விருட்சம் நினைவுகள் 5

29.06.2018

ழகியசிங்கர்

            ஆத்மாநாம்  தற்கொலை அவருடைய நெருங்கிய நண்பர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.   கிட்டத்தட்ட ழ பத்திரிகையைத் திரும்பவும் கொண்டு வரும் மனநிலையில் அவர்கள் யாரும் அப்போது இல்லை.  

            பின் கொஞ்ச மாதங்கள் கழித்து ஆத்மாநாம் என்ற முதன்மை ஆசிரியர் இல்லாமல் ழ பத்திரிகை தொடர்ந்து வருவதாக ஓர் அறிவிப்புடன் திரும்பவும் ழ பத்திரிகை வெளிவந்தது.    இந்த முறை ஞானக்கூத்தன்தான் பத்திரிகையின் ஆசிரியர். மலர்த்தும்பி என்ற பத்திரிகைக்குப் பின், ஆத்மாநாமின் ழ பத்திரிகைக்கும் ஒரு சிறிய பொறுப்பை ஏற்கும்படி இருந்தது.

            அப் பத்திரிகையைக் கொண்டுவர உதவும்படி நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள்.  நான் அப்போது வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  ழவின் பெயரில் இல்லாமல், தனியாக ஒரு கணக்கு ஆரம்பித்து, ழ பத்திரிகை வர ஒவ்வொருவரும் தரும் பணத்தைச்   சேமித்து வைத்தேன்.

            ழ என்ற பத்திரிகையின் 25வது இதழ் நவம்பர் 1986ஆம் ஆண்டு வெளிவந்தது.  அந்த இதழில் வெளிவந்த தலையங்கத்தை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

            “மனித சரித்திரத்தில் எந்த ஒரு வெளிப்பாட்டுச் சாதனமும் கலையுருவமும் சராசரி மனித வாழ்வின் எல்லைகளை மீறி ஒரு ஆக்கப்     பூர்வமான மனத்தின் ஆழ்ந்த உள் அவசியத்தின் காரணமாகப் பிறந்தாலும், காலப் போக்கில் பொது மக்களின் கைப்பழக்கத்திற்குப் போய்ச் சேர்ந்தபிறகு சராசரி வாழ்வின் தளத்திற்கு வீழ்ச்சியுறுவது தவிர்க்க முடியாதது.  வானொலி, தொலைக்காட்சி, சினிமா, நாடகம் போன்றே கவிதையும் இன்று உன்னதமிழந்த நிலையில் கீழ்த்தளப் பிரக்ஞைக்கு இன்னுமொரு வடிகாலாய்ப் போயிருக்கிறது.  அதனால் நல்ல கவிதைகள் எழுதப்படவில்லை, வெளிவருவதில்லை என்பதல்ல உண்மை.  எப்போதும் போலவே சிறுபத்திரிக்கைகளை நம்பியே கவிதை இப்போதும் இருக்கிறது.  நல்ல தமிழ்க்கவிதையை அதற்குரிய முக்கியத்துவத்துடன் வெளியிடும் சிறு பத்திரிகை இன்று இல்லை என்று சொல்லிவிடலாம்.

            மே 1978 தொடங்கி ஜனவரி 1983 வரையில் ‘ழ’ 24 இதழ்கள் வெளிவந்திருக்கின்றன.  மொத்தம் 63 கவிஞர்களின் பல கவிதைகள் இந்த இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.  இதில் முப்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் தம் கவிதைகளை முதன் முறையாக üழý இதழில் தான் பிரசுரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இது தவிர 16 கட்டுரைகளும் 15க்கும் மேற்பட்டவர்கள் மொழி பெயர்த்த பல அயல் மொழிக் கவிதைகளும் வெளிவந்திருக்கின்றன.

            மேலே ழவின் ஒரு பகுதி தலையங்கத்தை வெளியிட்டுள்ளேன்.  அந்த இதழில் ஆத்மாநாமை நினைவு படுத்துகிற மாதரி ஆர் ராஜகோபாலன் கவிதை எழுதி உள்ளார்.

            6  ஜøலை 1984 என்ற தலைப்பில் ஆர் ராஜகோபாலன் ஒரு கவிதை எழுதி உள்ளார்.  ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்ட 6 ஜøலை 1984ஆம் ஆண்டு.  அக் கவிதையை இங்கு வாசிக்க அளிக்கிறேன்.

