
மஞ்சள் கொன்றை அது
வைத்த சீக்கிரத்தில் வளர்ந்து விட்டது
பூத்தலும் உதிர்தலுமே வேலையாகி விட
மெத்தை விரித்தாற் போல் பூக்கள்
அடி மறைத்துக் கிடக்கும்
பார்வைக்கு ரம்யமாய்…
கோலமிடச் செல்லும் போது
மிதந்து வந்து
சில சமயம் விரல்
சில சமயம் தோள்
சில சமயம் முதுகு தொட்டு
சிலிர்க்க வைக்கும்.
விடியல் ஆசிர்வதிக்கப்பட்டதாய் தோன்றும்
சில நாட்களாய் இனம் புரியா வெறுமை
இன்றுதான் கேட்க நேர்ந்தது
குப்பை சேர்வதால்
பெருக்கி அள்ள முடியவில்லையென
வெட்டி விட்டார்களாம்.
வெட்டப்பட்டு விழும்போது…
மனக்குப்பைகளை என்ன செய்வதாக
இருக்கிறீர்களென்று யோசித்திருக்குமோ
மரம்….

சிறப்பான கவிதை
வார்த்தைகள் மிகவும் சிந்திக்ககூடியதாகவும் ரசிக்கின்ற வகையிலும் உள்ளது
மிகவும் சிறப்பு
மஞ்சள் கொன்றை நிஜமாய் தீண்டிய உணர்வு – கவிதை வாசித்த நேரம்