
ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. எல்லோருமே பெற்றொர்களும் உறவினர்களுமாகத்தான் இருக்க வேண்டும். சின்னப்பையன்களும் பெண்களும் மார்பில் பாட்ஜ் அணிந்து வருவோரை வரவேற்று சீட்டில் உட்கார உதவிக்கொண்டிருக்க அங்கே மேடையில் டீச்சர்கள் கைகளில் பேப்பர் வைத்துக்கொண்டு யாரையோ மிரட்டிக்கொண்டும் தங்களுக்குள் டென்ஷனாக பேசிக்கொண்டும் பரபரப்பாக இருந்த ஸ்கூல் ஆண்டு விழா!
வாசலில் ஹோண்டா சிட்டி வந்து நிற்க, ”சீஃப் கெஸ்ட் வந்தாச்சு” என்ற கிசுகிசுப்புக்கு நடுவில் பிரின்ஸிபலும் இன்னும் ஒரிரு சீனியர் டீச்சர்களும் வாசலுக்கு விரைந்தார்கள்.
“என்னால ஒண்ணும் டிலே இல்லியே?”
“ஓ நோ சார்! வாங்க வாங்க! முதல்ல என் ரூமுக்கு போய்டலாம். கொஞ்சமா ரெஃப்ரெஷ்மெண்ட்! அஞ்சே நிமிஷத்துல ஆடிட்டோரியம் வந்துடலாம்!”
“ம்ஹும் அதெல்லாம் வேண்டாம்! நா இப்பத்தான் காஃபி சாப்பிட்டேன். நேரே ஆடிட்டோரியமே போய்டலாம்.!
சீஃப் கெஸ்ட் வேகமாக நடந்து முதல் வரிசைக்கு வந்து நடு நாயக சீட்டில் உட்கார்ந்து கொள்ள, ஹாலில் அமைதியாயிற்று. ஒரு பெண் – பளிச்சென்ற பளிங்கு முகம், நேர்த்தியான புடவை கண்களில் மின்னும் சிரிப்புடன் ஆனால் முகத்தில் கருணை பொங்க – சீஃப் கெஸ்டை நெருங்கினாள்.
”நீங்க வந்துல ரொம்ப சந்தோஷம்!”
“ஓ நீயா? யெஸ் யெஸ்! எனக்குமே இந்த மாதிரி ஒரு கிராட்டிஃபிகேஷன் தேவைப்படறதே! ஐயாம் கிளாட்!”
அந்தப்பெண் சீஃப் கெஸ்டுக்கு அடுத்த நாற்காலியில் மரியாதையாக நுனியில் உட்கார்ந்தாள்.
இப்போது மேடையில் இருந்த டீச்சர்கள் விலகி, லைட் அணைத்து தமிழ்த்தாய் வாழ்த்து அறிவிக்கப்பட்டது. “வாழ்த்துதுமே” ஒலித்து முடிய லவுட் ஸ்பீக்கரின் ”கொய்”ங்க்குக்கு நடுவே இனிய குரலில் …..
”முதல் நிகழ்ச்சியாக நாங்கள் அளிக்கப்போவது…….”
ஆறு வருடங்களுக்கு முன்னால்……
“ப்யூலா! யாரு இவங்க? என்னை ஏன் பாக்கணூம்? ஷி சீம்ஸ் ப்ரெக்னண்ட் ! மெடர்னிடி போகச்சொல்லு!”
“இல்லை புரொஃபசர்! டாக்டர்! நிர்மலா வராங்க! உங்க கிட்ட கன்சல்ட் பண்ணணும்னு! ஏதோ சிக்கல்!”
”ஓகே! வரச்சொல்லு!”
“சிட் டவுன்! சொல்லு நிர்மலா!”
”டாக்டர்! இவங்க ரம்யா! இவர் பாஸ்கர்! மூணு அபார்ஷன் ஆகியிருக்கு. இப்ப மறுபடி ப்ரெக்னண்ட்!”
“ஸோ?”
“ஆர் ஹெச் ஃபாக்டர் இன்கம்பாடிபிலிட்டி!”
“மின்ன யாரு பார்த்தா?”
”டாக்டர் தணிகாசலம்! புரசவாக்கம்!”