            1

            ஈரமான பச்சைப் புல்வெளியில்

            மனம் சிந்தும் பெரியதான மலர்களும்

            உடல் சிலிர்த்துப் பறந்து செல்லும் பறவைக் கூட்டமும்

            இலேசாய் வெம்மை காட்டும் சிவப்புச் சூரியனும்;

            ஆங்காங்கே பெருகி ஓடும் தண்ணீரும்

            சோம்பலுடனே கடல் செல்லும் எருமை ஒன்றும்

            என்னை ஒருகணம் ஈர்த்துவிட்டன

            சட்டென நினைவு செய்தியாய் மனதில் படிய

            பெருமழை பெய்து ஓய்ந்து விட்டதென்று

            2

            வாழ்க்கையை எதிர்கொள்ள

            கடுமை ரொம்பவும் தேவையாயிருக்கிறது

            மனதைச் சுருக்கிக் கொண்டு

            காற்றை அதிகம் வெளியேவிடாமல்

            அந்தத் தேக்கு போலவேதான்

            வடுக்களைத் தாங்கிக்கொண்டு

            கதவாக அப்புறம் படிகளாக

            முதலில் மரமாகப் பின் வாசலாக

            ஆனால் மலருக்கு மென்மை அதிகம்

            இன்றே இற்றுப்போய் விழுந்து விடுகின்றது

            இருந்தும் அதற்கென்று ஓர்

            அனாதியான அழகும்

            அற்புதமான வாசனையும்

            3. 

            இந்த உலகத்தோடு ஈடுகொடுக்க முடியவில்லை

            முழங்கால்களைக் கட்டிக்கொண்டு

            கைகளைக் கன்னத்தில் கோர்த்து

            ஜன்னல் வழியே பரந்த

            வானத்தை வெறித்தபோதும்

            உலகம் சலிப்படையச் செய்கிறது

            வெளிச்சம் தரும் குழல்விளக்கும்

            விளக்கை நாடிச்செல்லும் விட்டில் பூச்சியும்

            பூச்சிக்காய் காத்திருக்கும் பெரிய பல்லியும்

            உலகம் வேண்டவே வேண்டாம்

            இன்று செருப்பில் விரல் நுழைக்கும் சிறு குழந்தை

            நாளைத் தட்டுத்தடுமாறி கோல் கொள்ளும் கிழவன்

            உலகத்தை நான் தள்ளிவிடுகிறேன்

            கூட்டம் கூட்டமாய் வண்ண வண்ண மலர்கள்

            புயலில் அடியோடு சாய்ந்து கிடக்கும் வாழைத் தோப்புகள்

            எப்படியும் காலை புலரும்போது

            அமைதியாய் பறந்து செல்லம் கருடன்

            ஆர்ப்பரிக்கும் கடல்

            ஒளிசிந்தும் நட்சத்திரம்

            நான் ஒரு கருடனாக

            நான் ஒரு கடலாக

            நான் ஒரு நட்சத்திரமாக

            அந்த இதழில் ஆர் ராஜகோபலன் கவிதை உருக்கமாக இருந்தது.  ஆத்மாநாம் நினைவாகத்தான் அந்தக் கவிதை எழுதப்பட்டிருந்தது.  அந்த இதழ் ழ பத்திரிகை என் முயற்சியால் தி நகரில் உள்ள நரேந்திரா அச்சகம் மூலம் அடிக்கப்பட்டது.  அதை அச்சடித்துத் தந்தவர் என் வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருப்பவர். 

            இந்த ‘ழ’ பத்திரிகை தொடர்ந்து வந்திருந்தால் நான் விருட்சம் என்ற பெயரில் உள்ள என் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தி இருக்க மாட்டேன்.  விதி வேறு பக்கத்தில் நகரத் தொடங்கி விட்டது.

                                                                                                                                                                          (இன்னும் வரும்)

2 Comments on “விருட்சம் நினைவுகள் 5”

  1. எதிர்பாராத இழப்புகளில் போது ஒரு வெற்றிடம் தோன்றும். அந்த கையறு நிலை கவிதைகளில் வெளிப்படுகிறது.

  2. ‘ழ’ தமிழ்க் கவிதை வரலாற்றின் முக்கியமான மைல் கல். அதில் உங்கள் பங்கு இதுவரை அறியாத ஒன்று. இதெல்லாம் ஆவணப் படுத்தப் பட வேண்டும். ராஜகோபாலன் அவர்களின் கவிதை ஆத்மாநாமை அவர் எவ்வளவு மிஸ் செயகிறார் என்பதை மென்மையாய் சொன்ன ஒன்று.

Comments are closed.