்குள் அவருக்குப்
பிடித்த உணவுகளை தயார் செய்து உணவு மேஜை மீது வைத்தாள் சிந்தனிகா..
இருவரும் எதிரெதிரில் உட்கார்ந்து கொண்டார்கள்.. ‘என்ன அதிசயம் இத்தனை
சீக்கிரம்? சிந்தனிகா கேட்டாள்.
‘நாளை விடியற்காலை சித்தூருக்கு கிளம்பறோம்’
‘எதுக்கு?
‘சிந்து, முதல்லெ சரின்னு சொல்லு. அப்புறம் கேள்வி கேள். புரியறதா?’
‘சிந்தனிகா, நீ ஒரு பூம்பூம் மாடு. மறக்காதே.. என்ன சொன்னாலும் சரின்னு
தலையாட்டு’ .
‘சண்டையை ஆரம்பிக்காதே. மொதல்லெ நான் சொல்றதைக் கேள். ‘. ‘சித்தூரில் ஒரு
மகான் இருக்காராம். சுநேத்ராவுக்கு ஏன் வரன் குதிர மாட்டேனென்கிறது? என்ன பரிகாரம்
செய்யவேண்டும்? அவரைக் கேட்டுட்டு வருவோம்’’
சிந்தனிகாவுக்கு ஆத்திரமாக வந்தது. கல்யாணமான புதிதில் சினிமாப்
பைத்தியம். ஜயந்தா பிறந்த பிறகு ஜோதிடப் பைத்தியம். சுநேத்ரா
பிறந்த பிறகு கோவில் பைத்தியம். சில காலம் வாஸ்து பைத்தியம்.
சமீப காலமாக சாமியார் பைத்தியம். சிந்தனிகா ஒருமுறை கல்கத்தா
காளி கோவிலுக்குச் சென்றிருந்தாள். எருமைகளை காளிக்கு பலி கொடுத்தார்கள்.
எங்கு பார்த்தாலும் ரத்தம். காளியைத் தரிசனம் செய்யும் பக்தர்களிடம் மிரட்டாத
குறையாய் ஐநூறு கொடு ஆயிரம் கொடு என்று பூசாரிகள் வசூலிப்பார்கள். அதிலிருந்து
அவளுக்கு கோவிலென்றாலே வெறுப்பு. திருமணத்திற்கு முன்பு காசியில் அகோரிகளையும்
உஜ்ஜயினில் பாண்டாக்களையும் பார்த்திருக்கிறாள். அவர்களின் கஞ்சாப் புகையிலும் மது
போதையிலும் கடவுள் தலைமறைவாகிவிடுவாரென்று அவள் எப்போதும் நினைப்பாள். .
மடாதிபதிகளின் அந்தப்புரங்கள் மகான்களின் லீலைகள் குறித்து அவளுடைய
அப்பா கதை கதையாய் சொல்வார்.. அவளுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. .
‘ஒவ்வொரு கோவிலாய் போனீர்கள்..சுநேத்ராவுக்காக பூஜையெல்லாம்
செய்தீர்கள். ஒன்றும் நடக்கவில்லை. ஜோதிடர்கள் சொன்னதும் பலிக்கவில்லை.
இப்போது மகானா? – தலையில் கையை வைத்துக் கொண்டாள் சிந்தனிகா
‘ஒவ்வொண்ணுக்கும் உன்னை கன்வின்ஸ் பண்றதிலேயே என் ஆயுசு பத்து
வருஷம் குறைஞ்சுபோயிடும் சிந்து…உடம்பு சரியில்லேன்னா டாக்டர் கிட்டே போறோம்.
மனசு சரியில்லேன்னா கோவிலுக்கோ சினிமாவுக்கோ போறோம். ஒரு பிரச்சினை.
