
சுரேஷ் ராஜகோபால்
தஞ்சையில், தென்னங்குடி பக்கத்தில் இருக்கும் சின்ன கிராமம், அதில் ஒரு சின்ன வீடு,அதில், பாலு, அதான் அந்த முதியவர் வசித்து வந்தார். மிக எளிமையானவர், ஒரு காலத்தில் பக்கத்தில் உள்ள பண்ணையில் வேலை செய்து வந்தவர்.
அவருடைய மனைவி அவள் பெண்ணோடு பூனாவுக்குப் போய் பெண்ணோடு தங்கி விட்டாள். ஒரு பையன் அம்பத்தூரில் மனைவி குழந்தைகளுடன் வசிக்கிறான். அப்பப்ப எதோ ஒரு தொகை “மணி ஆர்டரில்” வரும். அந்த கிராமத்தில் ஏதாவது சின்ன சின்ன வேலை கிடைக்கும். அது அவர் சாப்பாட்டுக்குப் போதுமானதாக இருந்தது வேறு எந்த வருமானமும் கிடையாது. பாக்கறதுக்கு சுமார் எழுபது வயசிருக்கும். அவருக்கு நிறைய எதிர்பார்ப்பு கிடையாது.
யாரிடமும் அதிகம் பேச மாட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களாகவே எதாவது உதவுவார்கள், ஏதாவது பேசுவார்கள். நறுக்குத் தெறித்த மாதிரி இவர் பதில் சொல்லுவார்.
தலைமுடி கலைந்திருக்கும் எப்பவும் வாரவே மாட்டாரோ.?. மீசை தாடியும் அது பாட்டுக்கு வளர்ந்திருக்கும். ஒரு அரைக்கால்சட்டை, ஒரு துண்டு, இரண்டுமே .ரொம்பப் பழசு, தோய்க்கக் கூட மாட்டாரோ, தெரியலை.அது தான் பெரியவருடைய சொத்து.
#
எங்கோ பிறந்த பூனைக்குட்டி இவரிடம் தஞ்சம் அடைந்தது. அது முதல் பெரியவரின் பாசக்காரப் பிள்ளையாச்சு.
பெரியவர் தான் வளர்க்கும் பூனைக்குட்டியைச் செல்லமாக வளர்த்து வந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பெரியவரின் இந்த பூனைப் பாசத்தை அதிசயமாகப் பார்த்து வந்தனர்.
எதிர் வீட்டு கிட்டு ஒருநாள் பால் கொஞ்சம் ஒரு தட்டில் கொண்டு வந்து கொடுத்தான், பெரியவர் அந்தப் பூனைக்குட்டியைச் சாப்பிட அனுமதித்தார். கிட்டு பூனை அருகே வந்து தூக்கிக் கொள்ளப் பார்த்தான், உடனே பெரியவர் வெடுக்கெனப் பிடுங்கி தன்னோடு அணைத்துக் கொண்டார்..
சில குழந்தைகள் ஓடி வந்து பூனைக்குட்டியோடு விளையாட முனைந்தன. பூனையை அவர்களிடம் காட்டி காட்டி விளையாடினாரே தவிர அவர்களிடம் கொடுக்க வில்லை.
சில நாட்களாக அந்த தெருவில் இந்த பூனைக்குட்டி பற்றியும், பெரியவரின் அதன் மேல் அவரின் பாசத்தைப் பற்றியுமே பேச்சாக இருந்தது..
எதைப்பற்றியும் பெரியவர் கவலைப் படவே மாட்டார்.
ஒரு நாள் பக்கத்து வீட்டுச் செல்லாயி “அந்த குட்டிய எங்கிட்ட சித்த கொடு அண்ணே, சோறூட்டிட்டு உன்கிட்டயே கொடுத்திடுறேன்” :
தலையை முடியாது என்பது போல ஆட்டி விட்டு நகர்ந்தார்..
#
ஒரு நாள் நல்ல சுடுதண்ணி ஒரு வாளி நிறைய வச்சுக்கிட்டு ஒரு கையில் பூனையை வைத்துக் கொண்டு இருந்தார். பூனை “மியாவ் மியாவ்” எனச் சத்தம் போட்டபடி இருந்தது. பக்கத்திலிருந்த வளியிலிருந்து வந்து சுடு தண்ணீர் ஆவி அதன் மேல் பட்டதால்.
பொருக்கும் சூட்டில் சுடு தண்ணீரை விளாவி பூனை மேலே மெதுவாக ஊற்றினார்.
பக்கத்து வீட்டுச் செல்லாயி “அண்ணே பூனையைக் குளிக்க வைக்காதே, செத்து கித்து போயிடப் போவுது”.
அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அடுத்த டப்பா நீர் எடுத்து ஊற்றினார்.
செல்லாயி தன் தலையில் தட்டிக் கொண்டு நடந்து போனாள்.
#
திரும்பி வரும் போது செல்லாயிக்கு அதிர்ச்சியாக இருந்தது. பூனை செத்து மல்லாக்கக் கிடந்தது. பெரியவர் தலையில் கைவைத்துக் குந்தி பக்கத்திலே உட்கார்ந்திருந்தார்.
“அண்ணே, அண்ணே, அப்பவே சொன்னேனே பூனையைக் குளிக்க வைத்தால் செத்துடும்னு, நீ தான் கேக்கல, இப்ப பாரு…”
பெரியவர் “குளிக்கும் போது சாவலை, எடுத்து தண்ணீ போக பிழியும் போது தான் செத்துப்போச்சு!!!

நகைச்சுவை கதை
கடைசியில் கதையில்
டுவிஸ்ட். அருமை