“என்ன சொன்னார்?”
பாஸ்கர் விவரித்தான்.
“பாஸ்கர்! இஃப் யூ வாண்ட் செக்ஸ், டோன்’ட் கோ டு யுவர் வைஃப் எனிமோர்?”
“டாக்டர்?”
“பின்ன என்னய்யா? மூணாவது அபார்ஷன் ஆகி இன்னும் ஆறு மாசங்கூட ஆகல! அதுக்குள்ள அவ மேல பாய்வியா?”
“இல்ல டாக்டர்.. குழந்தை வேணுன்னு….!”
“போய்யா!நீ படிச்சவன் தானே? கழுத்தறுப்புய்யா! இந்த மாதிரி ஒய்ஃப ப்ரெக்னண்ட் பண்ணிட்டு இங்க வந்துர வேண்டியது. அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்க மேல கொற சொல்லி கேஸ் போட வேண்டியது!”
ஆசாமி அமைதியாக நிற்றல்.
“இத பாரு இது பெரிய ரிஸ்க்! இத கண்டின்யூ பண்ணினா ஷி மே டை! இந்த பேபியும் அபார்ட் ஆகும்யா! அப்படியே பொறந்தாலும் உசுரோட இருக்காது!”
”அய்யோ டாக்டர் அபார்ட் பண்ணணுமா?”
”ஆமாய்யா! இல்லேன்னா அதுவே அபார்ட் ஆகி பொண்டாட்டி உசுருக்கு ஆபத்தானா பரவாயில்லியா?”
”டாக்டர்!இந்த ஒரு தரம் குழந்தை பெத்துக்க டிரை பண்றோமே! நாமா எதுக்கு அபார்ட் பண்ணனும்?”
”யோவ்! சொன்னா புரியாதா? நீ வேற கல்யாணம் பண்ணி அவள எத்தன தரம் வேணா…….!”
வெறுப்பில் டாக்டர் அசிங்க வார்த்தை பிரயோகம் பண்ணினார்.
“நாந்தான் சொல்றேனே! உங்க ரெண்டு பேரோட உடல் கூறு கம்பாடிபிள் இல்லை! மறுபடி மறுபடி நீ அவங்கள பிரெக்னண்ட் ஆக்கிட்டே இருந்தா என்னய்யா அர்த்தம்? என்னால ரிஸ்க் எடுக்க முடியாது! நீ வேற யார்னா டாக்டர பாரு! என்னை விட்டுடு!”
டாக்டர் வைகுண்டம் இப்போது அந்தப்பெண்ணைப் பார்த்தார்.
பதவிசாக லட்சணமாக இருந்தாள். கண்களில் பயமும் ஆவலும் ஏக்கமும்.
“பிளட் ரிப்போர்ட்ஸ கொண்டா?”
”ரம்யா ஆர்ஹெச் நெகடிவ்! அதான் சிக்கலா?”
“ஆமா புரொஃபசர்!”
”நிர்மலா! உன்னோட அட்வைஸ் என்ன?”
“அபார்ட் தான் புரொஃபசர்!”
ரம்யா விக்கென விதிர்க்க, பாஸ்கர் கண்களில் அதிர்ச்சி.
டாக்டர் வைகுண்டம் மறுபடி ரிப்போர்ட்டைப்பார்த்தார்.
“இரு நிர்மலா! ஏம்மா உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்கா?”
“இல்லை டாக்டர். அதுதான் ஒரு குழந்தையாவது வேணும்னு…!”
“நிர்மலா! லெட் தெம் கோ அஹெட்!”
“ஆனா புரொஃபசர்….?”
“என்ன ஆனா? அம்மாவுக்கு ஆர் ஹெச் நெகடிவெ இருந்தா அது ஆண்டி பாடீஸ் உருவாக்கி குழந்தை ஒரு வேளை ஆர் ஹெச் பாஸிடிவா இருந்தா குழந்தையோட ரெட் ஸெல்ல அட்டாக் பண்ணும், அதானே?”
“அஃப் கோர்ஸ், யூ நோ, புரொஃபசர்!”