நம்மாலே சால்வ் பண்ணமுடியலே. ஒரு ஹெல்ப்லைன் தேவைப்படறது. ஜோதிடர்
சாமியாரெல்லாம் ஹெல்ப்லைன் மாதிரி..’தேடறோம். நமக்கு சரியான ஹெல்ப்லைன்
கிடைக்கலே ..இந்தமுறை கிடைக்கலாம்.. போய் பார்த்துவிட்டுத்தான் வருவோமே?’
‘எனக்கு நம்பிக்கையில்லை. நான் சொன்னால் நீங்கள் கேட்கப்போவதில்லை..
வந்து தொலைக்கிறேன்.. திருட்டு சாமியாரா நிஜ சாமியாரா விசாரித்தீர்களா?.’
‘அந்த மகானைப் பற்றி எனக்குச் சொன்னது எங்க ஹெச்.ஆர் மேனேஜர்
நவீன். உன்னைப்போல உங்கப்பாவைப்போல பரம நாத்திகர். அவருடைய மனைவிக்கு
பின் கழுத்தில் கட்டி வந்து வலி தாங்கமுடியவில்லையென்று டாக்டரிடம்
அழைத்துப் போனாராம்.’ புற்றுநோய். கட்டி. முதுகுத்தண்டில் அறுவை
சிகிச்சை செய்யவேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து’ என்றாராம். டாக்டர்.
மிசஸ் நவீன் உனக்கு ஆபோசிட். சித்தூர் மகானைப் பற்றி யாரோ சொல்லி
கேள்விப்பட்டிருக்கிறாள். அவருடைய அட்வைசுக்குப் பிறகுதான் ஆபரேஷன்
செய்துகொள்வேனென்று அடம் பிடத்திருக்கிறாள். வேறு வழியில்லாமல் நவீன்
அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்’’.
‘மகான் என்ன சொன்னார். பார்த்தா? பரிகாரம் செய்யவேண்டும். அஞ்சுலட்சம்
செலவாகுமென்று சொல்லியிருப்பாரே?
‘சிந்து, பாசிடிவா திங்க் பண்ணவே உன்னால் முடியாதா?
‘ மகான் பாசிடிவா என்ன சொன்னார்?’ சொல்லுங்கள்’’
‘அந்தக் கட்டி கேன்சர் இல்லை. ஆபரேஷன் வேண்டாமென்று சொல்லிவிட்டு
ஏதோ ஒரு காய்ந்து இறுகிப்போன காயைக் கொடுத்து தூள் செய்து தேனில்
கலந்து ஒரு வாரம் சாப்பிடச் சொன்னாராம். கட்டி உடைந்து வலி போயிடுத்தாம்.
மகான் சொன்னபடியே . ஒரு மாதம் கழித்து. டெஸ்ட் பண்ணால் கேன்சர் இல்லையென்று
இரண்டு டாக்டர்கள் சொன்னார்களாம்.. அவர் சித்தராக இருக்கலாமென்று நவீனே
சொல்றார்.’
‘அவர் சித்தரோ புத்தரோ ஏசுவோ எதுவாக வேண்டுமானாலுமிருக்கட்டும்.. என் ஆதங்கம்
தீர்ப்பாரா? அதுதான் எனக்குவேண்டும்’
‘அவரை கன்சல்ட் பண்ணி அவர் சொல்வதைச் செய்த பிறகுதானே ரிசல்ட் தெரியும்?’
இன்னொருமுறை மகானைப் பார்க்கலாம். சாமியாரை சந்நிக்கலாமென்றால்
நான் வரமாட்டேன்.’பார்த்தா. திஸ் இஸ் தி லாஸ்ட். எத்தனை மணிக்குப் புறப்படவேண்டும்’?
‘ஷார்ப் 5’
. 3
கார் சித்தூரை அடைந்ததும் பார்த்திபன் காரை நிறுத்தி பூ பழம் வாங்கிக்
கொண்டார். கடைக்காரர்களிடம் விசாரித்தார்..வழி சொன்னார்கள் சித்தூரைக் கடந்து
ஏழெட்டு கிலோ மீட்டர்கள் சென்றால் ஒரு கிராமம்..
