காலங்காலமாய்

சௌவி

ஓடும் நீர் முயற்சித்து முயற்சித்து
தோற்றுக்கொண்டேயிருக்கிறது
ஆற்றோரத்து மர நிழலை இழுத்துப்போக

காலங்காலமாய்த்
தளளிப்பார்த்துப் தள்ளிப்பார்த்துத்
தள்ளமுடியாமல்
மலையைக் கடந்து
தோல்விமுகத்தோடு ஓடுகிறது காற்று

கரையேற முடியாமல்
நெடுநாட்களாய்
ஓடி வந்து ஓடி வந்து
திரும்ப ஓடிவிடுகின்றன கடல் அலைகள்

யாரோ பௌர்ணமி நிலவை
தினம் தினம் கொஞ்சமென
வெட்டி எடுக்கிறார்கள்
யாரோ தினம் தினம்
கொஞ்சம் கொஞ்சமாய் ஒட்ட வைத்து
நிலவை பௌர்ணமியாக்குகிறார்கள்

தங்கள் மேல் காலங்காலமாய்
எச்சமிட்டுக்கொண்டேயிருக்கும் பறவைகளுக்கு
கூடு கட்ட இடம் கொடுத்துக்கொண்டேயிருக்கின்றன
கோபுரச்சிலைகள்

வானத்துக்கு
நீலநிறத்தையும் கருப்பு நிறத்தையும் தவிர
வேறு நிறத்தைப் பூசத்தெரியாதவன்தான்
அடிக்கடி வானவில்லைத் திருடிச்செல்பவனாக
இருக்கக்கூடும்

2 Comments on “காலங்காலமாய்”

Comments are closed.