அதிரன்/சுவடுகள்

கடலை நோக்கிச்
சென்றிருந்த சில கால் தடங்களைக்
காண்கிறான்
அது
ஒரு ஆணின் அல்லது
பெண்ணினுடையதாக
இருக்கலாம்
அதன் ஒழுங்கற்ற வடிவம்
ஒரு அவசரத் தன்மையை
வெளிப்படுத்தியது.

சற்றுத் தொலைவில்
கரையை நோக்கிச் சென்றிருந்த
சில கால் தடங்களைக்
காண்கிறான்
அதன் ஆழமான பதிவு
ஒரு உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.

இன்று ஏனோ கடல்
மிக அமைதியாக
அலை பாய்ந்து கொண்டிருந்தது

கடலை வெகு நேரம் வெறித்துப்பார்த்துக்
கொண்டிருந்தவன்
தனது முடிவை
நாளைக்குத்
தள்ளி வைத்தான்.