நிறைய மோட்டார் சைக்கிள்களும் கார்களும் நின்று கொண்டிருந்தன.
பெரிய வீடு.. வாசலில் இரண்டு திண்ணைகள்.. முன்பக்கம் பெரிய சிமெண்டுத் தரை.
சிமெண்டுத் தரைக்கு மேலே ஓலைக்கூரை.. கிட்டத்தட்ட முன்னூறு பேர்
உட்கார்ந்திருந்தார்கள். சிந்தனிகா பெண்கள் பகுதியில் உட்கார்ந்து கொண்டாள்.
வீட்டைச் சுற்றி பெரிய தோட்டம். நிறைய பூச்செடிகள். மூலிகைச் செடிகள்.
தென்னை, வாழை மரங்கள்.. சிந்தனிகாவின் பார்வையில் பட்டன. சிந்தனிகா அருகிலிருந்த
பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தாள். ‘மீரு ராவடம் பஸ்ட் டைமா? எனக் கேட்டாள்.
ஆமாமென்றாள் சிந்தனிகா. அவ்வளவுதான். ஒவ்வொரு பெண்ணும் ஒரு
அனுபவத்தைச் சொன்னாள். சிந்தனிகாவால் நம்பவும் முடியவில்லை. நம்பாமலிருக்கவும்
முடியவில்லை. எவ்வளவு பணம் தரவேண்டுமென்று சிந்தனிகா கேட்டாள்..
பைசா தரவேண்டாம்.. இங்கே வந்தவர்களெல்லாருக்கும் சாப்பாடு போட்டனுப்புவார்..
வாக்கு சொல்வது முடிந்ததும் மதியம் இரண்டுமணிக்கு தோட்டத்தில் சாப்பாடு.. மும்பையில்
பெரிய பணக்காரராம். பெண்டாட்டி பிள்ளைகளெல்லாம் இருக்கிறார்களாம். இந்த வீடும்
தோட்டமும் அவருக்குச் சொந்தம்.
‘மும்பைக்காரர் என்கிறீர்கள். பெரிய பணக்கார்ர் என்கிறீர்கள். காசு வாங்குவதில்லை.
எதற்காக மும்பையிலிருந்து இங்கே வந்து வாக்குச் சொல்கிறார்?
‘அதெல்லாம் நமக்கெதற்கு? அவர் சொல்வது பலிக்கிறது.. அவர் சொல்வதைச் செய்தால்
பலன் கிடைக்கிறது. டாக்டரை நம்பித்தானே அவர் கொடுக்குற மருந்தை சாப்பிடறோம்.
ஊசி போட்டுக்கறோம். அதுமாதிரி சாமியை நம்பறோம்.. நம் பிரச்சினை தீர்கிறது என்றாள்
ஒரு பெண் டீச்சர். ‘
‘சாமியின் பெயரென்ன?
‘உங்களைப்போல் ஒருத்தர் சாமியைக் கேட்டார். கோல்கொண்டா வியாபாரின்னு சொன்னார்.
இந்த வட்டாரத்தில் சித்தாந்திலு என்றால்தான் தெரியும்’.’.
சங்கொலி கேட்டது . தியானம் முடிந்துவிட்டது. இன்னும் ஐந்து நிமிடத்தில் சாமி வருவார்.
கூட்டம் அமைதியானது.
மொட்டைத் தலை, மழித்த கன்னங்கள் , பிரகாசமான முகம், கூர்மையான
பார்வை, குள்ளமான உருவம். குண்டு சரீரம். ஐம்பது வயதிருக்கலாம். மஞ்சள்நிற குர்தா
பைஜாமா.. இவரைப் பார்த்தால் சாமியார் போலில்லையே என்று சிந்தனிகா
நினைத்துக்கொண்டாள். .சித்தாந்திலுகாரு திண்ணையிலமர்ந்தார்.. ஒவ்வொருவராய்
அழைத்தார்..
