
ஒரு ஏழை திடீரென்று செல்வந்தனாகி விட்டான். இதுவரை அவனை ஒரு பொருட்டாக மதிக்காத ஊர்க்காரர்கள் எல்லாம் அவனை விஷேசமாக நலம் விசாரிக்கத் தொடங்கினார்கள். “நீ நலம் தானே?” என்று யார் புதிதாக விசாரித்தாலும் “நான் போய்ச் சொல்கிறேன்” என்று மட்டுமே அவன் சொல்லி வந்தான்.
கேட்டவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் அவன் விளக்கினான். “அதாவது இதுவரை என்னைக் கண்டு கொள்ளாத நீங்கள் நான் இப்போது பணக்காரன் ஆனவுடன் விசாரிப்பதால் நீங்கள் நலம் விசாரிப்பது என்னையல்ல, என் பணப்பெட்டியை என்று நான் புரிந்து கொண்டேன். ஆகையால் வீட்டிற்குப் போனதும் முதல் வேலையாக பணப்பெட்டியைத் திறந்து “பெரிய தெரு ராமசாமி நலம் விசாரித்தார். மசூதித் தெரு ரஹ்மான் பாய் “நீ எப்படி இருக்கிறாய் என்று ஆவலுடன் கேட்டார்” என்று சொல்வேன். அதுவும் கேட்டுக் கொள்ளும்.” என்றான். அவர்கள் புதிதாகக் கொடுக்கிற மரியாதையை தனக்கு அல்ல, தன் பணப்பெட்டிக்கு என்கிற உண்மையை அவன் உணர்ந்து கொண்டான்.
