ஷண்முக சுப்பையா/செல்லாக் காசு

பொல்லாப் பேர்வழி
எவனோ ஒருவன்
அப்பா தலையில்
அடித் தேற்பித்த
செல்லாக் காசை
“செல்லப் பயலே
செலவாக்கடா”
என்றெனக்குத் தந்தார்.
மிட்டாய் தின்ன
ஆசைப்பட்டு
காசை எடுத்து
கடைக்குச் சென்றேன்,
கடைக்காரன்
கெட்டிக்காரன்
காசை எடுத்துத்
தட்டிப் பார்த்து
கள்ளப் பயலே
மெள்ளப் போடா
அடுத்த கடைக்கு”
என்றென் தோளைத் தட்டி
தள்ளி விட்டான்.
கூனிக் குறுகி
வெளியே வந்தால்
சோனிப் பயலொருவன்
அஞ்சு பைசா
கெஞ்சிக் கேட்டான்.
அஞ்சென்ன
ஐயஞ்சு இருபத்தஞ்சு
இந்தா பிடி
என்றத் துட்டை
விட்டெறிந்துவிட்டு
வீட்டை நோக்கி
ஓட்டம் பிடித்தேன்.