கூடை

 

எஸ் வி வேணுகோபாலன் 

வேலூரில் தான் 

பார்த்தது 

பக்கத்துக் குடித்தனக்கார அம்மாள் 

பின்கட்டுப் பக்கம் 

தரையோடு புதைத்திருந்த 

பெரிய கல்லுரலில் போட்டு 

அரைத்தாளோ 

அரைத்தாளோ 

அப்படி அரைத்துக் கொண்டிருந்தாள் 

இட்லி தோசைக்கு அல்ல 

எந்த 

பலகாரத்திற்கும் அல்ல 

அருகே நெருங்க முடியாத 

நெடி 

என்ன தான் அரைத்துக் கொண்டிருக்கிறாள் 

அஞ்சல் அட்டைகள் 

பழைய நாளேடுகள் 

கையில் கிடைத்த 

நோட்டுப் புத்தகத் தாள்கள் 

ஏடுகள் 

என்னென்ன கைக்கு வாய்த்ததோ 

எல்லாம் போட்டு

இடித்துத் 

தண்ணீர் தெளித்துத் தெளித்து 

அரைத்தாளோ 

அரைத்தாளோ 

அப்படி அரைத்துக் கொண்டிருந்தாள் 

அம்மா தான் சொன்னாள் 

‘அவங்க ‘

காகிதக் கூடை 

செய்து கொண்டிருப்பதாக 

மையாக அரைத்துத் 

திரட்டிய சாந்துக் கலவையை 

கூடை வடிவத்திற்குத் 

தகவமைத்துக் காயவைத்து 

எரியாத பக்குவத்தில் 

வெம்மையூட்டி

கெட்டிப்படுத்தி 

வண்ணங்களும் கிடைக்கப்பெறும் 

கூடையைப் பின்னர் 

அங்கே 

ஒருபோதும் பார்த்த நினைவில்லை 

ஆனால், 

அடிக்கடி பார்ப்பதுண்டு 

மானசீகமான வேலைப்பாட்டில் 

செம்மையாக உருப்பெற்றிருக்கும் அது 

பரிமாறிக் கொண்ட கடிதங்கள் 

ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் 

பெற்றுக்கொண்ட

ஒன்பது வாழ்த்து அட்டைகள் 

அதன் மீதான 

எதிர்வினைகள் 

கவிதைகள் 

எல்லாம் உள்ளூர 

உள்ளத்தில் போட்டு

இடித்துக் 

கண்ணீர் உகுத்து 

மையாக அரைத்துத் திரட்டிய 

சாந்துக் கலவையால் ஆன  

அழகியதொரு காகிதக் கூடை 

எத்தனையோ பேர் 

பேச்சில் 

புன்னகையில் 

மறைக்க மாட்டாத 

அந்தக் கண்களில்

ததும்பும் துளிகளில்..

***********


7 Comments on “கூடை”

  1. அருமை. கவிதையில் சிறப்பாக எழுதுகிறார் எஸ். வி இதிலேயே இருந்து விட வேண்டாம். பல்கலை வித்தகர் தாங்கள். நன்றி🙏💕

  2. என் அம்மா பண்ணுவாள். அரிசி கழுவிய நீரில் பேப்பரை கிழித்து ஊற வைத்து, அரைத்து, குடத்தை குப்புற போட்டு,ஈரத்துணி போர்த்தி,அதன் மீது மருதாணி வைப்பது போல் பரப்பி, சோறு வடித்த கஞ்சியால் மேலே பாலீஷ் போட்டு, காய்ந்தவுடன் உரித்து எடுப்பாள். கேப்பை, சோளம் போட்டு வைப்பதுண்டு.

  3. வாழ்த்துக்கொரு
    நன்றி
    எதிர்வினைக்கொரு
    மறுவினை
    இறப்புச் செய்திக்கொரு
    இரங்கற்பா
    என
    வாய் ஓயாமல்
    கூவியிருக்கும்
    காகிதக் கூடை
    உயிர் மட்டும் இருந்திருந்தால்!

  4. கவிதை யாருக்கும் சாதாரணமாக வருவதில்லை…
    நிஜமான அனுபவங்கள் இருந்தால் மட்டுமே…
    உம் அனுபவங்கள்கூடை கூடையாய் இருப்பதால்…
    நெஞ்சு நிமிர்த்தி சொல்லுங்களேன் *நானும் கவிஞன் என்று…!!!*

  5. காகிதத்தில்
    காதலும் மோதலும்
    காவியமும் ஓவியமும்
    ஆட்சி செய்தவரால்லவா
    நாம்!

    கருத்து கூடையில்
    காகித கூடையை
    அள்ளி பொட்டு
    சொல்லி தந்ததில்
    பேரின்பம்!

Comments are closed.