கனவு இல்லம்

அதங்கோடு அனிஷ்குமார்


அவர் விரல் சுட்டும்
இடத்தில் தான்
அவரின்
கனவு இல்லம் இருந்தது.

கட்டில்களின்
கிரீச்சொலியும்
உடல்களின் கதகதப்பும்
ஒத்திசையும் ஓசைகள்
அறைக்குள்
அலையும் அற்புதம்
நினைவில் நிற்கிறது.

பிறந்த குழந்தையின்
முதல் அழுகை
இப்போதும்
அவருக்கு கேட்கிறது.

பிஞ்சுகளின் கிறுக்கல்கள்
கவிதைகளாய்
கண்களில் நிற்கின்றன.

அடுக்களை தாண்டும்
சமையல் வாசம்
இன்றும்
மனதில் நிறைகிறது.

வந்து போன உறவுகள்
வந்து வந்து
போகிறார்கள்.

இடித்து தரைமட்டமாக்கப்பட்ட
வீட்டிலிருந்து
இன்னும் வெளியேறமுடியாதபடி
தவிக்கும் மனதில்
பதிந்து கிடக்கும்
காலடிச்சுவடுகளில்
இயந்திரங்களின்
பூட்ஸ் தடங்கள்
அழியாமலிருக்கின்றன.

நிம்மதியையும்
நிரந்தர முகவரியையும்
மொத்தமாய்
காவு வாங்கின
நிவாரணங்கள்.

அவர் வீடிருந்த இடத்தில்
பெரும் ஓலமிட்டபடி
விரைகின்றன
வாகனக்கூட்டங்கள்.

அவர் விரல் சுட்டும்
இடத்தில் தான்
அவரின்
கனவு இல்லம் இருந்தது.

இன்னும்
அவர் கனவில்
அவரின் கனவு இல்லம்
நெடு நெடுவென
வளர்கிறது.


3 Comments on “கனவு இல்லம்”

Comments are closed.