எஸ். சண்முகம் கவிதை

கண்சிமிட்டியவர் யாரென்று ஞாபகமில்லை
ஆனால் நிரம்பியிருக்கும் பேருந்தில்தான்
பின்பக்கம் திரும்பி பயணச் சீட்டு எடுக்கையில்
நான்கு வரிசைக்கு பின்னிருந்தவர்தான்
அதைச் செய்திருக்கக் கூடும்

அல்லது சாலையில் சென்ற
இருசக்கர வாகனத்தில் பின்னிருக்கையில்
வீற்றிருந்தவர் ஹெல்மெட்டை சற்று விலக்கியயவராக
இருக்கலாம்
நெடுநாள் என்னுடன் பின்னிருக்கையில்
அமர்ந்திருந்தவரின் புருவங்கள் மின்னின

வீட்டு உபயோக பொருளொன்றை
வாங்கச் சென்ற பெரும் வணிகக் கடையில்
பார்த்த பொருட்களின் மிகை அணிவகுப்பில் உறைந்த
தருணத்தில்
எதிர் வரிசையில் நின்றிருந்தவரின்
திடீர் திரும்பலில் சம்பவித்ததாக எண்ணுகிறேன்

ஒருமணிநேர பேருந்தின் இருக்கையினூடே
முன்னிருந்து பின்விரைந்த காட்சி விரைவில்
கடக்காமல் பதிந்துவிட்ட சிமிட்டலின் வழியே
பேரேக்கத்தின் உயிரூட்டலுடன்
வீட்டின் கதவு திறந்தது

கனிந்த வயதெனினும்
அன்றாட சிமிட்டல்களின் சேகரத்திலுள்ள
ஒவ்வொன்றையும் நுகர்ந்து
கடந்தேன்.