போகன் சங்கர் பக்கம்

சாரு’ நான் அவுரங்கசீப் பேசுகிறேன் ‘நாவலுக்காக க்ராஸ்வேர்டு விருதை வென்று இருக்கிறார். இந்த விருதுக்குத் தகுதியான நாவல்தான் அது. அவர் விஷ்ணுபுரம் விருது பெற்றபோது அவர் குறித்து வந்த தொகை நூலில் நான் இந்த நாவல் குறித்துதான் எழுதினேன். அதன் வெற்றிக்குக் காரணம் பின் நவீனத்துவக் கூறுகளையும் சரித்திரத்தையும் இணைத்தது என்று நினைக்கிறேன். சல்மான் ருஷ்டியின் வெற்றி பெற்ற சில நாவல்களும் இந்த வகை தான். சாருவை தமிழகத்தில் அதிகம் வெறுக்கப்படும் எழுத்தாளர் என்று சொல்லலாம். பல நேரங்களில் அதற்காக அவர் முயலவும் செய்கிறார். ஜெயமோகனையும் அப்படிச் சொல்லலாம் என்றாலும் அவரை வெறுப்பவர்களுக்கு இணையாக நிறைய ஆராதகர்களும் இருக்கிறார்கள். இந்தக் கடைசி பத்து ஆண்டுகளில் அவர் மிகப்பெரிய சமூக அங்கீகாரத்தைப் பெற்று விட்டார். சாரு ஏறக்குறைய 50 ஆண்டுகளாக எழுதி வருகிறார். விஷ்ணுபுரம் விருதைத் தவிர அவருக்கு வேறு எந்த விருதும் அங்கீகாரமும் கிடைத்தது போல் எனக்கு நினைவு இல்லை. மற்ற எழுத்தாளர்கள் போன்று அவர் புத்தகக் கண்காட்சிகள், கல்லூரிகள் போன்றவற்றிற்கு பேசவும் அழைக்கப்படுவதில்லை. அவருடைய ஆராதகர் வட்டம் மிகச் சிறியது. அவர்களிலும் பலருக்கு அவர் எழுதுகிறவற்றின் உள் மடிப்புகள் புரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நம்முடைய மகத்தான பிரமைகளில் ஒன்று நாம் அறம் சார்ந்த சமூகம் ஒழுக்கம் சார்ந்த சமூகம் என்பது சாருவின் கதைகள் இந்த பிரமைகளின் தேன் கூட்டில் தொடர்ந்து கல் எறிகிறவை. நம்மைப் பற்றி நாம் இந்த பிம்பம் வைத்துக் கொள்ள முடியாமல் தொடர்ந்து எரிச்சல் மூட்டுகிறவை. உண்மையில் அவருக்கு கிராஸ்வேர்டு விருது கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. நாவலின் மொழிபெயர்ப்பாளர் நாவலை சில இடங்களில் எடிட் செய்து இருப்பதாக சொன்னார்கள். உண்மைதான். அவரின் பல கதைகளை நல்ல எடிட்டர் ஒருவர் சற்று பரவலான ஏற்புக்கு உடையதாக மாற்றிவிட முடியும். அதை சாரு விரும்புவாரா என்பது வேறு விஷயம். மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

( இந்தப் பதிவுக்காக என்னைத் தாக்க விரும்புகிறவர்கள் எனது ஆபீஸ் நேரம் முடிந்ததும் தாக்கவும் )