பல மொழிகளில் பேசினார்.. ‘சாமி என் புருஷன் தாசில்தார் சாமி.,..வீட்டுக்குப் பத்து பைசா
தர்ரதில்லே.’
‘தாசில்தார்னா மேல்வரும்படி சம்பளத்தைவிட அதிகமா வருமே? என்றார் சாமி
‘ஆமாம் சாமி. எல்லாம் செலவாயிடிச்சுங்கறாரு. என்ன செலவு பண்ணேன்னு கேட்டா
என்னவோ செலவு பண்ணேன். அதெல்லாம் உனக்கெதுக்குன்னு சொல்றாரு..அண்ணன்
தம்பி ஆதரவுலே எத்தனை நாள் இருக்கறது சாமி. அண்ணிங்க குத்தி காட்டறாங்க
அந்த ஆளுக்கு சொந்த பத்தியுமில்லே. சொல்புத்தியும் கேக்கமாட்டேங்கறாரு. அவரை
வசியம் பண்ண ஏதாவது மந்திரம் சொல்லிக் கொடுங்க சாமி என்றாள். ஒரு இளம்பெண் .
‘தலகாணி மந்திரத்துக்கு கட்டுப்படாத ஆம்பளை இன்னும் உலகத்துலே பொறக்கலே
அதை சரியாப் போடு.சம்பளத் தேதி ஆன்னிக்கு உன் புருஷன் ஆபிசுக்குப் போயி
காசைப் பிடுங்கு. சண்டை வரும். அவமானத்துக்கு பயந்து காசை கொடுத்துருவான்’’..
எல்லாரும் சிரித்தார்கள்.. ஒருவர் சொத்து வழக்கு குறித்துக் கேட்டார்.
அருகிலிருந்த பேப்பர் வெயிட்போல ஏதோ ஒன்றை எடுத்தார். சற்றுநேரம்
உற்றுப் பார்த்தார். உனக்குப் பேராசை. பொய் வழக்கு போட்டிருக்கே ‘சொத்து உன்
பங்காளிக்குப் போகும். உன் காசு வக்கீலுக்குப் போகும். ஏன்யா இப்படி அலையறீங்க
என்றார் . அந்த நபர் முகத்தைத் தொங்கபோட்டுக்கொண்டு போனார்.
சிந்தனிகா கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மதியம் ஒரு மணி முப்பது நிமிடங்கள்.
இன்னும் அரைமணி நேரம்தானிருக்கிறது. தனக்கு வாய்ப்புக் கிடைக்குமா? எதிர்மறையாக
ஏதேனும் சொல்லிவிடுவாரா? அவர் சொல்வது பலிக்குமென்று வேறு சொல்கிறார்கள் .
சிந்தனிகாவுக்கு பதற்றம் அதிகரித்தது.. ஐந்து நிமிடங்களுக்கொரு முறை கடிகாரத்தைப்
பார்த்தாள். இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. சிந்தனிகாவை அழைத்தார் .
4
பார்த்திபனும் சிந்தனிகாவும் பூவையும் பழங்களையும் கொடுத்து வணங்கினார்கள்..
‘ மேடம் என்னைப் பார்த்தால் சாமியார்போல இல்லைதானே? ஆங்கிலத்தில் கேட்டார்..
சிந்தனிகா நடுங்கிப் போனாள். அவள் இரண்டு மணி நேரத்துக்கு முன்பு நினைத்தது
அவருக்கெப்படித் தெரிந்தது. ‘மன்னித்துக் கொள்ளுங்கள் என்றாள். வேர்த்துவிட்டது.
