பி. ஆர்.கிரிஜா/அக்கரைக்கு இக்கரை பச்சை

தினமும் பார்க்கும் காட்சிதான். ஆனாலும் மீனாவால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் பக்கத்து வீடு ஒரு தனி வீடு. அதில் தாய், மகன், மருமகள், பத்து வயது பேரன் இவர்கள் வசிக்கிறார்கள். அந்த மருமகள் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிகிறாள். தினமும் காலை அந்தப் பெண்ணும், அவள் மகனும், அந்தத் தனியார் பள்ளி வேனில் காலை எட்டு மணிக்கு பள்ளிக்குக் கிளம்பி விடுவார்கள். அதன் பிறகு அந்த மகன் தன் அம்மாவைக் கூட்டிக் கொண்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் செல்வான். இதை தினமும் பார்த்து ரசிப்பாள் மீனா. தனக்குக் கிடைக்காத ஒன்று அந்த பெண்மணிக்குக் கிடைக்கிறதே என்று தினமும் மகிழ்ச்சி அடைவாளே தவிர ஒரு நாளும் பொறாமைப் பட்டதே கிடையாது. அவளும் சாதாரண பெண் தானே.. சில நாட்கள் அதைப் பார்த்து ஏங்குவாள்
ஒரு நாள் அந்த மாமி கோவில் சென்று விட்டு திரும்பியவுடன் வாசலில் காய்கறி வண்டிக்காரரிடம் அவர் காய் வாங்கிக் கொண்டிருந்தார். மீனாவும் கீழே இறங்கி காய் வாங்க வந்தாள்.
” என்ன மீனா, பாத்து ரொம்ப நாள் ஆச்சு, வெளியே வரதே இல்லையா? ” புன்னகையுடன் கேட்ட மாமியைப் பார்த்து புன்னகைத்தாள். ” இல்ல மாமி, கால் வலி.. அதான் வெளியே வரதே இல்ல” என்றாள்.
” உன் பாடு தேவல மீனா, என்னப் பாரு… கூண்டுல அகப்பட்ட கிளி மாதிரி…. என் மகன் தனியா எங்கேயும் போக விட மாட்டான். எனக்கு எங்கேயாவது ஒரு வாரம் தனியா கோவில், குளம்னு போக ஆசை. ஆனா போக முடியாது. நான் தப்புப் பண்ணிட்டேன் மீனா, என் வீட்டை விற்று எல்லாப் பணத்தையும் இவனிடம் கொடுத்து விட்டு இப்போ இங்க அடிமை மாதிரி அடைபட்டுக்
கிடக்கேன்” என்று சொல்லி பெரு மூச்சு விட்டாள் .
மீனா அதிர்ச்சியில் பேச்சிழந்து அப்படியே நின்று விட்டாள்.