மஹேஷ்

பயணம் செய்யும் கிழவரின் கையில்
துணியினை மீறும் நடிகையின் கால்கள்
அடர்ந்த இரவின் ஈரச்சாலையின்
காரொளி கடக்கும் மஞ்சள் கோடு
வாகனம் விரட்டும் டிரைவரின்
மனதினைத் தீண்டும்
காய்ச்சல் தீரா மகனின் வெப்பம்
மஞ்சள் காயா வளையல் கன்னத்தில்
நேற்றைய இரவின் நாணத்தின் மிச்சம்..
மடியில் பைவைத்த முன்வரிசைப்
பெண்முகத்தில் காற்று கவரும்
கண்ணீர்த்துளிகள்
நினைவுகள் உறையும் அந்தக் கணங்களில்
காதை வருடும் பனியும் காற்றும்
ஒரு பழைய பாடலும்
எதிரில் நகரும் மரங்கள் மலைகளுடன்
அவரவர் மனதின் அதனதன் சுமையில்
நீளும் நேரமாய் இன்னொரு பயணம்..

“அவரவர் மனதின் அதனதன் சுமையில்//நீளும் நேரமாய் இன்னொரு பயணம்..”
— அழகான வரிகள். சிறப்பான கவிதை!
ஆம். அவரவர் மனதின் சுமைதான் அவரவர் பயணம்….அருமை.