‘ உனக்கு ஒரு குறையுமில்லையே.. கோல்கொண்டா வியாபாரியை எதற்குப் பார்க்க
வந்தாய்? அவள் அவர் பெயரைக் கேட்டது வீட்டுக்குள் தியானத்திலிருந்த இவருக்கு
எப்படித் தெரிந்தது?. சிந்தனிகாவுக்குப் பேச்சே வரவில்லை
‘பெண்ணுக்கு மூன்று வருடங்களாய் வரன் தேடுகிறோம். அழகு,படிப்பு, வேலை
எல்லாம் இருந்தும் மேரேஜ் செட்டிலாக மாட்டேனென்கிறது. நவீன் என்பவர் உங்களைப்
பற்றிச் சொன்னார். உங்கள் ஆசீர்வாதம் வேண்டி வந்திருக்கிறோம்.’ என்றார் பார்த்திபன்.
சித்தாந்திலு சற்றுநேரம் கண்களை மூடிக்கொண்டார்.. ‘நீங்கள் தேடவேண்டாம்.
அவனே பறந்து வருவான்’
‘புரியவில்லையே சுவாமி’ சிந்தனிகா கரம் கூப்பினாள்.
‘பதினைந்து நாட்களில் புரியும் மேடம். இருவரும் சாப்பிட்டுவிட்டுப் போங்கள்.’
சித்தாந்திலு எழுந்துவிட்டார்.
5
பதினான்கு நாட்கள் முடிந்துவிட்டன. இன்று மட்டும் என்ன அதிசயம்
நிகழ்ந்து விடப் போகிறது.? இசைக்கச்சேரிக்குச் செல்ல சிந்தனிகாவும்
சுநேத்ராவும் அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். பார்த்திபனும் தயாராகிக்
கொண்டிருந்தார். அழைப்பு மணி ஒலித்தது..சுநேத்ரா கதவைத் திறந்தாள்.
ரவி தேஜா. அவனுடைய பெற்றோர்களுடன் நின்றுகொண்டிருந்தான்..
ரவி தேஜா விமானங்களில் இரண்டாவது பைலட். .
சுநேத்ராவை விமான நிலையத்தில் ஐந்தாறு முறை சந்தித்திருக்கிறான்.
‘ஐ லைக் யு. ஷல் வீ ட்ராவல் டுகெதர் இன் லைப்? .என்று ஒருமுறை நேரடியாகக்
கேட்டான். அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது. ‘ஓகே பார் மீ. பட் டாக் டு
மை பேரண்ட்ஸ்.’ முகவரி கைப்பேசி எண்களை வாங்கிக் கொண்டான்.
ஒரு வருடத்துக்குப் பிறகு பெற்றோர்களுடன் வந்து நிற்கிறான். வெட்கமும்
மகிழ்ச்சியுமாய் சிந்தனிகாவின் அறைக்கு ஓடினாள் சுநேத்ரா. ‘அம்மா ,
நான் சொன்னேனே ரவிதேஜா – அதாம்மா எங்க ஏர் லைன்ஸ் பைலட் –
பேரண்ட்ஸ் வந்திருக்கா. சிந்தனிகா மகளின் முகமலர்ச்சியைக் கவனித்தாள்.
மாடியிலிருந்து பார்த்திபனும் வந்தார்.
‘இத்தனை அழகாக ஒரு ஆண்பிள்ளையா? மனதில் நினைத்துக்கொண்டே
வரவேற்று உபசரித்தாள் சிந்தனிகா. .. சுநேத்ரா-ரவி தேஜா திருமணம் உறுதியானது..
பாறை போல் கனத்துக் கொண்டிருந்த தலை ஒரு பூவாகிப் போனதாய் உணர்ந்தாள்
சிந்தனிகா., மனதில் ஒரு மின்னலடித்தது. ஆஹா! பதினைந்து நாளில் புரியமென்றாரே.
சித்தாந்திலு. இன்று பதினைந்தாவது நாள்., பறந்து வருவானென்பதற்குப் பைலட்
என்று அர்த்தமா? சிந்தனிகாவுக்கு கண்களில் நீர் சுரந்தது. கோல்கொண்டா
வியாபாரியை மனதார வணங்கினாள்.