“நிர்மலா! இன் மெனி கேஸஸ், அம்மாவுக்கு ஆர்ஹெச் நெகடிவ் இருந்தா கூட முதல் குழந்தை தப்பிச்சுடும்!”
”ஆனா டாக்டர்! ரம்யாக்கு ஏற்கனவே மூணு அபார்ட் ஆகியிருக்கு!”
“நிர்மலா! ஷைன் யுவர் மைண்ட்! ஆப்ஸ்டெட்ரிக்ஸ் அண்ட் கைனக்காலஜி!”
“Jason Abbott!”
“கரெக்ட்! கெட் ரம்யா அண்டர் யுவர் க்ளோஸ் ஆப்சர்வேஷன்! விடாம பாத்துக்கோ! எனக்கும் அப்டேட் குடு!”
“பாஸ்கரா உம்பேரு? ஒய்ஃப ஜாக்கிரதையா கவனிச்சுக்கணும்! வீட்ல வேலை செய்ய ஆள் இருக்கா?”
“ரெண்டு அம்மாக்களும் இருக்காங்க டாக்டர்!”
”குட்! எட்டாம் மாசத்துலயே பொறக்க சான்ஸ் இருக்கு! இதோ டாக்டர் நிர்மலா இருக்காங்க! கவனிச்சுப்பாங்க, என்ன?”
”தாங்க் யூ டாக்டர்!”
பெரியவர் சொன்னபடி எட்டு மாதம் பதினேழு நாட்கள்ளயே குழந்தை பிறந்தது.
”எஸ் நிர்மலா?”
“ரம்யா டெலிவர் பண்ணிட்டா!”
குட்!”
“நோ குட் புரொஃபசர்! குழந்தை எடை 450 கிராம் தான்! அண்ட் அப்ப்பப பிரீத்திங் நின்னு நின்னு…!”
நிர்மலா கலங்கினாள்.
“நிர்மலா! யூ ஆர் ய டாக்டர்! இந்த மாதிரி எத்தனையோ பார்க்க வேண்டியிருக்கும்! லெட் மி கம்!”
வார்டுக்கு விறுவிறுவென நடந்தார்.
ரம்யா துவண்டு போய் படுத்திருக்க, குழந்தை புஸ் புஸ் என வயிற்றைத்துருத்தி காற்றை விட்டு விட்டு சுவாசித்தது.
“ரம்யா!”
அதட்டினார்.
“குழந்தையை மார்போட அணைச்சுக்கோ. அப்பப்ப மார்பை தடவிக்கொடு. நீவி விடு1”
கவலையுடன் தலை ஆட்டினாள்.
“ஒரு தரம் ரெண்டு தரம் இல்லை. ரா முழுக்க பண்ணணும்! பண்ணுவியா? குழந்த உயிரோடா வேணுமோனோ! எத்தன அழகா இருக்கா பாரு! டூ இட்! பாஸ்கர்! கூடவே இரு!கீப் டாக்கிங் டு ரம்யா!”
”பெரியவர் ஈஸ் வேஸ்டிங் டைம்! குழந்தை பொழைக்காது!”
மற்ற டாக்டர்கள் கிசுகிசுப்பாய் பேசின இரண்டு இரவுகள். சொட்டுசொட்டாகக்கரைந்த இரண்டு இரவுகள்.
மேடையில் லைட் அணைக்கப்பட்டு ஒலிபெருக்கி பேசியது.
“முதல் நிகழ்ச்சியாக நாங்கள் அளிக்கப்போவது பரத நாட்டியம். என்ன தவம் செய்தனை.. காபி ராகம் ஆதி தாளம்……
”தினக் தினக்” என மிருதங்கம் ஆரம்பிக்க தம்புராவின் இனிய ரீங்காரம் ஹ என்று பாடகி தொடங்க மேடையின் வலது புறத்திலிருந்து கால் சலங்கை சப்திக்க உருண்டை முகத்துடன் ஒன்றாம் வகுப்பு மானஸா பாஸ்கர் …………
”தட் 450 கிராம் பேபி? ஷி ஈஸ் பியூட்டிஃபுல்!”
சொன்ன சீஃப் கெஸ்டின் கால்களைக்குனிந்து தொட்டுக்கும்பிட்டாள் அம்மா ரம்யா பாஸ்கர்!
