
ஓய்வுநேரம் அல்லது விடுமுறை நாளில் காலார உலா வருவீர்களென
அடர்நிழல் பரப்பிக் காத்திருக்கிறது தோட்டம்.
நீங்கள் வந்தால்
போக்குக் காட்டுவதற்கெனவே சிறகசைக்காமல் இருக்கிறது
அந்த வண்ணத்துப்பூச்சி.
முழந்தாளிட்டு உங்கள் இணையிடம் தன்னை ஒப்புக் கொடுப்பீர்களென
ஈரம் உலராமல் இதழ்கள் உதிர்க்காமல் எத்தனை நாளாய்த் தவமிருக்கிறது தெரியுமா அந்த ரோஜா?
ஆற்றாமைக் கதைகளை
மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளை உள்வாங்கும் அந்தத் திண்டில்
அமரத் தோன்றவில்லையா?
அந்தப் பூவாளி உங்கள் கண்ணில்படவில்லையா?
ஒன்றையொன்று பின்னிப் படர்ந்திருக்கும் அந்தப் பசுங்கொடிகள்
எதையுமே கிளர்த்தவில்லையா?
பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்
துருப்பிடிக்காதபடி
பேரிரைச்சல் கேட்காதபடி
கொஞ்ச நாளைக்கு ஒருமுறை
பூட்ட, திறக்க முன்வரலாமே
நம் அன்புத் தோட்டத்தின் மீச்சிறு கதவை?
